அண்மையில் ஒரு தாயும்
அவரது மகளும் என்னை சந்திக்க வந்தனர். தாய்க்கு சுமார் 45 வயதும், மகளுக்கு சுமார்
22 வயதும் இருக்கலாம். ஒரு ஊடக நண்பரின் அறிமுகத்தால் அவர்களை சந்தித்தேன்.
அந்தத் தாய் பல காலமாக அவரது
கணவரை பிரிந்து வாழ்கிறார் என்பதை அவரை என்னிடம் அனுப்பிய ஊடக நண்பர் முன்பே
கூறியிருந்தார். அவர்கள் எதற்காக என்னைப் பார்க்க வருகிறார்கள் என்பதை நானும்
கேட்கவில்லை, ஊடக நண்பரும் கூறவில்லை. ஏதாவது சட்டப்பிரசினையாக இருக்கலாம்! என்று
நான் யூகித்தேன்.
குடும்ப பிரசினைகளுடன்
வருபவர்களை முதல்முறை சந்திக்கும்போது நான் என் அலுவலகத்தில் சந்திக்க
விரும்புவதில்லை. எனவே அவர்கள் என்னை சந்தித்த இடம் சென்னை மெரீனா கடற்கரை. பரஸ்பர
அறிமுகத்திற்கு பின், பிரசினை குறித்து பேசுவார்கள் என எதிர்பார்த்தேன். ஆனால்
அவர்கள் தடுமாறியது தெரிந்தது. எனவே மகளை ஒரு பொய்யான காரணம் கூறி அங்கிருந்து
சிறிது நேரத்திற்கு அகற்ற முயன்றேன். அதைப் புரிந்துகொண்ட மகள் மிகவும் நாகரீகமாக
அங்கிருந்து நகர்ந்தார்.
தாய் பேசத் தொடங்கினார்.
அவர் காதலித்த நபரை இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துள்ளார். திருமணமான
சில நாட்களிலேயே அவருக்கும், அவரது கணவருக்கும் பல்வேறு அம்சங்களில் கருத்து
வேற்றுமை ஏற்பட்டுள்ளது. கருவுற்ற நிலையில் கணவனை பிரிந்துள்ளார். சுமார் 22
வயதில் இருக்கும் அவரது மகள் இதுவரை அவரது தந்தையை பார்த்ததில்லை.
தாயின் பிரசினையை அவரே
கூறுவார் என்று எதிர்பார்த்தேன். ஆனால் அதற்கான வழி தெரியாததால், அவர் கூறும்
கதையை நிறுத்தி பிரசினையை கூறுமாறு கேட்டேன். சுற்றிவளைத்து அவர் கூறியதன்
சுருக்கம் இதுதான்: என் மகளுக்காக நான் என் வாழ்வையே தியாகம் செய்தேன். ஆனால் அவள்
புரிந்து கொள்ள மறுக்கிறாள். தேவையின்றி கோபப்படுகிறாள். எடுத்தெறிந்து
பேசுகிறாள். மரியாதையே கொடுப்பதில்லை.
எத்தனை காலமாக மகள்
இவ்வாறு இருக்கிறாள்? என்று கேட்டேன். குழந்தைத்தனம் மறைய, மறைய
அவளிடம் முரட்டுக்குணம் உருவானதாக கூறினார். முன்கோபம், பிடிவாதம் ஆகியவை நீண்ட
நாட்களாக இருப்பதாக கூறியஅவர், அண்மைக்காலமாக அமைதியின்றி, கோபக்காரியாக,
எடுத்தெறிந்து பேசுபவளாக மாறிவிட்டாள் என்று கூறினார். அதற்கான காரணம் தெரியவேண்டும்.
மகளுக்காக தாம் செய்துவரும் தியாகம் அவளுக்கு புரிய வேண்டும். மகளுக்கும்,
தனக்கும் இடையே இணக்கமான சூழ்நிலை நிலவ வேண்டும் என்றும் அதற்கு நான் உதவ வேண்டும்
என்றும் கேட்டுக்கொண்டார். அதுவரை அவர் அடக்கி வைத்த அழுகை, அவரது கட்டுப்பாட்டை
மீறவே உடைந்து அழ ஆரம்பித்தார். அவரை ஆறுதல் படுத்தினேன்.
