நம்மாழ்வாரை
சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்னர் திருச்சியில் நடைபெற்ற “உலகமயமாக்கல் கொள்கையும், அதனால் இந்தியா போன்ற நாடுகளுக்கு ஏற்படும்
விளைவுகளும்!” என்ற கருத்தரங்கில் முதன்முறையாக சந்தித்தேன்.
அப்போது நான் திருச்சியில் ஒரு தினசரி பத்திரிகையில் செய்தியாளனாக பணியாற்றிக்
கொண்டிருந்தேன். சவுத் ஏஷியன் புக்ஸ், பூவுலகின் நண்பர்கள் போன்ற பதிப்பகங்கள்
அப்போது வெளியிட்டிருந்த மொழிபெயர்ப்பு நூல்கள் மூலம் உலகமயமாக்கல் பொருளாதார
கொள்கைகளால் ஏற்படவிருக்கும் பிரச்சினைகள் குறித்து ஓரளவு அறிந்திருந்தேன். அந்த
நிலையில் நம்மாழ்வார் அவர்கள், உலகமயமாக்கல் கொள்கையால் இந்திய வேளாண்துறைக்கும்,
விவசாயிகளுக்கும் ஏற்பட்டுவந்த மாற்றங்கள் குறித்து விரிவாகப் பேசினார். அவர்
கூறிய கருத்துகளால் க(ல)வரப்பட்ட நான், நம்மாழ்வாரின் அன்றைய பேச்சை செய்தியாக்கினேன்.
பின்னர்
சென்னைக்கு தொலைகாட்சிப் பணிக்கு வந்தபின் நம்மாழ்வாருக்கும் எனக்கும்
தொடர்பில்லாமல் போனது. செய்தியாளர் பணியைவிட்டு வெளியேறி முழுநேர வழக்குரைஞராக
வாழ்க்கை நடத்துவது என்ற முடிவை எடுத்த பின்னர் நண்பர்களுடன் இணைந்து “மனித உரிமை –
சுற்றுச்சூழல் நீதிக்கான வழக்கறிஞர் மையம்” என்ற பெயரில் இயங்க முயற்சித்தோம்.
இதற்கிடையில் சட்டமேற்படிப்புக்கான ஆய்வில் பெர்ஸி ஷ்மெய்சர் (Percy Schmeiser) என்ற
கனடா நாட்டு விவசாயி அறிமுகமானார்.
கடந்த
1998ம் ஆண்டு மான்சான்டோ என்ற பன்னாட்டு விதை நிறுவனம் பெர்ஸி ஷ்மெய்சருக்கு எதிராக
ஒரு வழக்கு தொடர்ந்தது. அந்த நிறுவனம்
பேடன்ட் உரிமை பெற்றிருந்த மரபணு மூலக்கூறுகள் கொண்ட தானியத்தை பெர்ஸி ஷ்மெய்சர்,
உரிய ராயல்டியை வழங்காமல் சட்டவிரோதமாக பதுக்கி வைத்துள்ளதாக அந்த வழக்கில்
குற்றம் சாட்டப்பட்டது.
தாம்
அவ்வாறு விரும்பி செய்யவில்லை என்றும், அருகாமையில் அந்த நிறுவனத்தின் விதைகளை
சாகுபடி செய்திருந்த நிலத்திலிருந்து அந்த மரபணு மூலக்கூறுகள் தம் நிலத்தில்
காற்று மூலமோ, பூச்சிகள் மூலமோ பரவி தமது வயலில் ஊடுருவி இருக்கலாம் என்று பெர்ஸி
ஷ்மெய்சர் விளக்கம் கூறினார். மேலும் தம் நிலத்தில் அத்துமீறி ஊடுருவிய மான்
சான்டோ நிறுவனமே குற்றவாளி எனக் குற்றம் சாட்டிய அவர், தமது நிலத்தை பாழ்படுத்திய
மான் சான்டோ நிறுவனம்தான் தமக்கு இழப்பீடு அளிக்க வேண்டும் என்று வழக்காடினார்.
