02 நவம்பர், 2013

சுப. உதயகுமார் நெய்த தகராறு

கூடங்குளம் அணுஉலைக்கு எதிராக போராடி வரும் சுப. உதயகுமார் அவர்களை கடந்த 2006-07ம் ஆண்டிலிருந்தே தெரியும். இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்திற்கு ஆதரவு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றம் சார்பில் நடத்தப்பட்ட கருத்தரங்கிற்கு மாற்றாக அந்த ஒப்பந்தத்தையும், மொத்தமாக அணுஉலைகளையும் எதிர்த்து ஒரு கருத்தரங்கு நடத்தினோம். அதில் அணுவியல் அறிஞர் எம்.வி.ரமணா அவர்களும், சுப. உதயகுமார் அவர்களும் கலந்து கொண்டு உரையாற்றினர். 

அணுத்தொழில் நுட்பத்தில் உள்ள பல முரண்பாடுகளையும் அதன் பாதுகாப்பற்ற தன்மையையும் எம்.வி. ரமணா பேச, அணுஉலைகளுக்குப் பின் உள்ள வணிக அரசியல் மற்றும் அரசியல் வணிகம் குறித்து சுப. உதயகுமார் பேசினார். அவர் சாதாரணமாக பேசும்போதே அவருடைய மொழி ஆளுமை என்னை வியக்க வைத்தது.

இதைத் தொடர்ந்து சுப. உதயகுமார் என் நண்பர்கள் பட்டியலில் இணைந்தார். அவர் சென்னை வரும்போது சந்திப்பது வழக்கமானது. அவ்வாறான ஒரு சந்திப்பில் அவர் மொழிபெயர்த்த “தகராறு – கடந்து சென்றிடும் வழிவகையும், மாற்றியமைத்திடும் நெறிமுறையும்” என்ற புத்தகத்தை எனக்கு அளித்தார். இந்தப் புத்தகத்தை தவணை முறையில் சிலமுறை படித்திருக்கிறேன். அண்மையில் சென்னையிலிருந்து கோவைக்கு துரந்தோ ரயிலில் வரும்போது முழுமையாக மீண்டும் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

நாம் இருக்கும் நிலையிலிருந்து, விரும்பும் நிலைக்கு செல்ல மேற்கொள்ளும் முயற்சிகளும், பயணங்களுமே வாழ்க்கையாகிறது. இந்த முயற்சிகளிலும், பயணங்களிலும் நம்மோடு உடன் பயணிக்கும் சக பயணிகளுக்கும், நமக்கும் இடையே ஏற்படும் நெருடல்களே தகராறு(Conflict)களாக உருவாகின்றன. கணவன்-மனைவி உறவு முதல், இரு நாடுகளுக்கு இடையேயான உறவு வரை தகராறுகள் தோன்றுகின்றன. இதில் வெற்றி-தோல்வி என்ற எளிமையான அளவுகோல்களை மட்டுமே கடைபிடிப்பதால் ஏற்படும் இழப்புகள் அதிகம். எனவே இதைத் தவிர்த்து யாருக்கும் அதிக பாதிப்பின்றி தகராறை கடந்து செல்வது குறித்தும், சூழ்நிலையை மாற்றியமைப்பது குறித்தும் பேராசிரியர் யொஹான் கால்டுங் (Johan Galtung) சிந்திக்கிறார். இதை அவரது மாணவர் சுப. உதயகுமார் தமிழில் மொழி பெயர்த்திருக்கிறார்.

பல்வேறு நாடுகளில், பல்வேறு சமூகங்களில் ஏற்பட்ட தகராறுகள் குறித்தும், அச்சூழலை மாற்றியமைத்து  தகராறை கடந்து செல்லும் முறை குறித்தும் இந்த நூல் பேசுகிறது. இடையிடையே பல்முகத்தன்மை கொண்ட ஒரு பிரசினையை எளிமையாக கூறும் நோக்கில் ஊடகங்கள் திசை திருப்பியோ, அரைகுறையாகவோ கூறுவது உட்பட பல பிரசினைகள் கூறப்படுகின்றன. தனிநபர் பிரசினைகளும் அவ்வபோது வந்து செல்கின்றன.

தனி மனித ஈகோ, மதம், அரசியல் கோட்பாடுகள், ஆதிக்க சிந்தனை, உலகமயப் பொருளாதாரம் போன்று தகராறுகளை உற்பத்தி செய்யும் அனைத்துக் காரணிகளும் ரத்தினச் சுருக்கமாக அலசப்படுகின்றன. உளவியல், சமூகவியல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் நாம் சந்திக்காத புதிய கோணங்களில் விவாதிக்கப்படுகின்றன. 

தகராறு மேலாண்மை குறித்து தமிழ் இலக்கியங்களில் விரிவாக விவாதிக்கப்படவில்லை என்று கூறும் மொழிபெயர்ப்பாளர் நூலின் கடைசி அத்தியாயத்தில் திருவள்ளுவரோடு ஒரு விவாதத்தில் ஈடுபடுகிறார். மொழி பெயர்ப்பாளர் எழுப்பும் பல கேள்விகளுக்கு திருக்குறளே பதிலாக அமைகிறது.

தமிழ் உள்ளிட்ட மொழிகள் வளர்வது என்பது கவிதை போன்ற இலக்கியங்களால் மட்டுமே சாத்தியமாகாது. இதுபோன்ற அறிவுத்துறைகளை ஏற்கும் மொழி மட்டுமே காலத்தின் ஓட்டத்தில் பிழைத்து நிற்பதோடு, வளரவும் இயலும். இவ்வகையில் தமிழில் ஒரு புதிய அம்சம் குறித்த நூலை அளித்திருக்கிறார் சுப. உதயகுமார். இதை டிரான்சென்ட் செளத் ஏசியா என்ற அமைப்பு கடந்த 2007ம் ஆண்டில் வெளியிட்டது. வழக்கம் போல தமிழர்கள் இதன் முக்கியத்துவம் உணராமல் இந்த நூலை புறக்கணித்தனர். தமிழ்நாடு அரசின் பொது நூலகத்துறையும் இந்நூலை புறக்கணித்தது.

ஆனால் எந்நாளும் பயன்படும் இந்த நூலை தற்போது விகடன் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. விலை ரூ.85/-

தற்போது மத்திய, மாநில அரசுகளோடு தகராறு செய்வதாகக் கூறப்படும் சுப. உதயகுமாரின் உண்மையான உள்ள விழைவு இந்த புத்தகத்தின் வாயிலாக வெளிப்படுகிறது.

புத்தகத்தில் சில சிறு குறைகளும் இல்லாமல் இல்லை. பல நாடுகளின் நாடாளுமன்றத்தை பாராளுமன்றம் என்ற சொல்லால் மொழிபெயர்ப்பாளர் குறிப்பிடுகிறார். 'பார்' என்றால் உலகம் என்ற பொருளைக் கொண்டால் உண்மையான பாராளுமன்றம் உலக வங்கியாகத்தான் இருக்கும். இதைத்தவிர நாடுகளை ஆளும் அமைப்புகள் நாடாளுமன்றமாகத்தான் இருக்கும். இதேபோல இந்து மகாசமுத்திரம் போன்ற சொற்களுக்கு பதிலாக இந்தியப் பெருங்கடல் என்ற சொல்லை பயன்படுத்தி இருக்கலாம். எனினும் இச்சிறு குறைகள் வாசிப்பை தடுக்கவில்லை என்பதே உண்மை.


இதுபோன்ற புத்தகங்களுக்கு வாசகர்கள் தரும் ஆதரவுதான் இதுபோன்ற பல புதிய துறை சார்ந்த புத்தகங்களை தமிழ் உலகிற்கு கொண்டுவரும்.