25 மே, 2014

ஃபேண்ட்ரி (Fandry) - இந்திய சமூகத்தின் கண்ணாடி

மதம் சார்ந்த ஒரு மனிதனின் சிந்தனை என்பது மிகவும் சுவாரசியமான  ஒரு உளவியல் ஆய்வுக்கு வழிவகுக்கும் ஒரு அம்சமாகும். அம்மதம் விதிக்கும் கட்டுப்பாடுகளை தனக்கும், தன்னைச் சார்ந்தவர்களுக்கும் மிகவும் தாராளமாக தளர்த்தும் ஒரு மனிதன், தனக்குக்கீழே உள்ளவர்களுக்கு அதே மதம் சார்ந்த கட்டுப்பாடுகளை மிகத்தீவிரமாக விதிப்பதை உணரமுடியும்.

இதில் இந்தியாவில் பெரும்பான்மையாக இருக்கும் இந்துக்களின் போக்கோ மிகவும் வினோதமானது. கடவுள் தூணிலும் இருக்கிறான், துரும்பிலும் இருக்கிறான் என்று கூறிக்கொண்டே சகமனிதனை சாதியின் பெயரால் அடக்கி ஒடுக்கி துன்புறுத்தும் இன்பம் காணும் வக்கிர குணம் கொண்டது.

பசு மாட்டின் சாணத்தையும், சிறுநீரையும் புனிதமாக கருதும் இந்துக்கள்தான், மனித மலத்தை கையாள்வதை மிகவும் இழிவாக கருதுகின்றனர். விஷ்ணுவின் அவதாரம் என்று கூறப்படும் வராகம் எனப்படும் பன்றியும் பெரும்பான்மை இந்துக்கள் கண்ணோட்டத்தின்படி அருவறுக்கத்தக்கதே!


இந்துக்களின் இந்த போக்கை விமரிசனம் செய்யும் கலை இலக்கிய படைப்புகள் மிகவும் குறைவே! அண்மையில் இத்தகைய போக்கில் அமைந்த ஃபேண்ட்ரி  என்ற மராத்திய மொழி திரைப்படத்தை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. வறுமையான குடும்பத்தில் பிறந்தாலும், நகர்ப்புறத்திலேயே வளர்ந்ததால் சாதிய ஒடுக்குமுறைகளை நேரில் பார்த்தறியாத எனக்கு இப்படம் ஒரு புதிய அனுபவத்தை கொடுத்தது. 

ஃபேண்ட்ரி - இந்தச் சொல்லுக்கு மராத்திய மொழியில் பன்றி என்று பொருளாம்.

நாகராஜ் என்ற கவிஞர் இயக்கிய முதல் திரைப்படமாம். முதல் திரைப்படத்திலேயே நம் இமயங்களுக்கும், சிகரங்களுக்கும் இன்ன பிற பட்டம் பெற்ற பிரபலங்களுக்கும் கலையின் கடமையும், பொறுப்பும் என்ன என்ற பாடத்தை புகட்டி இருக்கிறார்.

கிராம சமூக கட்டமைப்பின் கடைசியில் உள்ள ஒரு குடும்பத்தை சுற்றிச்சுழலும் திரைக்களம். அக்குடும்ப வாரிசான ஜாப்யா என்ற பதின்ம வயது சிறுவன், அவன் படிக்கும் பள்ளியில் படிக்கும் உயர்சாதியை சேர்ந்த ஷாலு என்ற மாணவியை ஒருதலையாக காதலிக்கிறான். அவனுடைய மூத்த சகோதரி திருமணமாகியும் வரதட்சணை பிரச்சினை காரணமாக பிறந்தவீட்டிலேயே இருக்க, அடுத்த சகோதரிக்கு திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஊர்த்திருவிழாவில் நாயகன் குடும்பச் சொத்தான பன்றியும் திருவிழாக்கூட்டத்தில் புகுந்துவிட தெய்வ குற்றமும், தீட்டும் ஏற்படுவதாக உயர்சாதியினர் கருதுகின்றனர். அந்த பன்றியை பிடித்து அப்புறப்படுத்துமாறு ஜாப்யாவின் குடும்பத்திற்கு உத்தரவிடப்படுகிறது.