ஆனால் அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
மேலும்
மான் சான்டோ நிறுவனம் பேடன்ட் உரிமை பெற்றிருந்த மரபணு மூலக்கூறுகளை உரிய ராயல்டி
செலுத்தாமல் பதுக்கி வைத்திருந்தது, அறிவுச் சொத்துரிமை சட்டப்படி குற்றம் என்று
கூறிய கனடா நீதிமன்றம், விவசாயி பெர்ஸி ஷ்மெய்சர், மான் சான்டோ நிறுவனத்திற்கு
பலகோடி ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என்று தீர்ப்பளித்தது. இதைத் தொடர்ந்து
பெர்ஸி ஷ்மெய்சர் மேல்முறையீடு மூலம் மான்சான்டோ நிறுவனத்திற்கு எதிராக தனது
சட்டப் போராட்டத்தை தொடங்கினார். அதே நேரத்தில் மான் சான்டோ நிறுவனமும் பல நூற்றுக்கணக்கான
விவசாயிகளுக்கு எதிராக வழக்குகளை தொடர்ந்தது.
மான்
சான்டோ, பாயர், டு பான்ட் போன்ற பன்னாட்டு விதை நிறுவனங்களின் இந்த அசுரத் தாக்குதல்
இந்திய விவசாயிகளின் மீதும் விரைவில் நடக்கலாம் என்ற நிலையில், இது குறித்த விவாத
நிகழ்வு ஒன்றை நடத்த திட்டமிட்டோம்.
"மரபணுமாற்றப்பட்ட விதைகள் உழவர்களின் வளர்ச்சிக்கா? அல்லதுபன்னாட்டு வணிக நிறுவனங்களின் வளர்ச்சிக்கா?" என்ற தலைப்பில் நடந்த விவாத நிகழ்வு 17-01-2007 அன்று நடந்தது.
லயோலா கல்லூரி பேராசிரியர் முனைவர் வின்சென்ட் நெறியாள்கையில் நடந்த அந்த
நிகழ்வில் விவசாயிகள் சார்பில் நம்மாழ்வார், நல்லாக் கவுண்டர், அரச்சலூர் செல்வம்,
மருத்துவர் சிவராமன் ஆகியோரும், எதிரணியில் வேளாண் தொழில்நுட்பத்தில் முனைவர்
பட்டம் பெற்ற பெருமக்களும் கலந்து கொண்டு விவாதித்தனர்.
இந்த
விவாதத்தில் உரையாற்றிய நம்மாழ்வார் விவசாயிகள் சந்திக்கும் பல்வேறு அவலங்கள்
குறித்து உரையாற்றினார். அதோடு விவசாயிகளின்
அவல நிலைக்கு காரணமான பன்னாட்டு விதை நிறுவனங்கள், அவற்றின் உள்நாட்டு
பங்காளிகள், இவற்றை நெறிப்படுத்த வேண்டிய அரசு அமைப்புகள் ஆகியவை இந்தியாவின்
எந்தெந்த சட்டங்களை மீறுகின்றன அவ்வாறு சட்டங்களை மீறும் நிறுவனங்கள் – அமைப்புகள்
மீது எந்தெந்த சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குத் தொடுக்கலாம் என்று தேர்ந்த ஒரு சட்ட
மேதையாக பட்டியலிட்டார்.
