28 ஜூன், 2013

மன/ணம் ஒரு குரங்கு
மழை வரும்போல வானம் மேகமூட்டத்துடன் இருந்த அந்த மாலைப் பொழுதில் அவர்கள் இருவரும் என் அலுவலகத்திற்கு வந்தனர். இருவருக்கும் 30 வயதிற்குள் இருக்கும். அவர்களின் உடையும், மற்ற பாவனைகளும் அவர்களின் பொருளாதார நிலையை உணர்த்தின. இருவரும் கம்ப்யூட்டர் மென்பொருள் துறையில் பணியாற்றுகின்றனர். என் அலுவலகம் அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்பது அவர்களின் பார்வையில் வெளிப்படையாகவே தெரிந்தது. அவர்கள் வந்த நோக்கம் எனக்கு ஏற்கனவே நண்பர் ஒருவரால் தெரிவிக்கப்பட்டிருந்தது. எனவே அறையின் கதவை சாத்தினேன்.

கணவர் நேரடியாக விஷயத்திற்கு வந்தார். “ஸார்! நண்பர் சொல்லியிருப்பார் என நினைக்கிறேன். எனக்கும் என் மனைவிக்கும் டைவர்ஸ் வேணும்! மியூச்சுவல் கான்சென்ட்.  என்னென்ன டாகுமென்ட்ஸ் வேணும்? எப்போ ஃபைல் பண்ணமுடியும்? எப்போ ஃபைனல் ஆர்டர் கிடைக்கும்?

மனைவியும் குறுகுறுவென்று என்னைப் பார்த்தார்.

நான் என் வழக்கம்போல் அவர்களின் கேள்விகளுக்கு உடனடியாக பதில் சொல்லாமல் அவர்களின் சொந்த ஊர், படிப்பு, வேலை என்று அவர்களின் கவனத்தை திசை திருப்பினேன். இருவருமே நடுத்தரமான அதாவது சிறிய நகரம் அல்லது பெரிய கிராமம் என்று சொல்லக்கூடிய ஊர்களைச் சேர்ந்தவர்களாக இருந்தனர். இருவருமே முதல் அல்லது இரண்டாம் தலைமுறை பட்டதாரிகளாக இருந்தனர். மனைவி பொறியியல் பட்டம் பெற்றிருந்தார். கணவர் முதுநிலை அறிவியல் படித்துவிட்டு மென்துறையில் ஒரு பொறுப்பான பதவியில் இருந்தார். இரண்டு வயதில் குழந்தையும் இருக்கிறதாக கூறினார்கள்.

அவர்கள் பிரிய விரும்புவதற்கான காரணத்தைக் கேட்டேன்.

“ஒத்துவரலை ஸார்! – இருவரும் கூறினார்கள். “மியூச்சுவல் கான்சென்ட் டைவர்ஸூக்கு காரணம் சொல்ல வேண்டிய அவசியமில்லன்னு சொன்னாங்களே!!”  - இது மனைவி.

“அப்படி சொன்னது யார்? அவங்களிடமே போய் டைவர்ஸ் வாங்கியிருக்கலாமே!

“ஸாரி ஸார்!

மேற்கொண்டு நடந்த உரையாடலில் கணவருக்கு புகை, மது போன்ற எந்த பழக்கமும் இல்லை என்பதை மனைவியே லேசான பெருமையோடு கூறினார். அவர்களுக்கு இடையில் இன்றைய தொழில்ரீதியான நெருக்கடி வழங்கும் கம்யூனிகேஷன் இடைவெளி இருப்பதை உணர முடிந்தது. இருவருக்குள்ளும் லேசான ஈகோ இருந்ததை அவர்களே வெளிப்படையாக ஒப்புக் கொண்டனர்.  இடையே கணவருக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. என் அலுவலகம் தரைகீழ்தளத்தில் (அண்டர்கிரவுண்டில்) இருப்பதால் செல்போன் சிக்னல் கிடைப்பதில் சிக்கல் இருக்கும். எனவே கணவரை அலுவலகத்திற்கு வெளியே சென்று பேசுமாறு கூறினேன். கூடவே தெரு முனையில் இருக்கும் காபி ஷாப்பிற்கு சென்று ஒரு காபி அருந்திவிட்டு கால்மணி நேரம் கழித்து வருமாறு கூறினேன். புரிந்து கொண்டவராக சிரித்துக்கொண்டே கிளம்பினார்.

