பொதுவாக சுற்றுச்சூழல் தொடர்பான
வழக்குகளை உச்சநீதி மன்றத்திலோ அல்லது உயர்நீதிமன்றத்திலோ தற்போது தேசிய பசுமைத் தீர்ப்பாயத்திலோ
நடத்தி தீர்ப்புகள் வழங்கப்படுவதுதான் ஊடகங்களின் மூலம் மக்கள் பெறும்
செய்தியாகும். எனவே சுற்றுச்சூழல் சீர்கேடு தொடர்பாக உயர்நீதிமன்றத்திலோ அல்லது உச்சநீதிமன்றத்திலோ மட்டுமே வழக்கு தொடரமுடியும் என்ற தவறான கருத்து
பெரும்பாலானோரிடம் நிலவுகிறது.
ஆனால் அனைத்து விதமான சுற்றுச்சூழல்
சீர்கேடுகளுக்கும் வட்டார அளவில் உள்ள குற்றவியல் நடுவர் (மாஜிஸ்திரேட்)
நீதிமன்றங்களிலேயே பல வழக்குகளை தொடரலாம்.
அடிப்படையில் பார்த்தால் சுற்றுச்சூழல்
சீரழிவு என்பது எல்லாவிதத்திலும் பொது(மக்கள் மீதான) தொல்லையாகவே இருக்கும்.
பொதுத்தொல்லை என்ற சொல்லின் பொருளை இந்திய தண்டனைச் சட்டம் (Indian
Penal Code, 1860) அதன் பிரிவு 268இல் வரையறை செய்கிறது. அதன்படி, “பொது
மக்களுக்கு அல்லது குறிப்பிட்ட இடம் சூழலில் வசிக்கும் அல்லது தங்கியிருக்கும்
மக்களுக்குத் தீங்கு, ஆபத்து அல்லது தொந்தரவு விளைவித்தல், பொது உரிமையை
பயன்படுத்த நேரும் மக்களுக்கு விலக்க முடியாத தீங்கு, தடங்கல் ஆபத்து அல்லது
தொந்தரவு விளைவித்தல். இவற்றைத் தோற்றுவிக்கும் வகையில் செய்யக்கூடாதவற்றை
செய்தலும், செய்யவேண்டியதை செய்யாமல் இருத்தலும் ‘பொதுத்
தொல்லை’ எனப்படும். யாரோ ஒருவருக்கு சிறிய வசதி அல்லது
அனுகூலம் விளைவிக்கும் காரணத்தால் ஒரு பொதுத்தொல்லை மன்னிக்கப்பட மாட்டாது”
இந்த வரையறையின்கீழ் நிலம், நீர்,
காற்று மாசுபடுதல் உள்ளிட்ட பல்வேறு வகையிலான சுற்றுச்சூழல் சீர்கேடுகளை
பொதுத்தொல்லையாக வகைப்படுத்தி விடலாம். இந்த பொதுத் தொல்லை என்னும் தலைப்பில்
உயிருக்கு ஆபத்தான நோயை ஏற்படுத்தும் வாய்ப்புள்ள பொறுப்பற்ற செயல், உணவுப்
பொருட்களில் கலப்படம் செய்தல், மருந்துகளில் கலப்படம் செய்தல், பொது நீர்நிலைகளை
அசுத்தப்படுத்தல், காற்று மண்டலத்தை மாசுபடுத்தல், நச்சுத்தன்மை வாய்ந்த பொருட்களை
பொறுப்பற்று கையாளுதல், தீ அல்லது தீப்பற்றக்கூடிய பொருட்களை பொறுப்பற்று
கையாளுதல், வெடிபொருட்களை பொறுப்பற்று கையாளுதல், இயந்திரங்களை பொறுப்பற்று ஆபத்து
ஏற்படுத்தும் விதத்தில் கையாளுதல் உள்ளிட்டவை பட்டியலிடப்பட்டுள்ளன.