குறிப்பாக
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் உறுப்பு 21 வழங்கும் வாழ்வாதார உரிமைகளை இந்த
மரபணு மாற்றுத் தொழில்நுட்பம் முழுமையாக பாதிப்பதை சுட்டிக்காட்டினார். மேலும்
இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் உறுப்பு 14 உறுதி செய்யும் சமத்துவ உரிமை
முழுவதுமாக பறிபோவதையும் அவர் குறிப்பிட்டார். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்
பகுதி 4-இல் உள்ள அரசுக் கொள்கைகளுக்கு வழிகாட்டும் நெறிமுறைகளை மத்திய, மாநில
அரசுகள் முற்றிலுமாக புறக்கணிப்பதாக அவர் குற்றம் சாட்டினார். இந்திய அரசியல்
அமைப்புச் சட்டத்தின் குறிக்கோள்களுக்கு எதிராக நடக்கும் ஆட்சிக்கு எதிராக
பொறுப்புள்ள குடிமக்கள் குரல் கொடுக்க வேண்டும் என்று நம்மாழ்வார்
வலியுறுத்தினார். அவ்வாறு அரசுக் கொள்கைகளுக்கு எதிராக குரல் கொடுப்பது, இந்திய
அரசியல் அமைப்புச் சட்டத்தின் பகுதி-4அ- இல் கூறப்பட்டுள்ள குடிமக்களுக்கான
அடிப்படை கடமைகளில் வலியுறுத்தப்பட்டுள்ளது என்பதையும் நம்மாழ்வார்
சுட்டிக்காட்டினார்.
மரபணு
மாற்றுத் தொழில்நுட்பத்தை வேளாண்மையில் அறிமுகம்
செய்வதன் மூலம் நம் நாட்டின் நிலம், நீர், காற்று உள்ளிட்ட சூழல் முழுவதும்
மாசுபடுவதை நம்மாழ்வார் விரித்துரைத்தார். இதற்கு காரணமான பன்னாட்டு நிறுவனங்கள்
மீது சுற்றுச்சூழல் சட்டங்கள் மூலம் நடவடிக்கை எடுக்கலாம் என்று கூறிய
நம்மாழ்வார், பொதுச்சுகாதாரத்தை பாழ்படுத்தும் இந்த பன்னாட்டு நிறுவனங்கள் மீது
இந்திய தண்டனைச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழும் நடவடிக்கை எடுத்து தண்டனை
வழங்க முடியும் என்று குறிப்பிட்டார். இத்துடன் நில்லாமல் நம்பிக்கை மோசடி
உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு தொடர்ந்து இந்த பன்னாட்டு நிறுவனங்களிடம்
இழப்பீடு பெறவேண்டும் என்றும் அவர் ஆலோசனை கூறினார்.
மேலும்,
விதைச் சட்டம் (The Seeds Act,1966), புத்தாக்க உரிமைச்
சட்டம்(The Patent Act, 1970), தாவர வகைகள் – விவசாயிகள்
உரிமை பாதுகாப்பு சட்டம் (The Protection of Plant Varieties and Farmers
Rights Act, 2001), உயிரினவகை வேறுபாட்டுச்சட்டம் (The
Biological Diversity Act, 2002), நிலவியல் குறியீடுகளுக்கான சட்டம்
(The Geographical Indications of Goods (Registration and Protection)
Act, 2001) என்று பல்வேறு பெயர்களில் சட்டங்கள் உருவானாலும் அவை
அனைத்தும் விவசாயிகளின் பாரம்பரிய அறிவுச் சொத்துரிமையை பன்னாட்டு நிறுவனங்களிடம்
ஒப்படைக்கும் உரிமையாகவே உள்ளது என்பதையும் அம்பலப்படுத்தினார்.
அந்த
விவாத அரங்கில் பார்வையாளராக இருந்த பல வழக்கறிஞர்களுக்கும் நம்மாழ்வாரின் உரை பல
புதிய சாளரங்களை திறந்து விடுவதாக இருந்தது.
இதைத்
தொடர்ந்து எனக்கும் நம்மாழ்வாருக்கும் இடையே நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது.
குறிப்பாக வேளாண்மையில் மரபணுமாற்றுத் தொழில்நுட்பத்தை புகுத்துவதற்கு முன்னோடியாக
கத்தரிக்காயில் மரபணுமாற்றுத் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த மத்திய அரசு முயற்சி
செய்தபோது அதற்கு எதிரான நடவடிக்கைகள் சூடுபிடித்தன. இந்த முயற்சிகளில் நானும்
வாய்ப்பிருந்த போதெல்லாம் பங்கேற்றேன். இந்த காலகட்டத்தில் நம்மாழ்வாருக்கும்
எனக்கும் இடையே இருந்த இடைவெளி குறைந்து நட்பு மலர்ந்தது.