அந்தப்பன்றியை பிடித்து அப்புறப்படுத்தும்போது ஊரே வேடிக்கை பார்க்கிறது, ஜாப்யா ஒருதலையாக காதலிக்கும் ஷாலு உட்பட. இந்த நிகழ்ச்சி ஃபேஸ்புக்கிலும்கூட அவ்வபோது அப்டேட் செய்யப்படுகிறது.

படம் முழுவதுமே பன்றியை வளர்க்கும் ஜாப்யாவின் குடும்பமே பன்றியாகக் கருதப்படுகிறது. இதற்கான எதிர்வினையாக ஜாப்யா என்ன செய்கிறான் என்பதோடு படம் முடிந்து விடுகிறது.

ஒரு மிகச்சிறிய ஆனால் யதார்த்தமான கதையை கவிதையாக கொடுத்திருக்கிறார் இயக்குனரும், கவிஞருமான நாகராஜ். கேமராவும், இசையும் அவரது எண்ணத்தை முழுமையாக உள்வாங்கி அவரது உணர்வுகளை நமக்கு கடத்துகின்றன.

படத்தில் வெளிப்படையாக அரசியல் பேசப்படவில்லை. அம்பேத்கார், பூலே போன்றவர்கள் சுவர்களில் படமாக அமைதியாக  இருக்கின்றனர்.  கதை நாயகன் ஜாப்யாவின் குடும்பத்திற்கு ஏற்படும் இழுக்கைப்போக்க அவன் மேற்கொள்ளும் எதிர்வினைகூட அரசியல் தத்துவங்களால் உருவாக்கப்பட்டதல்ல, அது மிகவும் இயல்பான வாழ்வியல் தத்துவமே!

+++

திரைப்படங்கள் மீது ஈர்ப்பு இல்லாத எனக்கு இந்த திரைப்படம் குறித்த கவனத்தை ஈர்க்க உதவியது நண்பர் அதிஷா அவரது வலைப்பதிவில் எழுதி ஃபேஸ்புக்கில் பகிர்ந்த விமர்சனம்தான்.

இந்த படத்தை நான் பார்க்கத்தூண்டியது "சாப்ளின் டாக்கீஸ்" நண்பர்கள்தான். திரைப்பட திரையிடலைத் தொடர்ந்து அட்டகத்தி திரைப்பட இயக்குனர் ரஞ்சித் மற்றும் எழுத்தாளர் அழகிய பெரியவன் ஆகியோரின் கருத்துப்பகிர்தல் இருந்ததால் இப்படத்தை பார்த்தேன்.

அட்டகத்தி திரைப்பட படபிடிப்பின்போது அம்பேத்காரின் புகைப்படம் வீட்டிற்குள் இருப்பதுபோல் காட்சி அமைக்க, தான் பெரும்பாடு பட்டதாக இயக்குனர் ரஞ்சித் கூறியபோது எனக்கு அதிர்ச்சி ஏற்படவில்லை. அதை மிகச்சுலபமாக செய்தேன் என்று அவர் கூறியிருந்தால் எனக்கு அதிர்ச்சி ஏற்பட்டிருக்கலாம்.

பார்வையாளர்கள் நடத்திய கலந்துரையாடல் (சிலரது சொதப்பல்களையும் மீறி) சூடும், சுவையுமாக இருந்தது.

+++

மதத்தை ஒழிக்காமல் சாதியை ஒழிக்க முடியாது என்றே நான் நம்புகிறேன். ஆனால் சாதி ஒழிப்பு குறித்து பேசும் பல பிரபலங்கள் மதங்கள் குறித்த தங்கள் பார்வையை தேவையான அளவில் மக்கள் முன் வைக்கவில்லை என்றே தோன்றுகிறது.

சாதியை ஒழிப்பதில் சாதி மறுப்புத் திருமணங்களே மிகச்சிறந்த வழி என்பதை நான் நம்புகிறேன். ஆனால் தற்போது நடக்கும் பல திருமணங்களின் நாயக, நாயகிகள் சாதி ஒழிப்பின் சமூக, அரசியல் முக்கியத்துவம் குறித்து எந்த அறிவும் இல்லாதவர்களாகவே இருக்கிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை தம் குடும்பத்தில் இல்லாத நிறமும், அழகும் கொண்ட வாழ்க்கைத்துணையை அடையும் ஆசை மட்டுமே இருப்பதாக தோன்றுகிறது. எனினும் இது அவர்களின் தவறு அல்ல. அவர்களை வழிநடத்தும் அரசியல் தலைமைகளின் தவறு!