மனைவியிடம் தனியாக பேசினேன். மனம் விட்டு பேச ஆரம்பித்தார். தன் குறைகளை முழுமையாக புரிந்து கொண்டிருந்தார். அதற்கு பணிரீதியான அழுத்தமே காரணம் என்று காரணமும் கூறினார். குழந்தையை முழுமையாக கவனிக்கமுடியாமல் பெற்றோரின் கவனிப்பில் அவன் வளர்வதைக் கூறும்போது லேசாக கண் கலங்கியது. கணவனோடு “குவாலிட்டி டைம் செலவழிக்க முடியவில்லை என்பதையும் குற்ற உணர்ச்சியோடு ஒப்புக்கொண்டார். இதையெல்லாம் புரிந்து கொண்டாலும் கணவர் கொஞ்சம்கூட அட்ஜஸ்ட் செய்வதில்லை என்று புகாரும் கூறினார்.  கணவர் தவறானவர் இல்லை என்றாலும் புரிந்துணர்வுடன் கூடிய வாழ்க்கைக்கு அவர் முயற்சிப்பதே இல்லை, தன் கருத்தை மற்றவர்களிடம் திணிப்பதிலேயே கணவர் முக்கிய கவனம் செலுத்துவதாகவும் கூறினார். எனவேதான் இருவரும் பேசி டைவர்ஸ் முடிவெடுத்ததாக கூறினார். அதில் உறுதியாக இருப்பதாகவும், விரைவில் ஃபைனல் டைவர்ஸ் ஆர்டரை வாங்கிக் கொடுத்துவிடும்படியாகவும் அதற்கான ஃபீஸை கொடுக்கத்தயாராக இருப்பதாகவும் உறுதி அளித்தார்.

பாதி வேலை முடிந்த நிலையில், என் தொலைபேசிக்கு அழைப்பே வராத நிலையில் – அழைப்பு வந்ததுபோல் பாவனை காட்டிக்கொண்டே அலுவலத்திலிருந்து வெளியேறி சாலையில் கணவரை மடக்கினேன்.

கணவரும் மனைவி மீது கடுமையான குற்றச்சாட்டுகள் எதையும் சொல்லவில்லை. உண்மையில் மனைவி மீது காதலும், மரியாதையும் வைத்திருப்பதாக தோன்றியது. ஆனால் தான் சொல்லும் அனைத்தையும் கணவன் உடனே கேட்க வேண்டும் என்று அவர் எதிர்பார்ப்பதாக கணவர் தெரிவித்தார். மேலும் தன்னை மதிக்கும் அளவுக்கு, தன் பெற்றோர்களையோ, உறவினர்களையோ மனைவி மதிப்பதில்லை என்ற குறையும் கணவனுக்கு இருந்தது. கிராமப்புறத்தில் விவசாயக்குடும்பத்தில் பிறந்த தன்னை படிக்க வைத்து ஆளாக்கிய பெற்றோரையும், உறவினர்களையும் மனைவி மதிப்பதில்லை என்பதில் கணவர் மிகவும் வருத்த்ததில் இருப்பது புரிந்தது. அந்த வருத்தம் கோபமாகி, மனைவி தரப்பினரை தாம் சிலமுறை அவமரியாதை செய்ததையும் அவராகவே ஒப்புக் கொண்டார். தன் குடும்பத்தினரை மதிக்கத் தயாராக இல்லாத மனைவி தனக்கு தேவையில்லை என்று அவர் முடிவு எடுத்திருந்தார். “மனைவி படித்து வேலைக்கு செல்வதால் அவருக்கு மெயின்டனன்ஸ் தரவேண்டிதில்லை அல்லவா என்று முன்னெச்சரிக்கையோடு கேட்டுக்கொண்டார். இந்த டைவர்ஸ் மனைவிக்கு மட்டுமேயான தண்டனை என்று கருதியவராக, அந்த தண்டனைக்கு தன் மனைவி மிகவும் தகுதியானவர்  என்றும் அவர் கருதுவதாகவும் தோன்றியது. குழந்தைக்கு தேவையான செலவினங்களை தாம் ஏற்றுக்கொள்ள தயாராக இருப்பதாகவும், மனைவி கோருவது போல் குழந்தை அவரிடம் இருப்பதில் தமக்கு மறுப்பில்லை என்றும் கூறினார். ஆனால் குழந்தையை தாம் விரும்பும் நேரத்தில் பார்ப்பதற்கு அனுமதி நீதிமன்றம் மூலம் வாங்கித்தரவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். இதற்காக எனக்கு சிறப்பு சேவைக் கட்டணம் செலுத்த தயாராக இருப்பதாகவும் கூறினார்.