இந்த பிரச்சினைகளில் பாதிக்கப்பட்ட
யாரும் அருகிலுள்ள காவல்நிலையத்தில் புகார் அளிக்க முடியும். பொதுத்தொல்லை குறித்த
குற்றங்களில் பெரும்பாலானவை நீதிமன்றம் பிறப்பிக்கும் கைது ஆணை இல்லாமலேயே
காவல்துறை அதிகாரி கைது செய்யக்கூடிய (Cognizable), அதே நேரம் பிணையில் விடுவிக்கக்கூடிய (Bailable)
குற்றமாக உள்ளது. எனவே சூழல் சீர்கேடு தொடர்பான புகார்களில் காவல்துறையினர்
தாராளமாக தலையிட முடியும். அந்த சீர்கேடுகளை தடுக்கமுடியும். இந்தப் புகார்களில்
குற்றம் சாட்டப்படுபவர்கள் விசாரணைக் காலத்தில் பிணையில் இருக்க முடியும்
என்றாலும், வழக்கு விசாரணையின் முடிவில் குற்றம் நிரூபிக்கப்படும்போது சூழல்
சீர்கேட்டிற்கு காரணமானவர்களும், உடந்தையாக இருந்தவர்களும் சிறை உள்ளிட்ட தண்டனையை
பெறுவது உறுதி.
இந்தப் புகார்களின் கீழ்
காவல்துறையால் கைது செய்யப்படுவோரை நீதிமன்றத்தில் நிறுத்தும்போது அவர்களுக்கு
பிணை வழங்கும் நீதித்துறை நடுவர் பொதுத்தொல்லையை நீக்குவதற்கான நிபந்தனைக் கட்டளை
ஒன்றை பிறப்பிக்க முடியும். இதற்கு குற்றவியல் நடைமுறைச் சட்டம், (Criminal
Procedure Code, 1973) பிரிவு 133 வழிகாண்கிறது.
இதன்படி பொதுத்தொல்லை குறித்து
காவல்துறையினர் மூலமாகவோ, பொதுமக்களின் நேரடியான புகார் மூலமாகவோ, வேறு எந்த
வழியிலோ தகவல் அறிந்த குற்றவியல் நடுவர், குறிப்பிட்ட அந்த பொதுத்தொல்லையில்
குறிப்பிட்ட கால அவகாசத்தில் நீக்குமாறு நிபந்தனை விதித்து உத்தரவிடலாம். சூழலை
சீரழிக்கும் அந்த நிகழ்வு எதனால் ஏற்படுகிறதோ அந்த நடவடிக்கையை தொடர்ந்து
செய்வதற்கு தடை பிறப்பித்து அந்த உத்தரவு இருக்கலாம். இந்த உத்தரவு ஒரு இடைக்கால
உத்தரவாகும்.
இந்த உத்தரவை பெறுபவர் (தொழிலக
உரிமையாளர்) அந்த உத்தரவை நிறைவேற்ற வேண்டும். மேலும் அந்த இடைக்கால உத்தரவை
நிரந்தரமான உத்தரவாக மாற்றுவது குறித்தும் நீதிமன்றத்திற்கு பதில் அளிக்க
வேண்டும்.
குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின்
பிரிவு 133ன் கீழ் குற்றவியல் நடுவர் பிறப்பிக்கும் நிபந்தனை உத்தரவு சட்டரீதியாக
மிகுந்த முக்கியத்துவம் கொண்டதாகும். இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டபின், இந்த
உத்தரவுக்கு கட்டுப்பட மறுத்தல் என்பது இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவு 188 கீழ் ஆறு
மாதகால சிறை வரையிலான தண்டனைக்குரிய குற்றமாகும்.
சிறு மற்றும் நடுத்தர தொழிலகங்கள்
ஏற்படுத்தும் பெரும்பாலான சூழல் சீர்கேடுகளை இந்த சட்டப்பிரிவுகளின் கீழ் தடுக்க
முடியும். முறையான முழுமையான புகாரை தயார் செய்து உரிய காவல்துறை அதிகாரிகளை
அணுகுவதன்மூலம் பல பிரச்சினைகளை தீர்க்க முடியும்.
சுற்றுச்சூழல் பிரச்சினை குறித்த புகாரை
பதிவு செய்யும் காவல்துறை அதிகாரி, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து குற்றம் சாட்டப்பட்ட
நபரை கைது செய்து குற்றவியல் நடுவர் முன்பு முன்னிலைப்படுத்தலாம்.
ஆனால் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்த
பெரும்பாலான புகார்களை ஏற்க காவல்துறையினர் முன்வராத நிலையில் காவல்துறையில்
கொடுக்கப்பட்ட புகாரின் நகலுடன் நேரடியாக அருகிலுள்ள குற்றவியல் நடுவர்
(மாஜிஸ்டிரேட்) நீதிமன்றத்தை அணுகலாம்.
குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு
156 (3), ஒரு குற்ற சம்பவம் குறித்த புகாரைப் பெறும் குற்றவியல் நடுவர் அந்த
குற்றம் குறித்து விசாரித்து நடவடிக்கை
எடுக்குமாறு காவல்துறைக்கு உத்தரவு பிறப்பிக்கும் அதிகாரம் இருப்பதை
சுட்டிக்காட்டுகிறது.
இதேபோல் ஒரு குற்ற சம்பவம் குறித்து
தகவல் அறியும் குற்றவியல் நடுவர் அந்த குற்றச்சம்பவம் குறித்த விசாரணையை நடத்தும்
அதிகாரம் குறித்து குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 190 விளக்குகிறது.
இவ்வாறு குற்றவியல் நடுவரிடம்
முறையிடப்படும் குற்றம் குறித்து விசாரிப்பது குறித்து குற்றவியல் நடைமுறைச்
சட்டத்தின் பிரிவு 200 விளக்குகிறது.
இந்தப் புகாரை பெறும் குற்றவியல்
நடுவர் நீதிமன்றத்தில் புகார்தாரரையும், சாட்சிகள் எவரேனும் இருந்தால் அவர்களையும்
விசாரிப்பார். புகாரில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டிற்கு அடிப்படை முகாந்திரம்
இருக்கிறது என்ற அவர் நிறைவடைந்தால் காவல்துறை அதிகாரிகளிடம் அந்தப்புகார்
குறித்து விசாரிக்குமாறு உத்தரவிடலாம். அல்லது குற்றம் சாட்டப்பட்ட நபரை
நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு உத்தரவிட்டு, அவர்களை நேரடியாகவே விசாரிக்கவும்
செய்யலாம்.
இவ்வாறு துவங்கும் வழக்கு,
விசாரணையின் முடிவில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் குற்றவாளிக்கு
சிறைத்தண்டனை உள்ளிட்ட தண்டனை வழங்கும் அதிகாரமும் குற்றவியல் நடுவருக்கு உள்ளது.
குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு
156(3)இன் கீழ் புலன்கொள்ளக்கூடிய குற்றம் குறித்து புகார் அளிக்கப்பட்டால் அதை
உடனடியாக குற்றவியல் நடுவர் விசாரிக்க மாட்டார். அதற்கு பதிலாக உரிய காவல்துறை
அதிகாரிகள் அந்தப்புகார் குறித்து விசாரிக்க உத்தரவிடுவார்.
எனவே சுற்றுச்சூழல் பிரச்சினைகளால்
பாதிக்கப்படுபவர்கள், காவல்துறையினரிடம் அளிக்கப்படும் புகார் மீது உரிய நடவடிக்கை
மேற்கொள்ளப்படாத சூழலில் நேரடியாக குற்றவியல் நடுவரை அணுகலாம்.
இந்த
முயற்சியும் பலன் அளிக்காத நிலையில், காவல்துறைக்கு புகார் அளிக்கப்பட்டதையும்,
ஆனால் அந்தப்புகார் மீது காவல்துறையினர் உரிய நடவடிக்கை மேற்கொள்ளாததை
நிரூபிக்கும் ஆதாரங்களுடன் உயர்நீதிமன்றத்தில் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின்
பிரிவு 482ன் கீழ் வழக்கு தொடுக்கலாம். இந்த வழக்கின் உள்ளடக்கத்தில்
உயர்நீதிமன்றம் நிறைவடைந்தால், குறிப்பிட்ட காவல்துறை அதிகாரி அந்தப்புகார் மீது
முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரணையை தொடங்க உத்தரவிடப்படும்.
பொதுத்தொல்லை என்ற அம்சத்தின்கீழ்
குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் தொடுக்கப்படும் புகார்களைத் தவிர தண்ணீர்
சட்டம், காற்று சட்டம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம் ஆகியவற்றின் கீழ்
நடைபெறும் குற்றங்கள் தொடர்பாகவும் குற்றவியல் நடுவரிடம் புகார் செய்து வழக்கு
தொடரலாம்.
இத்தகைய புகார்களை –
வழக்குகளை முதலில் அருகிலுள்ள குற்றவியல் நடுவர் நீதிமன்றங்களிலேயே பதிவு செய்து
நிவாரணம் தேடுவதற்கு முயற்சி செய்யலாம். இதன் மூலம் சட்ட நடவடிக்கைக்கான காலம்,
பொருள் ஆகியவற்றை சேமிக்கலாம்.
(பூவுலகின் நண்பர்கள் வெளியிட்டுள்ள "சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கு சட்டத்தீர்வுகள் - உள்ளூர் நீதிமன்றம் முதல் உச்சநீதிமன்றம் வரை" என்ற நூலிலிருந்து...)