முழுமையான சாதி ஒழிப்பு என்பது சாதி மறுப்பு திருமணத்தில் வாழ்த்திப் பேசுவதோடு முடிந்துவிடாமல், சாதி மறுப்புத் திருமணம் செய்த தம்பதிகளின் வெற்றிகரமான மணவாழ்வை உறுதி செய்வதிலும் உள்ளது என்பதை உணர வேண்டும். சாதி மறுப்புத் திருமணம் செய்யவிருக்கும் மணமக்களின் எதிர்காலத்தை உத்தரவாதம் செய்யும் உடலியல், உளவியல் கூறுகள் இருவரிடமும் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அதற்கான முன்தயாரிப்பு வேலைகளை தலித் அரசியல் அமைப்புகள் மேற்கொள்ள வேண்டும்.

இட ஒதுக்கீடு காரணமாக வேலைவாய்ப்புக்கான கல்வி பெறும் தலித் இளைஞர்களில் பலருக்கு இட ஒதுக்கீட்டின் முக்கியத்துவம்கூட தெரிவதில்லை. இவர்களுக்கு சாதி ஒழிப்பு உள்ளிட்ட சமூகக்கல்வியை அளிப்பதன் மூலம் மட்டுமே சாதி மறுப்புத் திருமணங்கள் முழுமையான வெற்றி அடையும்.  படித்தவர்கள் வேலைவாய்ப்பு பெறுவதற்கும், விருப்பமுள்ளவர்கள் சுயதொழில் தொடங்கவும் ஆலோசனையும், வழிகாட்டுதலும் அளிக்கக்கூடிய அமைப்புகள் தேவை. சுய தொழில் செய்பவர்களுக்கான நிதி ஆதாரங்கள், சந்தை ஆகியவற்றை உருவாக்கவும், அடையாளம் காட்டவுமான கட்டமைப்புகள் தேவை.

இதை எல்லாம் திட்டமிட்டு செய்ய வேண்டிய பெரும்பாலான அரசியல் சக்திகள் நாடாளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் சில இடங்களை பெறுவதற்காக எதிரிகளிடமே சமரசம் பேசி சரணடையும் இன்றையச் சூழலில் ஃபேண்ட்ரி போன்ற திரைப்படங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.  இந்த திரைப்படத்தை ஜீ நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதன் பின்னே உள்ள அரசியல் மிகப்பெரும் விவாதத்துக்கு உரியதாகும்.

இப்படம் தமிழ்நாட்டில் வணிகரீதியாக திரையரங்குகளில் திரையிடப்பட்டதாக தெரியவில்லை. எனினும் பல சமூக அரங்குகளில் திரையிடப்படுவதாக தெரிகிறது. இந்த திரையிடல்களைத் தொடர்ந்து நடக்கும் விவாதங்கள் இது போன்ற சமூக அநீதிகளைக் கண்டு இதுவரை எதிர்வினையாற்றாத பெரும்பான்மை சமூகத்தினை கேள்வி கேட்பதோடு, சமூக வளர்ச்சிக்கான வழியைத் தேடுவதாகவே தோன்றுகிறது.

இது போன்ற ஒரு படத்தை தமிழில் உருவாக்கி, வணிக ரீதியாக திரையரங்குகளில் வெளியிடுவது இன்றைய நிலையில் சாத்தியம்தானா
? என்ற கேள்வி எனக்குள் எழுகிறது. எனினும் இது போன்ற கருத்துள்ள குறும்படங்களாவது உருவாகி மக்களிடம் எவ்வகையிலாவது சென்று சேர்ந்து மனசாட்சி உள்ளவர்களை சிந்திக்க வைப்பது, மனித குலத்திற்கும் – தமிழ் இனத்திற்கும் மிகவும் அவசியம்!கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக