“பாண்டிசேரியில் உள்ள
தனியார் மருத்துவக் கல்லூரி ஒன்றில் மகப்பேறுக்காக செல்லும் ஏழைத் தாய்மார்களுக்கு
அந்த மருத்துவக்கல்லூரி சார்பில் சுமார் 7,500 ரூபாய் இலவச உதவித்தொகை வழங்கப்படுகிறது!”
-இந்த செய்தியை கேள்விப்பட்டவுடன் உங்களுக்கு
என்ன தோன்றும்?
“அடடே! நல்ல செய்தியாக
இருக்கிறதே!!” என்றுதானே?
எனக்கும் அப்படித்தான்
தோன்றியது. ஆனால் இதை என்னிடம் கூறிய அந்த நண்பரோ, “சற்றுப் பொறுத்திருந்து
முழுக்கதையையும் கேளுங்கள்!” என்று கூறினார்.
புதுவை என்பது மிகச்சிறிய
ஒரு மாநிலம். இதற்குள் சுமார் 10 தனியார் மருத்துவக் கல்லூரிகள் இயங்கி வருகின்றன.
மருத்துவக்கல்லூரி இயங்க வேண்டும் என்றால் மருத்துவமனை மிகவும் அவசியம்.
மருத்துவமனை இருந்தால்தான் நோயாளிகள் வருவார்கள். நோயாளிகள் வந்தால்தான்
மருத்துவம் படிக்கும் மாணவர்களுக்கு “பிராக்டிகல்” வகுப்புகள் நடத்த முடியும்.
புதுவை போன்ற சிறிய
மாநிலத்திற்குள் சுமார் 10 மருத்துவக்கல்லூரிகள் இயங்கும்போது அங்கு நோயாளிகளை வர
வைப்பது எப்படி என்பதுதான் அதை நடத்தும் நிர்வாகிகளின் தற்போதைய பிரசினை. ஏற்கனவே
அங்கு இயங்கி வரும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு செல்லும் நோயாளிகளை தங்களிடம்
வரவழைக்க அந்த தனியார் மருத்துவமனைகள் பெரும் முயற்சி செய்து வருகின்றன.
இதன் ஒரு கட்டமாகத்தான்
தம்மிடம் வரும் நோயாளிகளுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டமும் செயல்படுகிறது.
இது பாராட்டத்தக்க
நடைமுறைதானே! இதில் என்ன தவறு கண்டீர்? என்று கேட்கக் கூடும்.
உதாரணமாக மகப்பேறு பிரிவை
எடுத்துக் கொள்வோம். ஒரு மகப்பேறு மருத்துவமனை என்றால் அதில் பல முக்கியத்துறைகள்
இருக்க வேண்டும். மகப்பேறு சமயத்தில் தாய்க்கோ, குழந்தைக்கோ எதிர்பாராத பிரசினைகள்
வரக்கூடும். இதை சமாளிப்பதற்கு குழந்தை நல மருத்துவர்களும், அவர்களுக்கு தேவையான
மற்ற வசதிகளும் இருக்க வேண்டும். இந்த
வசதிகளில் பல உரிய நிபுணர்கள், உபகரணங்கள், அடிக்கட்டமைப்பு வசதிகள் போன்ற பல
அம்சங்கள் இடம் பெறும்.
ஒரு சிறிய மாநிலத்திற்குள்
10 மருத்துவக்கல்லூரிகள் தேவைதானா என்ற கேள்வி எழலாம். ஆனால் இந்த மருத்துவக்கல்லூரிகள்
புதுவை மாநில மக்களுக்கு நன்மை செய்வதற்காக இங்கு துவக்கப்படவில்லை. யூனியன்
பிரதேசமாக இருந்த புதுவையில் மருத்துவக்கல்லூரி தொடங்குவதில் இருந்த பலவிதமான சலுகைகள்
காரணமாகவே இந்த மருத்துவக் கல்லூரிகள் இங்கு தொடங்கப்பட்டன. இந்த மருத்துவக் கல்லூரிகளும் முழுவதும் வணிக
அடிப்படையிலேயே செயல்படுகின்றன. சேலத்தில் இயங்கும் தனியார் மருத்துவக்கல்லூரியில்
மருத்துவப் பேராசிரியர்கள் முதல், துப்புரவுத் தொழிலாளிகள் வரை மூன்று மாதத்திற்கு
ஒருமுறைதான் ஊதியமே கொடுப்பார்களாம். ஒரு
மாநகரத்தில் இருக்கும் ஒரே மருத்துவக்கல்லூரியிலேயே இதுதான் நிலை என்றால்
புதுவையில் இயங்கும் தனியார் மருத்துவக்கல்லூரி பணியாளர்களின் நிலையை உங்கள்
கற்பனைக்கே விட்டு விடலாம்.
புதுவை போன்ற ஒரு சிறிய
பகுதியில் சுமார் பத்து தனியார் மருத்துவக் கல்லூரிகள் இயங்கும்போது தேவையான
அளவிற்கு மகப்பேறு, குழந்தை நல நிபுணர்கள் தேவையான அளவுக்கு இருப்பார்களா என்பது
கேள்விக்குறிதான். எனினும் மகப்பேறு, குழந்தை நலம் குறித்த பாடப்பிரிவுகளை நடத்த
வேண்டும். இதற்கு கருவுற்ற தாய்மார்களை கவரத்தான் உதவித்தொகை போன்ற கவர்ச்சித்திட்டங்கள்
தீட்டப்படுகின்றன.
வறுமையில் வாழும் மக்களை
கவரும் இந்த மருத்துவமனைகளில் உரிய
நிபுணர்கள் இருக்கிறார்களா..? மற்ற கட்டமைப்புகள் இருக்கின்றனவா...? என்பதெல்லாம் யாருக்கும் தெரியாது. இதையெல்லாம் ஆய்வு செய்ய வேண்டிய
அமைப்புகள் இந்தியா போன்ற மக்களாட்சி நாடுகளில் எப்படி செயல்படும் என்பது
உங்களுக்கு தெரியுமில்லையா...?
எனவே வரும் கருவுற்ற
தாய்மார்களின், அவர்களின் கருவிலுள்ள குழந்தைகளின் “பூர்வ புண்ணிய ஜாதக”
பலனுக்கேற்பவே அவர்களின் மகப்பேறும் இருக்கும். குழந்தை நல்லபடியாக பிறந்தால்
பிரசினையற்ற மகப்பேறு குறித்து மருத்துவ மாணவர்கள் கற்றுக் கொள்வார்கள். அந்த
மகப்பேறு சிக்கலாகி தாயோ, குழந்தையோ அல்லது இருவருமோ இறந்து போக நேரிடலாம்.
அப்போது மகப்பேறின் போது ஏற்படும் பிரசினைகள் குறித்து மருத்துவ மாணவர்கள் பாடம்
கற்றுக் கொள்வார்கள்.
அந்த மருத்துக்கல்லூரியில்
அவசியம் இருக்க வேண்டிய நிபுணர்கள் குறித்தோ, மற்ற அடிக்கட்டமைப்பு வசதிகள்
குறித்தோ அந்த மருத்துக்கல்லூரியில் மகப்பேறுக்காக அனுமதிக்கப்படும் ஏழைப்
பெற்றோர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை. நெருக்கடியின்போது உரிய மருத்துவ சிகிச்சை
அளிக்கப்படாததால் தாம் ஆளாகும் துன்பங்கள் குறித்தும் அம்மக்கள் எக்காலத்திலும்
உணரப்போவதில்லை. மேலும், மகப்பேறின் போது தாயோ, குழந்தையோ அல்லது இருவருமோ
இறந்துவிட்டால் “உதவித்தொகை” சில ஆயிரங்கள் அதிகம் கிடைக்கும்.
மருத்துவர்களுக்கான ஹிப்போகிரடீஸ்
உறுதிமொழி குறித்தோ, சட்டரீதியான கடமைகள் குறித்தோ மருத்துவக்கல்லூரி நிர்வாகமோ,
அங்கு பணியாற்றும் பேராசிரிய பெருமக்களோ, மாணவர்களோ கவலைப்பட போவதில்லை.
இத்தகைய “தரமான”
மருத்துக்கல்லூரிகளில் படித்துத்தேறும் மருத்துவர்கள் எவ்வாறு தங்கள்
மருத்துவப்பயிற்சியின்போது செயல்படுவார்கள் என்பதெல்லாம் கற்பனை செய்ய முடியாத
அம்சங்கள்.
உரிய நிபுணர்களோ, மற்ற அடிக்கட்டமைப்பு வசதிகளோ இல்லாமல் மகப்பேறுக்கு
தாய்மார்களை ஏன் இந்த மருத்துவக்கல்லூரி சார்ந்த மருத்துவமனைகளில்
அனுமதிக்கிறார்கள் என்ற கேள்வி எழுந்துவிடக்கூடாதல்லவா..? அதற்காகத்தான்
ஏழைத்தாய்மார்களுக்கு இலவச
மகப்பேறு. அத்துடன் கூடுதலாக இலவச உதவித் தொகையும்.
இதெல்லாம் இந்திய
மருத்துவக் கவுன்சிலுக்கோ, மத்திய – மாநில அரசுகளுக்கோ தெரியுமா? தெரியாதா...?
மேரா பாரத் மஹான்...!