அலுவலகம் வந்தோம். இருவரிடமும் சில கேள்விகளை கேட்டேன். முக்கியமான கேள்வி: “டைவர்ஸ் வாங்கிய பின் இருவரும் வேறு திருமணம் செய்து கொள்ள போகிறீர்களா?

ஒத்த குரலில் மறுத்தார்கள். அவர்களுக்கு டைவர்ஸ் வாங்கித் தருவதில் எனக்கு எந்த சிக்கலுமில்லை என்பதை தெளிவாக கூறினேன். அதற்கான நடைமுறைகளை மேலோட்டமாக தெரிவித்தேன். அதனை தொடர்ந்து செய்ய வேண்டிய சில சட்ட நடைமுறைகளை கூறினேன். கவனமாக கேட்டுக் கொண்டனர். இருவருமே சில ஐயங்களை கேட்டு தெளிவடைந்தனர். பின்னர் நான் சில கேள்விகளை கேட்டேன்.

அவர்கள் இருவரின் பெற்றோரும் சென்னையில் இல்லை. நல்லது. டைவர்ஸ் ஃபைல் செய்தபின் எங்கே வசிப்பீர்கள்? (அன்றைய தினம்வரை இருவரும் அவர்களது தனிக்குடித்தன வீட்டில் ஒன்றாகத்தான் வாழ்ந்தனர்) ஒர்க்கிங் வுமன் ஹாஸ்டலுக்கு செல்லவிருப்பதாக மனைவி தெரிவித்தார். கணவருக்கு தெளிவான திட்டமில்லை.

சிலபல குடும்பநல வழக்குகளை நடத்தியவன் என்ற முறையிலும், ஏராளமான வழக்குகளை வேடிக்கை பார்த்தவன் என்ற முறையிலும் அவர்களிடம் பொதுவாக சில அம்சங்களை விவாதிக்க ஆரம்பித்தேன். டைவர்ஸ் என்பது உளவியல் ரீதியாக சம்பந்தப்பட்டவர்களிடமும், அவர்களின் சுற்றத்தினரிடமும் ஏற்படுத்தும் மாற்றங்கள் குறித்து விவாதித்தேன். அது எவ்வாறு ஒட்டுமொத்த குடும்பத்தை பாதிக்கும் என்பதையும், குழந்தைகளை அது எவ்வாறு பாதிக்கும் என்பதையும் குறிப்பிட்டேன். ஆனால் மிகவும் நினைவுத்திறனுடன், இது போன்ற காரணங்களுக்காக பொருந்தாத வாழ்க்கைத்துணையுடன் தொடர்ந்து வாழ வேண்டிய அவசியமில்லை என்பதையும் வலியுறுத்தினேன். ஒரு கைம்பெண்ணை மரியாதையுடன் நடத்தும் சமூகம், மணவிலக்கு பெற்ற பெண்ணையும் அதே மரியாதையுடன் நடத்தும் பக்குவத்தை இன்னும் முழுமையாக பெறவில்லை என்பதையும் கோடி காட்டினேன்.