தொலைபேசி மூலம் அவரது மகளை
அழைக்குமாறு கூறினேன். ஐந்து நிமிடத்தில் வருவதாக பதில் வந்தது. அதற்குள் தாயை
சற்று காலாற நடந்துவிட்டு, அவர் மகள் அழைக்கும்போது வருமாறு கூறினேன்.
பொறியியல் பட்டப்படிப்பை
முடித்திருந்த மகளின் பார்வையோ முற்றிலும் வேறாக இருந்தது. தாயார் தம் வாழ்வை
தியாகம் செய்வதாக கூறுவதையே ஏற்க மறுத்தார்.
என் அம்மாவின் பிடிவாத
குணம் எங்கள் சுற்றத்தில் மிகவும் பிரபலம். தான் மிகவும் ரோஷக்காரி என்பதை மிகவும்
பெருமையாக கூறுபவர் என் அம்மா! என் தந்தையை காதலித்து திருமணம் செய்த என் அம்மா, அப்பாவை
பிரிந்ததற்கான சரியான காரணத்தை இதுவரை கூறவில்லை. அதுகுறித்து நான் சிறுவயதில்
கேட்டபோதெல்லாம் அழுதே சமாளித்தார். எனவே என் அப்பாவை என் தாய் பிரிந்ததற்கு
சரியான காரணம் இருக்கிறதா? என்பதே சந்தேகம்தான். என் அம்மா மிகவும் அற்பமான
காரணத்திற்குகூட சில பேருடன் பல ஆண்டுகளாக பேசாமல் இருந்திருக்கிறார்.
தொடக்கப்பள்ளியில்
படித்தபோது என் நண்பர்கள் அவர்களின் அப்பாக்களோடு வருவார்கள். நான் என் தந்தையை
பார்த்ததே இல்லாததால் ஒரு முறை அம்மாவிடம், “அப்பான்னா என்னம்மா?” என்று
கேட்டிருக்கிறேன். அப்போதெல்லாம் என் தாய் அழுவதைக்கண்டு அந்த கேள்வியை மெல்லமெல்ல
என்னுள்ளேயே புதைத்துக் கொண்டிருக்கிறேன். தந்தைகளோடு வரும் என் நண்பர்கள் மீது
பொறாமை கொள்ள ஆரம்பித்தேன். தந்தையோடு பைக்கில் பள்ளிக்கு வருபவர்கள், தந்தையின்
கைப்பிடித்து நடந்து செல்பவர்கள் மீதும் வெறுப்பு வளர்ந்தது. நான் செல்லும்
இடமெல்லாம் என் வயதொத்தவர்கள் தத்தம் தந்தையோடு வந்ததால் வெளியில் செல்வதையே
வெறுக்கத் தொடங்கினேன்.
அப்பாவே இல்லாமல் போனதால்
பெரியப்பா, சித்தப்பா, அத்தை போன்ற உறவுகள் இல்லாமல் போனது. என் தாயின்
குடும்பத்தினரிடமும்கூட என் அம்மா சுமூகமான உறவை கொண்டிருந்ததாக தோன்றவில்லை.
பள்ளிவிடுமுறை நாட்களில் நான் தாத்தா, பாட்டி, பெரியப்பா, மாமா என்று யார்
வீட்டுக்கும் போனதில்லை. உறவினர் வீட்டு விசேஷம் என்று எந்த விழாவிலும் கலந்து
கொண்டதில்லை. சில நேரங்களில் என் அம்மாவின் முகமும், பழக்கமும், அவருடைய அன்பும்,
அக்கறையும்கூட எனக்கு சலித்துப்போகவும், புளித்துப்போகவும் ஆரம்பித்தது.
என் அம்மாவின் நண்பர்கள்
அத்தனை பேரும் பெண்களாகவே இருந்ததால் ஆண்களுடன் பேசிப்பழகுவதற்கான வாய்ப்பே எனக்கு
இருந்ததில்லை. இது எனக்கு பள்ளிப்பருவம்வரை பெரிய பிரசினையாக தெரியவில்லை. ஆனால்
கல்லூரி செல்லும்போது இது பெரிய பிரசினையாக உணர்ந்தேன்.
ஆனால் ஆண்கள் எனக்கு
அன்னியமாகவே தெரிந்தனர். இதற்கிடையில்
அம்மாவின் அன்பும், அக்கறையும் கண்காணிப்பாக மாறியது. நான் யாருடன் பேசுகிறேன்
என்றெல்லாம் கண்காணிக்க ஆரம்பித்தார்.
உலகின் பல முக்கியமான
அம்சங்களை நான் இழந்திருப்பதாகவும், இழந்து கொண்டிருப்பதாகவும் உணர்ந்தேன்,
உணர்கிறேன்.
என் அப்பா எப்படிப்பட்டவர்
என்பது எனக்கு தெரியாது. அவர் என் அம்மாவை கொடுமைப்படுத்தியிருக்கலாம்.
அதுகுறித்தெல்லாம் என் அம்மா என்னிடம் பேசியதே இல்லை. ஆனால் அம்மாவின் அணுகுமுறை
என்பது எளிதானது அல்ல. அவர் நம்புவதும், செய்வதும் சரியென்றே எப்போதும் முரட்டுத்தனமாக
நம்புகிறவர். அவரது பல நம்பிக்கைகளும், நடைமுறைகளும் எனக்கே உடன்பாடில்லாதவை. என்
தந்தையும் அதேபோல என் அம்மாவோடு முரண்பட்டிருக்கலாம். இந்த கருத்து முரண்பாடுகளை
தவிர்க்க என் அம்மா எந்த முயற்சியும் செய்திருக்கமாட்டார் என்று உறுதியாக
நம்புகிறேன். ஏனெனில் என் அம்மா எப்போதும் சரியாக சிந்தித்து, நடப்பதாக அவர்
திட்டவட்டமாக நம்புகிறார்.
இதன் விளைவாகவே அவர் என்
அப்பாவை பிரிந்திருக்க வேண்டும். குறையே இல்லாத மனிதர்கள் இந்த உலகத்தில்
இருக்கமுடியாது. என் அப்பா தவறேதும் செய்தாரா என்று எனக்குத் தெரியாது. அவர் தவறே
செய்திருந்தாலும், அதைப் புரிந்துகொண்டு திருந்திவாழ்வதற்கான முயற்சியை என் அம்மா
செய்திருக்க வேண்டும். ஆனால் என் அம்மா அப்படிப்பட்ட ஆளல்ல! என் அம்மா மேற்கொண்ட
அவசர முடிவுகளே அவருடைய வாழ்க்கைக்கு பிரசினையாகி இருக்க வேண்டும். இதில் தியாகம்
என்று அவர் சித்தரிக்கும் வார்த்தைகளுக்கெல்லாம் எந்தப் பொருளும் இருப்பதாக நான்
கருதவில்லை.
என் அம்மாவின்
இந்தப்போக்கால் அவர் மட்டும் பாதிக்கப்படவில்லை. நானும் மிகவும
பாதிக்கப்பட்டிருக்கிறேன். குழந்தைப் பருவத்தில் ஒரு தந்தையின் அரவணைப்பை
இழந்திருக்கிறேன். அம்மாவின் அன்பிற்கு எந்த விதத்திலும் குறைவில்லாதது அப்பாவின்
அரவணைப்பு. அதை அம்மா மட்டுமல்ல யாருடைய பதிலீட்டாலும் ஈடுசெய்ய முடியாது.
இன்றுவரை என் வாழ்வின் ஒவ்வொரு நாளிலும் என் தந்தையின் இல்லாமையை நான் துயரத்துடன்
சந்தித்துக் கொண்டிருக்கிறேன்.
இதுமட்டுமல்ல! என்
வாழ்வில் எந்த ஆணுடனும் இயல்பாக உரையாடியதே இல்லை. ஆண்கள் என்பவர்கள்
வேற்றுக்கிரகவாசிகள், எச்சரிக்கையுடன் பழக வேண்டும் என்ற கருத்தோட்டத்திலேயே
வளர்ந்திருக்கிறேன். இன்று பொறியியல் பட்டதாரியாகி பணிக்கு செல்லும் நிலையிலும்
என்னால் இயல்பாக பழக முடியவில்லை. இந்தக்குறை காரணமாக என் சக பெண்
பணியாளர்களிடம்கூட நெருங்கமுடியவில்லை.
என் வயதில் உள்ள பெண்கள்
அனைவரும் தங்கள் மணவாழ்வு குறித்து கனவுகளிலும், திட்டமிடலிலும் உள்ளனர். ஆனால்
அதுகுறித்து நினைக்கவே எனக்கு பீதியாக இருக்கிறது.
இதற்கெல்லாம் என் தாய்தான்
காரணம் என்ற கோபம் என்னிடம் இருக்கிறது. அதை நேரடியாக காட்டவிரும்பவில்லை. எனினும்
என் கோபத்தையும் அடக்கமுடியவில்லை. இதே நிலை தொடர்ந்தால் நான் தற்கொலை செய்து
கொள்வதைத்தவிர வேறு இல்லை” என்று முடித்தார்.
அந்தப் பெண்ணின் குமுறல் எனக்கு
மலைப்பாக இருந்தது.
முதல்கட்ட ஆற்றுப்படுத்தலை
(Counselling) தொடங்கினேன். இந்த பிரசினையை முழுமையாக சரிப்படுத்தும் ஆற்றல்
எனக்கு இல்லை என்று தெரிந்தது. எனவே அறிவிலும், அனுபவத்திலும் சிறந்த முழுநேர
ஆற்றுப்படுத்துனர்களிடம் இவர்களை அனுப்ப முடிவு செய்தேன். அதற்குள் அந்த
இளம்பெண்ணின் அம்மாவே மகளின் தொலைபேசியில் அழைக்க அவரை அருகில் வருமாறு அழைத்தேன்.
அம்மாவிற்கும், மகளிற்கும்
பொதுவாக சில ஆறுதல் வார்த்தைகளைக்கூறி மீண்டும் விரைவில் அடுத்தகட்ட
சந்திப்புக்காக அழைப்பதாக கூறி அனுப்பி
வைத்தேன். அம்மாவின் அனுமதியுடன் மகளின் தொலைபேசி எண்ணை குறித்துக் கொண்டேன்.
நீண்டகால மனஇறுக்கத்தை இறக்கி வைக்க உதவிய என்னை நன்றியுடன் பார்த்த அந்த மகள் தன்
தொலைபேசி என்னை கொடுத்துவிட்டு விடை பெற்றார்.
எனக்குத் தெரிந்த எத்தனை
தோழிகள் இதுபோன்று ஒற்றைத்தாயாக குழந்தையை வளர்க்கிறார்கள் என்று எண்ணிப் பார்த்தேன்.
அவர்களில் எத்தனைப் பேர் நியாயமான காரணத்திற்காக கணவனைப் பிரிந்திருப்பார்கள் என்ற
சிந்தனை வந்ததையும் தவிர்க்க முடியவில்லை.
தந்தையை நேரில்
பார்க்காமலே இருந்த குழந்தையின் தாய் ஒருவருக்கு இரண்டாவது திருமணம் நடந்தது.
“அப்பான்னா என்னம்மா?” என்று தன் தாயை கேட்ட அக்குழந்தை, தாயைவிட இந்த
திருமணத்தால் மிகவும் மகிழ்ந்தது. ஆனால் அந்தக் குழந்தையின் தாயும் ஒரு நியாயமற்ற
அவசர முடிவை மேற்கொண்டார். அந்தக் குழந்தை மீண்டும் தந்தையை இழந்தது.
+++
ஊடக நண்பர் என்னிடம்
அனுப்பிய தாயும் மகளும் மிகச்சிறந்த உளவியல் நிபுணரான நண்பர் ஒருவரின்
ஆற்றுப்படுத்தலில் தற்போது உள்ளனர். அவர்கள் இயல்பு நிலைக்கு வருவதற்கு மேலும் சில
காலம் ஆகலாம்.
+++
இது ஒரு தனித்த பிரசினையோ,
தனிநபர் பிரசினையோ அல்ல என்பது புரிகிறது. இதில் பெண்களுக்கு மட்டுமல்ல - ஆண்களுக்கும்
பல செய்திகளும், கேள்விகளும் உள்ளதாக உணர்ந்தேன். இதை எழுதி இந்த கட்டுரையின்
நாயகியான மகளுக்கு அனுப்பி வைத்தேன்.
இந்தச் செய்தியை பகிரலாமா? என்று அந்த இளம் பெண்ணிடம் கேட்டேன். சில நாட்கள் யோசித்தவர்,
“குழந்தைகள் தினத்தன்று இதை பகிரமுடியுமா?” என்று கேட்டார்.
இதோ
பகிர்ந்து விட்டேன்.....!