19 செப்டம்பர், 2014

நரேந்திர மோடி அறுக்க முனையும் தங்க முட்டையிடும் வாத்து

எந்த வாத்தும் தங்கத்தில் முட்டை இடுவதில்லை. எனினும் இந்த சிறுவர் நீதிக்கதை வலியுறுத்தும் கருத்து நினைவில் நிறுத்த வேண்டியதாகும்.மிகப்பெரும்பான்மை பலத்துடன் நாடாளுமன்றத்தேர்தலில் வென்று ஆட்சி அமைத்துள்ள நரேந்திர மோடியின் ஆட்சிக்கு தனது திறமையை நிரூபிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. எனவே நாட்டை வளர்ச்சிப்பாதையில் கொண்டு சென்றே தீர்வது என்ற லட்சிய வேகத்துடன் அவரது அரசு பீடுநடை போட்டுக்கொண்டிருக்கிறது.

சுற்றுச்சூழலை பாதிக்காமல் “வளர்ச்சி” காணமுடியாது. அதேபோல் மனித உரிமைகளை மீறாமல் சட்டம் – ஒழுங்கை காப்பாற்ற முடியாது என்ற நவீன அர்த்தசாஸ்திரத்தை காங்கிரஸ் ஆட்சி உருவாக்கியது. காங்கிரஸின் அத்தனை கொள்கைகளையும் தனதாக்கிக்கொண்ட பாரதிய ஜனதா அரசும் காங்கிரஸ் திட்டமிட்ட பாதையில் காங்கிரஸைவிடவும் மிக வேகமாக சென்று கொண்டிருக்கிறது.

இதன் ஒரு கட்டமாக நாட்டின் “வளர்ச்சி”க்கு எதிராக உள்ள சுற்றுச்சூழல் சட்டங்களை மறுசீராய்வு செய்து தேவையான மாற்றங்களை செய்ய முடிவு செய்துள்ளது. இம்முடிவின்படி,
(1) சுற்றுச்சூழல் (பாதுகாப்பு) சட்டம் 1986,
(2) வனம் (பாதுகாப்பு) சட்டம் 1980,
(3) வன உயிரினங்கள் (பாதுகாப்பு) சட்டம் 1972,
(4) தண்ணீர் (பாதுகாப்பு மற்றும் மாசுக் கட்டுபாடு) சட்டம் 1974 மற்றும்
(5) காற்று (பாதுகாப்பு மற்றும் மாசுக் கட்டுபாடு) சட்டம் 1981
...ஆகிய சட்டங்களில் தேவையான மாற்றங்களை செய்ய உயர்மட்டக்குழு ஒன்றை கடந்த 29.08.2014 அன்று அமைத்துள்ளது.

இந்த உயர்மட்டக்குழுவின் தலைவராக முன்னாள் மத்திய கேபினட் செயலாளர் ட்டி.எஸ்.ஆர். சுப்ரமணியம் நியமிக்கப்பட்டுள்ளார். இதன் உறுப்பினர்களாக மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் முன்னாள் செயலாளர் விஸ்வநாத் ஆனந்த், டெல்லி உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி ஏ. கே. ஷ்ரீவத்ஸவ், மத்திய அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞராக பணியாற்றிய உச்சநீதிமன்ற வழக்கறிஞர் கே. என். பட் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நால்வரில் ஒருவர் மட்டுமே சுற்றுச்சூழல் குறித்த விவகாரங்களில் முன் அனுபவம் கொண்டவராக தெரிகிறது. மத்திய சுற்றுச்சூழல மற்றும் வனத்துறை அமைச்சகத்தில் செயலாளராக (1997 – 2000) பணியாற்றி ஓய்வு பெற்ற விஸ்வநாத் ஆனந்த் பின்னர் தேசிய சுற்றுச்சூழல் மேல்முறையீட்டு அதிகார அமைப்பில் 2002ம் ஆண்டு முதல் 2005ம் ஆண்டுவரை துணைத்தலைவராக பணியாற்றினார். அப்போது அந்த தேசிய சுற்றுச்சூழல் மேல்முறையீட்டு அதிகார அமைப்பில் தலைவர் பதவியும், மூன்று தொழில்நுட்ப நிபுணர் பதவிகளும் நிரப்பப்படாமல் காலியாக இருந்தது. எனினும் தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விஸ்வநாத் ஆனந்த் தனிநபராகவே செயல்பட்டு பல “வளர்ச்சி”த் திட்டங்களுக்கு அனுமதி வழங்கினார். இவருடைய சேவை மனப்பாங்கை புரிந்து கொள்ளாத டெல்லி உயர்நீதிமன்றம், இவர் சுற்றுச்சூழல் குறித்த அடிப்படை புரிதல் இல்லாமல், யாரையும் கலந்தோலோசிக்காமல் தான்தோன்றித்தனமாக அனுமதி வழங்கியதாக கருத்து தெரிவித்தது. இதேபோல் இந்தக்குழுவில் இடம் பெற்றுள்ள உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் கே.என். பட், அயோத்தி ராமர் கோவில் – பாபர் மசூதி வழக்கில் பாரதிய ஜனதாவிற்கு ஆதரவாக வாதாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த “உயர்மட்டக் குழு” பாட்னா, பெங்களூரு, ஒடிஷா ஆகிய நகரங்களில் ஓரிரு நாட்கள் மக்களிடம் கருத்து கேட்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் கருத்து தெரிவிக்க விரும்பும் மற்றவர்கள் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சரகத்தின் இணைய தளத்தில் 1000 எழுத்துகளுக்குள் கருத்து தெரிவிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த 1000 எழுத்துக்களை விட அதிக எழுத்துகளில் கருத்து தெரிவிக்க விரும்புபவர்கள் hlc.moef2014@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம். இவை அனைத்தும் பரிசீலிக்கப்பட்டு இந்த உயர்மட்டக்குழு அமைக்கப்பட்ட தேதியிலிருந்து இரண்டு மாதங்களுக்குள், அதாவது 28.10.2014க்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இந்தக்குழுவில் யாரை உறுப்பினர்களாக நியமிக்கலாம் என்பது குறித்து தம்மிடம் மத்திய அரசு ஆலோசிக்கவில்லை என்று இந்த உயர்மட்டக்குழுவின் தலைவர் ட்டி.எஸ்.ஆர். சுப்ரமணியன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். மேலும் அறிக்கை சமர்ப்பிக்க இரண்டு மாத அவகாசம் என்பது மிகவும் குறுகிய காலம்  என்று கூறிய அவர், சட்டங்களை முழுமையாக சீராய்வு செய்யப்போவதில்லை, தேவையான பகுதிகளை மட்டுமே சீராய்வு செய்யவிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அதாவது பன்னாட்டு வணிக நிறுவனங்களின் நலன்களுக்கு எதிராக உள்ள அம்சங்களை மட்டும் பரிசீலனை செய்து நீக்கிவிடுவார்கள் போலிருக்கிறது.

மன்மோகன் சிங் மற்றும் ப. சிதம்பரம் ஆட்சியின்போது வடகிழக்கு மாநிலங்களில் நடந்த வளர்ச்சித் திட்டங்களால் புலம் பெயர்ந்த மக்கள் தமிழ்நாட்டின் மூலைமுடுக்கெல்லாம் உடல் உழைப்புத் தொழிலாளர்களாக மிகக்குறைந்த ஊதியத்திற்கு பணியாற்றி வருகிறார்கள்.

தற்போதைய நரேந்திர மோடி அரசின் வளர்ச்சித்திட்டங்களால் இந்தியா முழுவதுமே பயன் பெறும் போலிருக்கிறது. அப்போது வளர்ச்சி அடையும் பகுதிகளிலிருந்து வெளியேற்றப்படும் மக்கள் எங்கே செல்வார்கள் என்று தெரியவில்லை. இதுபோன்ற பிரசினைகள் ஏற்பட்டால் மீண்டும் அயோத்தி பிரசினை மேலோங்கலாம்.... அல்லது வேறு ஏதேனும் மதக்கலவரம் ஏற்படலாம்.... ஆனால் வளர்ச்சிப்பணிகள் பாதிக்கப்படாது என்று நம்பலாம்.

***

இதெல்லாம் இருக்கட்டும். தீபாவளிக்கு ரிலீஸாகும் திரைப்படங்களில் எந்தப்படம் வெற்றியடையும் என்று சரியாக கணித்தால் நீயும் என் போன்ற தமிழனே...! நாமிருவரும் தோழர்களே...!!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக