ஐயா,
பிறந்தநாள் வாழ்த்துகள்..!
சராசரி இந்தியனின் வாழ்நாளை விட அதிகம் வாழ்ந்து சாதனை படைக்கும் தாங்கள், மேலும்
பல்லாண்டு வாழ்ந்து மக்கள் பணியாற்ற வேண்டும் என்று உளமாற விரும்புகிறேன்.
தமிழகத்தின் மிகவும்
பேசப்படும் நபர் நீங்கள்தான். உங்கள் வாழ்க்கை முழுதும் ஏராளமான வாழ்த்துகளையும்,
தூற்றுதல்களையும் சந்தித்தே வந்திருக்கிறீர்கள். அரசியல்துறையில்
இயங்குபவர்களுக்கு இதெல்லாம் புதிதல்ல! தமிழகத்தில் தந்தை பெரியாருக்குப்பின்
நீண்ட காலம் வாழ்ந்து சாதனை படைக்கும் தங்களிடம் நான் பகிர்ந்து கொள்ள சில அம்சங்கள்
இருப்பதாக கருதுகிறேன்.
தமிழர்களின் சமூக வளர்ச்சியில்
திராவிட இயக்கத்தின் பங்களிப்பை யாரும் மறைத்துவிட முடியாது. தமிழர்களின்
பாரம்பரிய இயல்புகளான சமத்துவம், ஆதிக்க எதிர்ப்பு உணர்வு ஆகிய குணங்களை அரசியல்
கொள்கையாக வகுத்தெடுத்த திராவிட இயக்கத்தின் தற்போதைய கொள்கை சார்ந்த நிலை
குறித்து திமுகவின் இளைஞர்களுக்கே தெரியுமா என்ற ஐயம் தோன்றியுள்ளது.
திமுகவின் கொள்கைகள்...
(1) அண்ணா வழியில் அயராது உழைப்போம்,
(2) ஆதிக்கமற்ற சமுதாயம்
அமைத்தே தீருவோம்,
(3) இந்தித் திணிப்பை
என்றும் எதிர்ப்போம்,
(4) மத்தியில் கூட்டாட்சி –
மாநிலத்தில் சுயாட்சி,
(5) வன்முறை தவிர்த்து வறுமை
ஒழிப்போம்!
...ஆகிய ஐந்து மணி வாக்கியங்களாக
தொகுக்கப்பட்டுள்ளன. ஆனால் திமுகவின் கொள்கைச் சுருக்கமாக கருதப்படும் இந்த
மணிவாக்கியங்கள் குறித்து இன்றைய திமுகவினருக்கு எந்த அளவிற்கு தெரியும் என்பது
கேள்விக்குறியே!
நான் சிறுவனாக இருந்தபோது
மேற்கண்ட மணிவாசகங்களை படித்தவன் என்ற முறையில், தங்கள் தற்போதைய பல நிலைப்பாடுகள்
திமுகவின் அடிப்படை நோக்கங்களுக்கே எதிராக இருப்பதாக தோன்றுகிறது. குறிப்பாக உலகமய பொருளாதார சூழலே திமுகவின்
கொள்கைகளுக்கு பெருமளவில் எதிரானது. தனியார் மயமாதலை துவக்கத்தில் விமர்சித்து
வந்து திமுக, தற்போது தனியார் மயமாக்கலை தீவிரமாக ஆதரிப்பது என்னைப் போன்ற அரசியல்
மாணவர்களுக்கு மிகவும் வியப்பான விடயமாகும்.
இந்த உலகமயமாதல்
கலாசாரத்தில் மூழ்கிவிட்ட திமுகவும், அதன் தலைவரான தாங்களும் தமிழர் கலாசாரத்தை,
பண்பாட்டை சமரசம் செய்து கொள்ள தயாராகி விட்டீர்கள் என்பது புலனாகிறது. உதாரணமாக
தாங்கள் ஆட்சியிலிருந்தபோது உருவாக்கிய புதிய தலைமைச் செயலக கட்டிடத்திற்கும்,
தமிழர் கட்டிடக்கலைக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை தங்களாலும் மறுக்க இயலாது.
தமிழினம் உள்ளிட்ட அனைத்து
புராதன மனித இனங்களும் இயற்கை மீதும், சூழல் மீதும் அளப்பரிய அக்கறை கொண்டவை. குறிப்பாக
தமிழர்களோ இப்பூவுலகை குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்று ஐந்திணைகளாக
பிரித்து இலக்கணம் வகுத்தவர்கள். தமிழில் இயற்கையை போற்றிப்பாடாத இலக்கியங்களே
இல்லை என்றும் கூறலாம். இதன் சிறந்த உதாரணமாக திருக்குறளைக் கூறலாம். “நீரின்றி
அமையாது உலகு எனின் யார் யார்க்கும் வானின்றி அமையாது ஒழுக்கு” என்று பாடிய
திருவள்ளுவருக்கே ஒரு ஏரியைத் தூர்த்து அதில் வள்ளுவர் கோட்டம் கட்டிய
பெருமைக்குரியது கழக அரசு. மேலும் திமுக ஆட்சியில் உருவான பல வளர்ச்சித்
திட்டங்கள் சூழல் குறித்த தொலைநோக்கு பார்வை இல்லாமல்தான் தீட்டப்பட்டன. இப்படித்தான் மதுரையின் உயர்நீதிமன்றக் கிளை,
மதுரையின் மாட்டுத்தாவணி பேருந்து நிலையம், சென்னையின் டைடல் பார்க், பறக்கும்
ரயில் வழித்தடங்கள், ரயில் நிலையங்கள்,
பல ஊர்களின் பேருந்து நிலையங்கள் ஆகிய அனைத்தும் நீர்நிலைகளை
ஆக்கிரமித்து கட்டப்பட்டன.
காவிரி நதிநீர் விவகாரத்தில்
உரிய அக்கறை காட்டாமல் சுயநல அரசியல் செய்ததோடு, தமிழகத்தின் பல்வேறு
நீர்நிலைகளையும் பாதுகாக்கத்தவறியவர் என்ற அவப்பெயர் உங்களுக்கு இருப்பது,
உங்களுக்கு தெரியுமா என்று தெரியவில்லை. இதன் காரணமாகவே தமிழக விவசாயிகள்
நீருக்காக கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்களை நம்பி இருக்க வேண்டிய அவல நிலை
ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
தமிழகத்தில் இப்படி என்றால்,
இந்திய அளவில் சுற்றுச்சூழல் அமைச்சகத்தை கைப்பற்றி லஞ்சம் மற்றும் ஊழல் மூலம்
நாட்டின் ஒட்டு மொத்த சூழலை சீர்கெடுத்ததிலும் உங்கள் கட்சிக்கு மிகப்பெரும் பங்கு
இருப்பதாக “டெஹல்கா” ஏடு குற்றம் சாட்டியுள்ளது. இதுமட்டுமல்ல, தங்கள் புதல்வியான
கனிமொழி அவர்களும்கூட, தமக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைக்கும்பட்சத்தில்
சுற்றுச்சூழல்துறை கிடைத்தால் நல்லது என்று ஆர்வம் காட்டியதாக “நீரா ராடியா” டேப்
விவகாரத்தில் கிசுகிசுக்கப்பட்டது.
இதேபோன்று தற்கால உதாரணமாக
அணுஉலை குறித்த திமுகவின் பொதுவான நிலைப்பாட்டை எடுத்துக் கொள்வோம். இந்த
விவகாரத்திலும் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி அவர்களின் கன்னிப்பேச்சு அணுஉலை
தொழில்நுட்பத்தை ஆதரிப்பதாகவே இருந்தது.
அணுஉலை தொழில் நுட்பம்
என்பது அடிப்படையில் அரசியல் சார்ந்த ஒரு அறிவியல் தொழில் நுட்பம். அதிலும்
குறிப்பாக ஆதிக்க அரசியலின் ஆயுதமாக அணுஉலை தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது
என்பதே கசப்பான உண்மை.
சூழலியல் ஆர்வலர்கள்
வலியுறுத்தும் நீடித்த ஆற்றல் மூலங்களான சூரிய ஒளி, காற்று, தண்ணீர் உள்ளிட்டவை
மூலம் மின்சாரத்தை உருவாக்க மத்திய அரசையோ, பன்னாட்டு நிறுவனங்களையோ நிரந்தரமாக
நம்பியிருக்கத் தேவையில்லை. எனவே ஒரு
மாநிலம் சுயச்சார்புடன் விளங்க விரும்பினால் அது தேர்ந்தெடுக்க வேண்டியது, நீடித்த
ஆற்றல் மூலங்கள் மூலமான மின்சாரத்தைத்தான். அணுசக்தியை அல்ல!
அணுசக்தி தொழில்நுட்பம்
என்பதே ஒரு அடிமைப்படுத்தும் ஆதிக்க மனோபாவ தொழில்நுட்பம்தான். இந்த தொழில்நுட்பம் மூலமாக இந்தியா போன்ற
நாடுகளை அடிமைப்படுத்த அமெரிக்கா, பிரான்ஸ், ரஷ்யா போன்ற நாடுகள்
விரும்புகின்றன. இதேபோல் மாநில அரசுகளை
தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள மத்திய அரசு விரும்புகிறது. மக்களின்
இறையாண்மை மீது நம்பிக்கை கொண்ட எவரொருவரும் வணிக முகமூடி அணிந்து கொண்டு வரும்
இந்த ஆதிக்க செயல்பாட்டை வரவேற்க முடியாது. குறிப்பாக தேசிய இனங்களின் இறையாண்மை
மீது அக்கறை கொண்டிருக்க வேண்டிய திமுக, இந்த ஒரு காரணத்துக்காகவே
அணுஉலை தொழில்நுட்பத்தை எதிர்த்திருக்க வேண்டும்.
ஆனால் பல்வேறு
காரணங்களுக்காக மத்திய அரசில் அங்கம் வகித்து அதிகாரத்திலும், இன்ன பிற
அம்சங்களிலும் பங்கு பெற விரும்பிய திமுக, தமிழர்களின் இறையாண்மை என்பதை
மறந்துவிட்டு மத்திய அரசுக்கு மண்டியிடும் அமைப்பாக மாறிவிட்டது.
அரசியல் ரீதியாக பலமுனைத்
தாக்குதலுக்கு ஆளாகி நிற்கும் நீங்கள் தேர்தல் அரசியலை உங்கள் வாரிசுகளிடம்
ஒப்படைத்துவிட்டு, தமிழ்ச்சமூகம் சார்ந்த சமூக அரசியலில் ஈடுபடுவதே தங்கள் மீதான
பல அவப்பெயர்களையும் நீக்கும். தேர்தல் அரசியலில் பங்கேற்காமலே இந்தியாவின் சமூக
நீதி சரித்திரத்தில் நிரந்தர இடம் பெற்ற தந்தைப் பெரியாரைப்போல நீங்களும் செயல்பட
வேண்டிய காலம் வந்துவிட்டது. அப்போதுதான் ஈழத்தமிழர்கள் பிரசினை முதல் இங்குள்ள
தமிழர்கள் பிரசினைவரை உங்கள் கருத்துக்கு அனைத்துத் தமிழ் மக்களின் ஆதரவு
கிடைக்கும்.
இதனை நீங்கள் அணுஉலை
விவகாரத்திலிருந்தே துவங்கலாம். தமிழ்நாட்டில் யார் ஆட்சிக்கு வந்தாலும், அவர்கள்
மின்சார ஒதுக்கீட்டுக்காக மத்திய அரசை நம்பி இருக்காமல் சுயச்சார்புடன்
இருப்பதற்கு வழி செய்யும் வகையில் இயற்கை ஆற்றல் மூலங்கள் மூலமான மின் உற்பத்தி
நிலையங்களை தொடங்குவதற்கு நீங்கள் போராட வேண்டும். ஏனெனில் இவை மட்டுமே ஆபத்தற்ற,
நீடித்த, சுயச்சார்பான மின் உற்பத்திக்கு வழிவகுக்கும்.
மாநில உரிமைகளை
பாதுகாப்பதுதான் திமுகவின் முக்கிய கொள்கை என்பதில் தங்களுக்கு மாற்றுக்கருத்து
இருக்க வாய்ப்பில்லை. அதுதான் பெரியாரும், அண்ணாவும் காட்டிய வழி. அணுஉலையை எந்த
காரணத்துக்காக ஆதரித்தாலும் அது திமுகவின் கொள்கைக்கு எதிரானது மட்டுமல்ல:
பெரியாருக்கும், அண்ணாவுக்கும் செய்யும் துரோகமும்கூட!
எனவே வாழ்வின் மிகமுக்கியமான
காலக்கட்டத்தில் இருக்கும் தாங்கள் தமிழ்ச்சமூகத்தின் நிகழ்காலத்தையும் -
எதிர்காலத்தையும் பாதுகாப்பதற்காக, அணுஉலைக்கு எதிரான நிலைப்பாட்டை மேற்கொள்ள வேண்டும்.
கூடங்குளத்தில் உருவாகி வரும் அணுஉலையை உடனடியாக மூடுவதற்கு நீங்கள் போராட
வேண்டும். இந்த அணுஉலைக்கான அறிவிப்பு வெளிவந்த நாளிலிருந்தே அப்பகுதி மக்கள்
அணுஉலைக்கு எதிராக போராடி வருவதை நீங்கள் அறிவீர்கள். எனினும் இத்தனை ஆயிரம் கோடி
ரூபாய் செலவழித்த பின் அதை மூடுவது சாத்தியமா? என்ற கேள்வி உங்களுக்கு
இருக்கலாம். அதற்கான மாற்று வழிகளை அணுஉலை எதிர்ப்பாளர்களான நாங்கள்
கூறுகிறோம்.
அமெரிக்காவின் நியூயார்க்
நகரம் அருகே ஷோர்ஹாம் என்ற இடத்தில் அணுமின் நிலையம் கட்டுவதற்காத
திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் 1973 முதல்
1984ம் ஆண்டுவரை நடந்தது. இந்நிலையில் 1979ம் ஆண்டில் மூன்று மைல் தீவில் இயங்கி
வந்த அணுஉலையில் ஏற்பட்ட விபத்தைத் தொடர்ந்து ஷோர்ஹாம் அணுஉலைக்கு எதிராக அப்பகுதி
மக்கள் போராடத் தொடங்கினர். எனவே ஷோர்ஹாம் அணுஉலையை இயக்குவது நிறுத்தி
வைக்கப்பட்டது. இந்நிலையில் 1986ம் ஆண்டில் ரஷ்யாவின் செர்னோபில் அணுஉலையில்
ஏற்பட்ட விபத்தை அடுத்து ஷோர்ஹாம் அணுஉலைக்கு எதிரான போராட்டம் மேலும்
வலுப்பெற்றது. இதைத் தொடர்ந்து அப்பகுதி மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும்
வகையில் அந்த அணுஉலைத் திட்டம் நிரந்தரமாக நிறுத்தி வைக்கப்படுவதாக அதிகாரபூர்வமாக
அறிவிக்கப்பட்டது. எனினும் அதே இடத்தில் எரிவாயு மூலமாகவும், காற்றாலைகள்
மூலமாகவும் மின் உற்பத்தி துவங்கப்பட்டது. அணுஉலைகளை அகற்றும் பணியும் தொடங்கியது.
இது ஒரு உதாரணம்தான். இது போல பல உதாரணங்களைக் கூறலாம். இதே உதாரணத்தை
கூடங்குளத்திலும் பின்பற்றலாம். கூடங்குளத்தில் அணுஉலை அமைப்பதற்குத்தான்
எதிர்ப்பு இருக்கிறதே தவிர, அப்பகுதியில் காற்றாலை, சூரிய சக்தி உள்ளிட்ட ஆற்றல்
மூலங்கள் மூலம் மின்சாரம் தயாரிப்பதற்கும், அவற்றை முறையாக சேமித்து
பயன்படுத்தவும் கூடங்குளத்தில் மின்நிலையம் அமைப்பதற்கும் யாரும் எதிர்ப்பு
தெரிவிக்கப் போவதில்லை.
எனவே இந்தியாவின் முதிர்ந்த
அரசியல் தலைவரான நீங்கள் கூடங்குளம் அணுஉலையை நிரந்தரமாக மூடுவதற்கு குரல்
கொடுப்பதன்மூலம், தமிழ்நாட்டின் சுயச்சார்புக்கும் வழி வகுக்கலாம். இதன் மூலம்
ஆதிக்கமற்ற சமுதாயத்திற்கான வழி வகுக்கலாம்: மத்தியில் கூட்டாட்சி – மாநிலத்தில்
சுயாட்சி என்பதே திமுகவின் ஆதாரக் கொள்கை என்பதை உறுதி செய்யலாம்.
இதை பின்பற்றி பன்னாட்டு
நிறுவனங்களின் பிடியிலிருந்து தமிழ் விவசாயிகளை விடுதலை செய்யும் விதமாக இயற்கை
வேளாண்மையையும் ஆதரித்து தமிழினத்தின் இறையாண்மையை மீட்டெடுக்க வேண்டும் என்றும்
நான் வலியுறுத்துகிறேன்.
ஏனெனில் ஒப்பீட்டளவில்
இந்திய மாநிலங்களில் தமிழகம் பல்வேறு துறைகளில் முன்னணியில் இருந்தாலும்,
தமிழ்நாட்டில் வேளாண்துறை பல காலமாக புறக்கணிக்கப்பட்டே வந்துள்ளது. கேரளா போன்ற
அண்டை மாநிலங்களில் விவசாயம் செய்யக்கூடிய நிலங்களை வேறு பயன்பாட்டிற்கு மாற்றுவதை
தடைசெய்யும் சட்டம் நடைமுறையில் உள்ளது. ஆனால் தமிழ்நாட்டிலோ வேளாண் நிலங்களை
பல்வேறு பயன்பாட்டுக்காக மாற்றி அந்நிலங்களை சீரழிக்கும் பணியில் அரசுத்துறைகளே
முன்னின்று செயல்படுகின்றன. இந்த திருப்பணியை ஆரம்பித்து வைத்ததே தாங்கள்தான் என்ற
விமரிசனமும் உள்ளது. இந்த அவப்பெயரை நீக்கவும், இயற்கை வேளாண்மையை முன்மொழிந்து
நீங்கள் களமிறங்க வேண்டிய மிகமுக்கிய தருணம் இது!
நீங்கள் இதையெல்லாம்
செய்தால்தான் நீங்கள் உண்மையான தமிழினத் தலைவராக ஏற்கப்படுவீர்கள்.
வரலாற்றில் உங்கள் பெயர்
எவ்வாறு பதிவு செய்யப்படவேண்டும் என்பதை தீர்மானிக்கும் மிகமுக்கியமான
காலகட்டத்தில் நாம் இருக்கிறோம். சுயநலத்திற்கும், குடும்ப பாசத்திற்கும் ஆட்பட்ட
மிகச்சாதாரண அரசியல்வாதியாகவா? அல்லது தமிழ்ச்சமூகத்தின் எதிர்காலம் மீது அக்கறை கொண்ட ஒரு அசாதாரண
மக்கள் தலைவராகவா ? உங்கள் பெயர் வரலாற்றில் எவ்வாறு பதிவு
செய்யப்படவேண்டும் என்பது நீங்கள் எடுக்கும் முடிவுகளில்தான் இருக்கிறது.
நல்லதொரு முடிவை
எடுப்பீர்கள் என்று நம்புகிறேன்.
மிக்க அன்புடன்,
சுந்தரராஜன்
1 கருத்து:
அருமையான மடல் .... செவிக்கு எட்ட முயற்சி செய்வோம்....
கருத்துரையிடுக