மரபணுத்
தொழில்நுட்பத்தை பின் தொடர்ந்து வரும் அறிவுச் சொத்துரிமை தொடர்பாக விதைச்
சட்டத்தில் மாற்றங்கள் ஏற்படத்தொடங்கின. பேடன்ட் என்று கூறப்படும் புத்தாக்க
உரிமைச் சட்டத்தின் கீழ் உயிருள்ளவற்றையும் பதிவு செய்யும் வகையில் சர்வதேச அளவில்
சட்டங்கள் மாற்றம் செய்யப்பட்டன. இது இந்தியாவிலும் எதிரொலித்தது. இந்நிலையில்
பெங்களூரு தேசிய சட்டப் பல்கலைக் கழகம், ஹைதராபாத் நல்சார் சட்டப்பல்கலைக்கழகம், திருவனந்தபுரம்
வேளாண் பல்கலைக்கழகம் போன்ற இடங்களில் நடந்த சட்டம் சார்ந்த கருத்தரங்குகளில்
நம்மாழ்வாரோடு பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது.
இந்த
கருத்தரங்குகளில் நிபுணர்களும், ஆய்வாளர்களும் அளிக்கும் கருத்துரைகள் அத்துறை
சார்ந்த அறிவை எனக்கு அளித்தன என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் இந்த
கருத்தரங்க நாட்களின் ஓய்வு நேரங்களில் நம்மாழ்வாரோடு உரையாடும் வாய்ப்பு
கிடைத்தபோதெல்லாம் அவர் கூறிய பல கருத்துகளே என்னை மாற்றி அமைத்தன. வேளாண்
துறையில் பட்டம் பெற்ற நம்மாழ்வார் வேளாண் துறை தொடர்பான சட்டங்களில் நான் இதுவரை
பார்த்த எவரை விடவும் அதிகமான அறிவும், அதனை திறனாயும் ஆற்றலும் பெற்றிருந்தார்.
நடைமுறையில்
இருந்த குற்றவியல், உரிமையியல் சட்டங்கள் மட்டும் அல்லாது தொழில்நுட்பம் சார்ந்து
புதிதாக வந்து கொண்டிருந்த அறிவுச்சொத்துரிமை சட்டங்கள் குறித்த அறிவும், அந்த
சட்டங்களை விமரிசனப் பார்வையில் திறனாய்வு செய்யும் ஆற்றலும் அவருக்கு இருந்தது.
இது குறித்து அவரிடமே நான் ஆச்சரியப்பட்டு கேள்வி எழுப்பினேன். விவசாயிகள் சட்ட
அறிவைப் பெறவேண்டியது இன்றைய காலத்தின் கட்டாயம் என்றுகூறிய நம்மாழ்வார், என்னைப்
போன்ற வழக்கறிஞர்கள் செய்ய வேண்டிய தலையாய கடமை தமிழ்நாட்டின் விவசாயிகளுக்கு
தேவையான சட்டப் பாதுகாப்பையும், சட்ட அறிவையும் வழங்குவதே என்பதையும்
எடுத்துரைத்தார்.
நம்மாழ்வார்
உரையாடல் கலையில் மிகவும் தேர்ச்சி பெற்றிருந்தார். அவரோடு உரையாடிய தருணங்கள் என்
வாழ்வின் மறக்க முடியாத தருணங்கள். விமர்சனம் செய்வதற்கும், விமர்சனத்தை
ஏற்பதற்கும் அவர் தயங்கியதில்லை. ஆனால் அவர் உரையாடும் விதமோ யாருக்கும் எவ்விதக்
குறையும் ஏற்படாத சூழலை ஏற்படுத்தும். என்னிடம் அவர் உரையாடும்போது அவரது சந்தேகங்களை
ஒரு குழந்தையை போன்ற ஆர்வத்துடன் கேட்பார். 2004ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி
சுனாமி இந்தியா உள்ளிட்ட நாடுகளின் கடற்கரைப் பகுதிகளை சூறையாடிய தினத்தில் அன்றைய
குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் சர்ச்சைக்குரிய சட்டதிருத்தம் ஒன்றில் கையொப்பம்
இட்டார். அதுவரை ஒரு பொருள் செய்யப்படும் முறைக்கு மட்டுமே புத்தாக்க உரிமை
வழங்கப்பட்டு வந்தது. சுனாமி வந்த தினத்தன்று அப்துல் கலாம் கையொப்பம் இட்ட அந்த
சட்ட திருத்தத்தின் மூலம் ஒரு பொருளுக்கே
புத்தாக்க உரிமை பெறுவதற்கு வழிவகை செய்யப்பட்டது. இது மருத்துவம் உள்ளிட்ட
துறைகளில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. இது குறித்து நம்மாழ்வார் மிக விரிவாக
கேட்டறிந்தார்.
