31 டிசம்பர், 2013

நம்மாழ்வார் – ஒரு நண்பரின் நினைவலைகள்...

திருச்சியில் ஒரு நாளிதழில் செய்தியாளனாக பணியாற்றிக் கொண்டிருந்த காலம்... செயின்ட் ஜோஸப் கல்லூரியில் “உலக வர்த்தகக் கழகமும், இந்தியாவில் அதன் விளைவுகளும்” என்ற கருத்தரங்கின் துவக்க விழாவுக்கு செய்தி சேகரிக்க சென்றிருந்தேன்.  மிகவும் சடங்குத்தனமாக இருந்தது அந்த நிகழ்ச்சி. அங்கு எனக்கு வழங்கப்பட்டிருந்த செய்திக்குறிப்போடு முழு நிகழ்ச்சி நிரலும் இருந்தது. அதில் நம்மாழ்வார், “உலக வர்த்தகக் கழகமும், இந்திய வேளாண்மையும்” என்ற தலைப்பில் பேசுவதாக குறிப்பிடப்பட்டிருந்தது. நம்மாழ்வாரைப் பற்றி ஏற்கனவே ஓரளவு அறிந்திருந்தேன். உலக வர்த்தகக்கழகம் இந்தியா போன்ற நாடுகளிடம் என்ன விளைவை ஏற்படுத்தும் என்பதையும் “சரணாகதிப் பொருளாதாரம்” போன்ற மொழிபெயர்ப்பு நூல்கள் மூலம் ஓரளவு அறிந்திருந்தேன்.எனவே நம்மாழ்வாரின் உரையை கேட்டு அனுபவித்து அதை செய்தியாக்கி நான் பணியாற்றிய நாளிதழில் வெளியிடவும் செய்தேன்.

சென்னையில் தொலைகாட்சிப்பணியில் இருந்த ஐந்து வருட காலமும் அவருடன் தொடர்பு கொள்ளும் வாய்ப்பு கிடைக்கவில்லை. அந்தப்பணியிலிருந்து வெளியேறி வழக்கறிஞராக பயிற்சி செய்யத்துவங்கிய புதிதில் “மனித உரிமை – சுற்றுச்சூழல் நீதிக்கான வழக்கறிஞர் மையம்” என்ற பெயரில் செயல்பட முயற்சி செய்தோம். அப்போது நண்பர் “தோழமை” தேவநேயனுடன் இணைந்து 2007ம் ஆண்டு ஜனவரியில் பொங்கல் விழாவை புதுமையாக கொண்டாட முயற்சி செய்தோம்.

வேளாண்மையில் மரபணு மாற்றம் குறித்த விவாதம் தொடங்கிய நேரம் அது. எனவே “மரபணு மாற்ற வேளாண்மை விவசாயிகளுக்கு நன்மை செய்கிறதா? – வணிக நிறுவனங்களுக்கு நன்மை செய்கிறதா?” என்ற விவாத அரங்கத்தை நடத்த திட்டமிட்டோம்.  விகடன் குழுமத்தில் பணியாற்றிய நண்பர் அறிவழகன் உதவியுடன் நம்மாழ்வார், அரச்சலூர் செல்வம், நல்லா கவுண்டர், மேலும் சில நவீன விவசாய அறிஞர்கள் பங்கேற்புடன் அந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்திய விவசாயிகளின் வாழ்க்கையை சூறையாடும் பன்னாட்டு நிறுவனங்களையும், அதற்கு துணைபோகும் இந்திய அரசையும் இந்திய தண்டனை சட்டத்தின் எந்தெந்த பிரிவுகளின் கீழ் வழக்குத் தொடுக்க முடியும் என்று நம்மாழ்வார் பட்டியலிட்டது இன்றும் என் நினைவில் நிற்கிறது. இந்த நிகழ்ச்சி பசுமை விகடன் இதழின் முதல் இதழில் சிறப்புக் கட்டுரையாகவும் வெளிவந்தது.

இந்த நிகழ்ச்சியின் மூலம் நம்மாழ்வாரின் தொடர்பு மீண்டும் கிடைத்தது. சில சந்திப்புகளிலேயே வயது வித்தியாசத்தை மீறி அவர் என் நண்பரானார். மரபணு மாற்றுத் தொழில்நுட்பத்திற்கு எதிரான தொடர் நடவடிக்கைகளில் எங்களையும் பங்கேற்கச் செய்தார். வணிகர் சங்கத் தலைவர் த. வெள்ளையன், மறைந்த மருத்துவர் செ. நெ. தெய்வநாயகம் உள்ளிட்ட பல்வேறு சான்றோர்கள் மற்றும் அமைப்புகள் இணைந்து உருவாக்கிய “பாதுகாப்பான உணவுக்கான கூட்டமைப்”பில் நம்மாழ்வாரும் இடம் பெற்றார்.

இந்நிலையில் மரபணு மாற்றுத் தொழில்நுட்பத்தை வேளாண்மையில் பயன்படுத்துவதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடந்த அமைப்பினர், அவ்வழக்கு குறித்து சென்னையில் உள்ள வழக்கறிஞர்களுக்கு ஒரு நிகழ்ச்சி நடத்த விரும்பினர். அதை நடத்தும் பொறுப்பு எம்மிடம் வந்தது.

இதற்காக உயர்நீதிமன்றம் எதிரே உள்ள ஒய். எம். சி. ஏ. அரங்கை அணுகியபோது காவல்துறையினரிடம் தடையில்லா சான்றிதழ் வாங்கிவந்தால் மட்டுமே அரங்கு கிடைக்கும் என்று தெரிவித்தனர். காவல்துறையினரிடம் கைகட்டி அனுமதி கேட்க தொழில்ரீதியான சுயமரியாதை இடம் தராததால், உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவரின் தலைமையில் அந்த நிகழ்வை நடத்த திட்டமிட்டோம். சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தலைவராக இருந்த திரு. மோகனகிருஷ்ணன் உதவியுடன் நீதிபதி ஒருவரை சந்தித்து எங்கள் நிகழ்ச்சியில் பங்கேற்க அழைப்பு விடுத்தோம். அந்த நீதிபதியும் உடனடியாக ஒப்புக் கொண்டார். அந்த நிகழ்ச்சியில் நம்மாழ்வாரும் பங்கேற்கிறார் என்பதை தெரிந்து கொண்ட நீதிபதியின் முகத்தில் மகிழ்ச்சி தெரிந்தது. அந்த நீதிபதி எங்களிடம் ஒரு கோரிக்கை விடுத்தார். நம்மாழ்வார் பேசுவதை நீதிபதி கேட்க விரும்புவதால், நம்மாழ்வார் பேசியபின்னர் தாம் பேசுவதற்கு அனுமதிக்க வேண்டும் என்றார். சமூகத்தில் மிக உயர்ந்த அந்தஸ்தில் இருக்கும் உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவரே நம்மாழ்வாரின் மீது மதிப்பு கொண்டிருப்பது எங்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. இப்படியாக அந்த நிகழ்ச்சி நாங்கள் மறக்க முடியாத ஒரு இன்ப அனுபவமாக மாறியது.

இதன் பின்னர் பெங்களூரு தேசிய சட்ட பல்கலைக்கழகம், ஹைதராபாத் நல்சார் சட்டப்பல்கலைக்கழகம் போன்ற இடங்களில் நடந்த வேளாண்மை தொழில்நுட்பம் சார்ந்த சட்டக் கருத்தரங்குகளில் அவரோடு பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. கருத்தரங்குகளில் நிபுணர்கள் உரையாடலின்போது கிடைக்கும் தகவல்களைவிட அதிக தகவல்கள் நம்மாழ்வாரிடம்தான் எங்களுக்கு கிடைத்தது. 

திருவனந்தபுரத்தில் தணல் அமைப்பு நடத்திய அரிசித் திருவிழாவிற்கும் எங்களை நம்மாழ்வார் அழைத்துச் சென்றார். தமிழக அரசியல்வாதிகள் நம்மாழ்வாருக்கு தரும் மரியாதையைவிட மிக அதிக மரியாதையை கேரள அரசியல்வாதிகளும், சமூக ஆர்வலர்களும் தருவதை நேரில் பார்க்க முடிந்தது. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அப்போதைய கேரள வேளாண்துறை அமைச்சர் திரு. முல்லக்கரா ரத்னாகரன், நம்மாழ்வாரின் பாதம் தொட்டு வணங்கியதையும், அதை நம்மாழ்வார் விரும்பாமல் நெளிந்து கொண்டே அவரை கட்டிப்பிடித்து வாழ்த்தியதையும் காண நேர்ந்தது. இது போன்ற நிகழ்ச்சிகள் நடக்கும் பகல் பொழுதுகளைவிட, நம்மாழ்வாருடன் அளவளாவும் வாய்ப்பைக் கொடுக்கும் இரவுப்பொழுதுகளே எனக்கு இன்பமான இரவுகளாக இருந்தன.