எனினும் அவர்களுக்கு டைவர்ஸ் பெற்றுத்தருவதில் எனக்கு தொழில்ரீதியாகவோ, அறவியல் அடிப்படையிலோ எந்த தயக்கமும், மறுப்பும் இல்லை என்பதை மிகத்தெளிவாக கூறினேன். அதற்கு அவர்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்களின் பட்டியலை எழுதிக் கொடுத்தேன். என் ஃபீஸ் விவரத்தையும் கூறினேன். அவர்கள் எதிர்பார்த்ததைவிட நான் கூறிய ஃபீஸ் மிகவும் குறைவாகவே இருந்திருக்க வேண்டும் போலிருக்கிறது. நிம்மதியான ஒரு பார்வை தெரிந்தது.
ஃபைனல் டச்சாக மீண்டும் ஒருமுறை மனித மனம் குறித்த என் பார்வைகளை கூறினேன். மனிதன் ஒரு சமூக விலங்கு என்றும், தனிமை என்பது நாம் நினைப்பதுபோல சுலபமான நிலை இல்லை என்பதையும் அவர்களுக்கு புரிய வைத்தேன். இல்லறத்தில் இணைவதால் கணவனோ, மனைவியோ நாம் நினைப்பதுபோல முழுவதுமாக மாறமுடியாது என்பதையும், ஆனால் புரிந்துகொண்டு வாழ்வதுதான் வாழ்க்கை என்பதையும் அவர்களுக்கு புரிய வைக்க முயற்சித்தேன்.

இவை அனைத்தையும் முழுமையாக புரிந்துகொண்டு அவர்கள் டைவர்ஸ் செய்வதில் எனக்கு எந்த மாற்றுக்கருத்தும் இல்லை என்பதை மறுபடியும் உறுதி செய்தேன்.

நான் பட்டியலிட்ட ஆவணங்களை தயார் செய்துகொண்டு உரிய கட்டணத்துடன் அணுகினால் மிகவிரைவில் அவர்கள் டைவர்ஸ் கேஸை பதிவு செய்யமுடியும் என்று கூறி அனுப்பி வைத்தேன்.

+++

இது அனைத்தையும் அருகே அமர்ந்து அமைதியாக பார்த்துக் கொண்டிருந்த வழக்கறிஞர் நண்பர் கொலைவெறியுடன் என்னைப் பார்த்தார். “வாழ்க்கையில் நீயெல்லாம் உருப்படவே போவதில்லை! என்ற சாபம் அவர் கண்களில் வெளிப்படையாக தெரிந்தது.

அந்த தம்பதி அலுவலகத்திற்கு வருவதற்கு சற்று முன் அந்த நண்பரிடம் என் பொருளாதார சிக்கல்களை கூறி புலம்பிக்கொண்டிருந்தேன்.
+++

அந்த தம்பதியை என்னிடம் அனுப்பி வைத்த பத்திரிகை நண்பர் தொலைபேசியில் வந்தார். அந்த தம்பதியினர் தன்னிடம் பேசியதாகவும், அவர் விரும்பிய மாற்றம் நிகழ்ந்திருப்பதாகவும் மகிழ்ச்சியோடு தெரிவித்தார்.

குறுக்கிட்ட நான், அவர்களுக்கு டைவர்ஸ் வாங்கித்தருவதற்கு நான் பேசிய ஃபீஸில் 10% தொகையை, அவர்களுக்கு உளவியல் ரீதியாக கவுன்சலிங் செய்து அவர்கள் மனதை மாற்றியதற்காக வாங்கிக் கொடுக்கும்படி கேட்டுக் கொண்டேன். நண்பர் மையமாக சிரித்தார். (இந்த மையமாக சிரிப்பது என்பதன் பொருள் எனக்கு நீண்ட நாட்களாகவே  விளங்கவில்லை)

இப்போது அந்த பத்திரிகை நண்பரின் தொலைபேசி எனது தொலைபேசி எண்ணை மட்டும் தவிர்த்து வருகிறது.

3 கருத்துகள்:

SJ சொன்னது…

gud one.

பெயரில்லா சொன்னது…

Nice

Unknown சொன்னது…

Vanakkam Thozhar.,
Muthalil ungalukku Vazhthukal..
Apuram Advocates methaan yeanathu meatha ulah nampikai saakamal iruka seithaatharku..

கருத்துரையிடுக