நம்மாழ்வாரிடம்
நாம் கேள்வி எழுப்பும்போது, தோளின் மேல்
கைபோட்டு உரையாடும் ஒரு தோழனைப் போல் பதில் சொல்வார். அவரது குரலில் அதிகாரத்தின்
தொனியோ, உபதேசத்தின் தொனியோ இருந்து நான் பார்த்ததில்லை. ஏமாற்றமோ, அவநம்பிக்கையோ
அவரது குரலில் இருந்ததாகவும் எனக்கு நினைவில்லை. உழவர்கள் தற்கொலை போன்ற துயரமான அம்சங்களைப்
பேசும்போது மட்டும் அரிதாக அவர் குரலில் ஒருவிதமான வலி தெரியும். எனினும்
இதிலிருந்து மீண்டுவிட முடியும் என்ற நம்பிக்கையுடனே அவர் உரையாடலை கொண்டு
செல்வார்.
இந்தச்
சூழலில் நண்பர் நாகர்கோவில் அசுரன் காலமானதைத் தொடர்ந்து சூழல் ஆர்வலர்கள் இணைந்து
நடத்திய இரங்கல் கூட்டத்தில், சற்று தொய்வடைந்திருந்த “பூவுலகின் நண்பர்கள்”
அமைப்பை மீண்டும் செயல்படுத்துவது என்று தீர்மானித்து செயல்படத் தொடங்கினோம்.
மரபணு
மாற்றத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தபோது பூவுலகின் நண்பர்களும்,
பெண்கள் கூட்டிணைப்பும் இணைந்து அரசியல் கட்சிகளின் தலைவர்களை சந்தித்து பேசுவது
என்று முடிவானது. எனக்கு தனிப்பட்ட முறையில் இந்த அரசியல் அமைப்போடும், அரசியல்
தலைவர்களோடும் பல முரண்பாடுகள் உள்ளது. இந்த நிலையில் அரசியல் கட்சித் தலைவர்களை
சந்தித்து பேசுவது என்பது எனக்கு சாத்தியமா? என்ற கேள்வி எனக்குள் எழுந்தது. இதை
நம்மாழ்வாரிடம் கேட்டேன்.
என்
கேள்விக்கான பதில் தருவதை தவிர்த்துவிட்டு அவர் என்னிடம் வேறு சில கேள்விகளை கேட்டார்.
அரசியல் அமைப்பின் நடைமுறை குறித்தும், அரசியல் அமைப்பு சட்டம் குறித்தும் சில
கருத்துகளை பகிர்ந்து கொண்டோம். பின் பன்னாட்டு அரசியல் சட்டங்கள் குறித்து சில
கேள்விகளை கேட்டார். எனக்கு தெரிந்ததை கூறினேன். இரு நாடுகளுக்கு இடையே
முரண்பாடுகள் ஏற்படும்போது அந்த பிணக்குகளை தீர்க்க தூதர்கள் பணியாற்றுவது
குறித்தும் உரையாடினோம். உரையாடலின் இறுதியில் இந்தியாவை ஆளும் வர்க்கத்திற்கும்,
ஆளப்படும் வர்க்கத்திற்கும் இடையில் உள்ள முரண்பாடுகளை களைவதற்கு ஆளப்படும்
வர்க்கத்தின் தூதராக அரசியல் தலைவர்களை சந்திக்கும் கடமை பூவுலகின் நண்பர்கள்
அமைப்பிற்கு இருக்கிறது. அந்த அமைப்பில் உள்ள எனக்கும் அந்தக் கடமை இருக்கிறது
என்று அவர் கூறினார்.