எங்களின் செயல்பாடுகள் சட்டத்துறையோடு சுருங்கிவிடக்கூடாது என்று நினைத்துக் கொண்டிருந்தபோதுதான், “பூவுலகின் நண்பர்கள்”-இன் இரண்டாம் அத்தியாயம் தொடங்கியது. மருத்துவர் சிவராமன், பொறியாளர் சுந்தர்ராஜன், இயக்குனர் ஆர். ஆர். சீனிவாசன் உள்ளிட்டவர்களை இணைத்து செயல்படும் வாய்ப்பு கிடைத்தபோது நம்மாழ்வாருடனான உறவு மேலும் மேம்பட்டது. பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சார்பில் “பூவுலகு” இதழ் வெளியீட்டு விழாவின் மேடையில் நம்மாழ்வாரை – என் இனிய நண்பர் இளைஞர் நம்மாழ்வார் என்று குறிப்பிட்டபோது அவர் குலுங்கிச் சிரித்தது இன்றும் என் நினைவில் நிற்கிறது.

அதன் பின் பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் அனைத்து நிகழ்ச்சிகளிலும் நண்பர் நம்மாழ்வார் கலந்து கொண்டார்.

நம்மாழ்வாரின் உரையாடல் கலை என்பது தனித்திறம் வாய்ந்தது. ஒரு முறை அவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது புலால் உணவை முற்றிலுமாய் தவிர்க்க முடிவு எடுத்திருப்பதாக கூறினேன்.

            -ஏன் அய்யா... உங்கள் உடம்புக்கு ஆகாதுன்னு மருத்துவர்கள் சொல்றாங்களா?

                         -இல்லை. எனக்கு அலுத்துப்போச்சு

                 -அப்போ அலுக்காத மாதிரி வெவ்வேறு உணவுகளை, வெவ்வேறு முறையில் சமைச்சு சாப்பிட வேண்டியதுதானே..!

              - நீங்க புலால் உணவை சாப்பிடறதில்லைன்னு நினைக்கிறேன். ஆனால் நான் புலால் உணவை தவிர்க்க வேண்டாம்ன்னு நீங்க சொல்ற மாதிரி இருக்கு...?

                        - நான் புலால் உணவு சாப்பிடறதில்லை என்பது வேற கதை. நீங்க இவ்வளவு நாளா சாப்பிட்டவர். இப்போதும் அது உங்கள் உடலுக்கு கெடுதல் என்று எந்த மருத்துவரும் சொல்லலை. புலால் சாப்பிட்ட அது செரிக்கிற நிலையில்தான் இருக்கீங்க. அப்புறம் ஏன் அதை தவிர்க்கணும்..?

                       - புலால் உணவு மனிதனுக்கு தேவைதானா...?

                     - தாவரங்கள், பறவைகள், விலங்குகள் ஆகிய உயிரினங்களில் தாவர உண்ணி, விலங்கு உண்ணி என தனித்தனியான பிரிவுகள் இருக்கு. ஆனால் மனித இனத்தில் அப்படி தெளிவான பிரிவு கிடையாது. அதோட மனிதன் புராதன காலத்தில் புலால் சாப்பிடறவனாத்தான் இருந்திருக்கான்....

            அதோட சில தாவரங்களும், பறவைகளும், விலங்குகளும் முழுக்க முழுக்க தாவர உண்ணிகளாகவே இருக்கு. இதில் நீங்களும் முழுமையான தாவர உண்ணியாக மாறிவிட்டால் அந்த தாவரங்களும், பறவைகளும், விலங்குகளும் என்ன செய்யும்ன்னு யோசிச்சு பார்த்தீங்களா...?

விவாதம் இப்படியாகவே சென்று கொண்டிருக்க எனக்கு மீண்டும் ஏராளமான கேள்விகளே மிஞ்சின. இது மட்டுமல்ல மார்க்ஸியம், நாத்திகம், பெண் சுதந்திரம், கூடங்குளம் போராட்டம் போன்ற பல அம்சங்கள் குறித்தான விவாதங்களின்போதும் நம்மாழ்வாருடன் பேசும்போது நம்முடைய கேள்விகள் பல்கிப் பெரும். அது குறித்தே ஒருமுறை அவரிடம் கேட்டபோது, குழந்தையாக சிரித்துக் கொண்டே அதற்கும் பதிலாக ஒரு கேள்வி கேட்டார்: மனிதன் பகுத்தறிவு உடையவன் என்று சொல்றாங்களே! பகுத்தறிவுன்னா சொந்தமா யோசிச்சு முடிவைத் தேடுறதுதானே, வக்கீலய்யா..?

பெரியாருக்கும் எனக்கும் இருந்த வயது வித்தியாசம் காரணமாக பெரியாரோடு பழகும் வாய்ப்பு எனக்கு இருந்ததில்லை. ஆனால் நம்மாழ்வாரோடு நான் பழகிய ஒவ்வொரு தருணத்திலும் பெரியாரை உணர்ந்திருக்கிறேன்.

தனிப்பட்ட விவாதங்களின்போது இவ்வாறு நம்மை பதில் கேள்விகளால் திணறடிக்கும் நம்மாழ்வார் மேடையில் பேசும் அழகே தனி! அவரை பள்ளி மாணவர்களுக்கு இடையேயும் பேச வைக்கமுடியும். கணிணித்துறையினரை கவரும் விதமாக பேசவும் அவரால் முடியும். தம்முன் இருப்போரின் முகக்குறி பார்த்தே, அவர்களுக்கு தேவையானதை தன் உரையில் தருவதில் அவர் ஒரு மேதை.அவரது மறைவு என்பது ஒரு வகையில் இழப்புதான். ஆனால் அவர் விட்டுச் சென்ற பணிகளை முன்னெடுக்கும் ஒவ்வொரு தருணத்திலும் அவர் நம்மோடு இருப்பார். நட்போடும், நகைப்போடும் நமக்கு வழிகாட்டுவார். 

4 கருத்துகள்:

Amudhavan சொன்னது…

தங்கள் நினைவலைகள் படித்தேன். அவரைப் பற்றிய தகவல்களை அழகாக எழுதியிருக்கிறீர்கள். இவர் போன்ற மனிதர்கள் - தாங்கள் வாழும் சமூகம் எப்படியிருக்கவேண்டும் என்று நினைத்து அதற்கேற்ப தங்கள் நல்லெண்ணங்களுடனும் தீர்வுமுறைகளுடனும் வாழ்ந்தவர்கள், வாழ்ந்து வருகிறவர்கள் மிகவும் குறைவு. அந்தவகையில் இவரது இழப்பு தமிழ்நாட்டிற்குப் பேரிழப்பு என்றே நினைக்கிறேன்.
டாக்டர் மூலிகை மணி வேங்கடேசன் சில ஆண்டுகளுக்கு முன்னால் கோவையில் நடத்திய ஒரு மருத்துவக் கருத்தரங்கில் இவருடன் நானும் பங்கேற்றேன். கூட்டம் முடிந்தபிற்பாடு சிறிது நேரம் எங்களுடன் பேசிக்கொண்டிருந்தார். பிறகு அவரது செல்போன் எண்ணைக் கொடுத்து "அடிக்கடி பேசுங்கள்" என்று கூறிச்சென்றார். பேச விஷயம் கிடைத்தால் பேசுவோம் என்ற எண்ணத்தில் நான் பேசாமல் இருந்துவிட்டேன். திடீரென்று ஒரு நாள் தொலைபேசி செய்து அவராகவே பேசினார். அதன்பிறகு சிறிது நாட்கள் கழித்து தொலைபேசி எண் மாறியிருக்கிறது என்று புதிய எண்ணின் தகவலைக் குறுஞ்செய்தியாக அனுப்பியிருந்தார்.
சரி, வேண்டும்போது தொடர்புகொள்ளலாம் என்று பேசாமலேயே இருந்துவிட - இதோ இப்போது அவரது மரணச்செய்தி வருகிறது.
இந்த தனிப்பட்ட வருத்தம் ஒருபுறம் இருந்தாலும் அவரது இழப்பால் இந்த சமுதாயம் சந்திக்கப்போகும் இழப்பை நினைத்தால்தான் பகீரென்று இருக்கிறது.

பெயரில்லா சொன்னது…

வணக்கம்

அவரின் ஆண்மா சாந்தியடையட்டும்..

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய ஆங்கிலப்புத்தாண்டு வாழ்த்துக்கள்.....இந்த வருடத்தில் தங்கள் வாழ்வில் புது வசந்தங்கள் வீசட்டும்.....
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

ஒளியிலே தெரிவது சொன்னது…

நேர்மையான பதிவு ! நீங்கள் ஏன் விகடனில் ஒரு தொடர் எழுதக் கூடாது ? பாரதி தம்பியுடன் கலந்து ஆலோசியுங்கள்! - kailash, hyderabad

பெயரில்லா சொன்னது…

Potrathakka pathivu!! Nanri anna....

By
Suresh kamal kannan

கருத்துரையிடுக