ஒரு
தூதனுக்கு தனிப்பட்ட விருப்பு – வெறுப்புகள் இருக்கக்கூடாது என்று கூறிய
நம்மாழ்வார், அந்தத் தூதர் யார் சார்பாக பேச்சுவார்த்தை நடத்துகிறாரோ அம்மக்களின் விருப்பு-வெறுப்புகளை
நாகரீகமாக கையாள்வதே தூதரின் தலையாய பணி என்று நம்மாழ்வார் எனக்கு உணர்த்தினார். இதை
விளக்கும்போது திருக்குறள், வால்டேர் போன்ற அறிஞர்களை மிகச்சரளமாக மேற்கோள்
காட்டிப் பேசினார். நம்மாழ்வாரின் இந்த கருத்துரைகள் மரபணு மாற்றத்திற்கு
எதிர்ப்பியக்கத்தில் மட்டுமல்லாமல், கூடங்குளம் அணுஉலைக்கு எதிரான போராட்டத்தில்
ஈடுபடும் மக்களுக்கு ஆதரவாக அரசியல் தலைவர்களை சந்தித்தபோதும் எனக்கு பயன்பட்டது.
இனியும் அவரது கருத்துகள் அவ்வாறே பயன்படும் என்ற நம்பிக்கை பிறக்கிறது.
இங்கே
ஒரு விந்தையான ஒற்றுமையையும் குறிப்பிடலாம். அணுசக்திக்கு எதிரான மக்கள்
இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் நண்பர் சுப. உதயகுமாரன் எழுதிய “தகராறு – கடந்து
சென்றிடும் வழிவகையும், மாற்றியமைத்திடும் நெறிமுறையும்” என்ற நூலும்கூட இதுபோன்று
முரண்படும் மனித இனங்களுக்கு இடையே அமைதியை ஏற்படுத்தும் அரசுத்தூதர் பணியைப்பற்றி
பேசுகிறது. இரு பெரும் ஆளுமைகள் ஒரு குறிப்பிட்ட அம்சத்தில் ஒத்த சிந்தனை
கொண்டிருப்பதும், அவ்விருவரும் எனது மனதுக்கு இனிய நண்பர்களாக இருப்பதும் என்
நல்வாய்ப்பே!
நம்மாழ்வாரும்,
நானும் ஒருமுறை பேசிக் கொண்டிருந்தபோது, இந்தியாவில் விவசாயம் தொடர்பான
சட்டங்களின் தொகுப்பு இல்லை என்பது குறித்து பேசிக் கொண்டிருந்தோம். இந்திரா
காந்தி தேசிய திறந்தவெளி பல்கலைக்கழகத்தின் சட்டத்துறையில் வேளாண் சட்டங்களின்
முதுநிலை பட்டப்படிப்பு அறிமுகம் செய்யவிருப்பதாக அறிவிப்பு வெளிவந்ததையும்,
பின்னர் அது சந்தடியின்றி மறக்கப்பட்டதையும் அவரிடம் வருத்தத்துடன் பதிவு
செய்தேன்.
மத்திய
அரசு நேரடியாக நடத்தும் ஒரு பல்கலைக்கழகத்தில் அறிவிக்கப்பட்ட ஒரு முயற்சி
அறிவிப்போடு நின்றுபோனதில் வருத்தம் தெரிவித்த நம்மாழ்வார், அதை நாமே
முன்னெடுக்கலாமே என்று ஆலோசனை கூறினார். வேளாண் தொடர்புடைய சட்டங்களை தொகுத்த
பின்னர் பல்கலைக்கழக நிர்வாகிகளிடம் அவற்றை அளித்து வேளாண் சட்டம் குறித்த சிறப்பு
கல்வித்திட்டங்களை தொடங்கி நடத்துமாறு
வலியுறுத்தலாம் என்று ஆலோசனை கூறிய அவர், பட்டமேற்படிப்பு மற்றும் முனைவர்
பட்டத்திற்கான ஆய்வு செய்பவர்களை வேளாண் சட்டங்கள் குறித்து ஆய்வு செய்யுமாறு
ஊக்கம் அளிக்கலாம் என்றும் ஆலோசனை கூறினார். அவர் வாழ்நாளில் அந்த ஆலோசனையை
நடைமுறைப்படுத்தும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
![]() |
(படத்தை சொடுக்கினால் பெரிதாகும்) |
மேலும்
வெளிநாடுகளில் விவசாயிகளுக்கு நன்மை பயக்கும் சட்டங்களை இங்கு அறிமுகம் செய்யவும்,
இங்குள்ள மக்கள் விரோத சட்டங்களை அறிவுத்தளத்தில் விமர்சனம் செய்து அவற்றிற்கு
எதிராக போராடவும் தேவை இருப்பதாக அவர் கருதினார்.
எனினும்
நம்மாழ்வாரின் பணிகளை பல தரப்பினரும் தொடர்ந்து செய்யவிருப்பதாக உறுதி ஏற்றுள்ள
இன்றைய சூழலில், சட்டம் தொடர்பாக நம்மாழ்வாரின் கருத்துகளையும், ஆலோசனைகளையும்
செயல்படுத்துவதற்காக ஒரு படிப்பு மற்றும் ஆய்வு வட்டம் இன்றைய காலத்தின்
கட்டாயமாகிறது. அதை நம்மாழ்வாரின் பெயரிலேயே தொடங்குவது குறித்து ஆலோசனைகள்
மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விரைவில் அறிவிப்புகள் வெளியாகும். உங்கள்
கருத்துகளையும், ஆலோசனைகளையும், பங்கேற்பையும் அன்புடன் எதிர்பார்க்கிறேன்.
-சுந்தரராஜன், வழக்குரைஞர்
(E-Mail: gmail@LawyerSundar.com)
3 கருத்துகள்:
இந்திய அரசியலமைப்பு சட்டத்தை எங்கே அவர் படித்திருப்பார்...? வந்த பல இடையூறுகள் தான் அவரை படிக்க வைத்ததா...? கற்றதையெல்லாம் நாட்டுக்காக பயன்படுத்தினாரே....! அவர் இன்னும் மறையவில்லை... வேளாண் நிலங்களில், பல நிலைகளில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்...
அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம்
பண்புடைமை தூதுரைப்பான் பண்பு
எந்தக் குறளை சொல்வது...? தூது அதிகாரம் உள்ள எல்லா குறள்களையும் சொல்லலாம்... உழவர் சிரிக்கணும்...! உலகம் செழிக்கணும்...! என்கிற பகிர்வுகள் அவருக்கு சமர்ப்பணம்... இந்த அதிகாரத்தையும் எழுத வேண்டும் என்கிற எண்ணம் வந்தது தங்களின் பகிர்வால்... நன்றி...
அவரின் சிறப்புகளுக்கு ஓர் படிப்பு அல்லது ஆய்வு வட்டம் செயல்படுத்தும் தங்களின் முயற்சி விரைவில் வெற்றி அடைந்து, நாட்டில் புதியதொரு மறுமலர்ச்சி உண்டாக வேண்டும்... வாழ்த்துக்கள்... பாராட்டுக்கள்... நன்றி...
எனது g+ வட்டத்திலும், முகநூலிலும் பகிர்ந்துள்ளேன்... நன்றி...
வணக்கம் நண்பர்களே
உங்கள் தகவல் பகிர்வுக்கு மிக்க மகிழ்ச்சி மேலும் உங்கள் வலைதளத்தின் themesசை மாற்றம் செய்ய உடனே என்னுடிய இணையதளத்தை பயன்படுத்தும் மாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன் நன்றிஇலவசமாகப பிளாக்கர் தீம்ஸ் டவுன்லோட் செய்ய இந்த லிங்கை அழுத்தவும்
கருத்துரையிடுக