“இயற்கை வேளாண்மை என்பது சாத்தியமா?”
கேள்வி கேட்கப்பட்டவுடன் புருவத்தை நெறிக்கிறார்
நம்மாழ்வார்... பின் மெள்ள கூறுகிறார்...
-உங்கள் கேள்வியை முழுமையாக கேளுங்க, ஐயா!
-வேளாண்மை என்பதே இயற்கையை மாற்றி அமைக்கிற செயல்தானே...!
இதில் இயற்கை வேளாண்மை என்பது ஏமாற்று வேலை அல்லவா...?
-உண்மைதான் ஐயா... விவசாயம் என்பது இயற்கையை மாற்றி
அமைப்பதுதான். மேடுபள்ளமாக உள்ள நிலத்தை சமன்படுத்தி அதில் ஏர் உழுது பண்படுத்தி,
நீர்ப்பாசனத்திற்கான வேலைகளை செய்து விதைகளை விதைத்து செய்வது இயற்கையில் நடக்காததுதான்...
-பிறகு அதை இயற்கை விவசாயம் என்று சொல்வது ஏமாற்று வேலை
அல்லவா?
-இல்லை ஐயா... இங்கே இயற்கை என்பது இயற்கையான இடுபொருட்களை
பயன்படுத்தி செய்யப்படும் விவசாயம் என்பதுதான் பொருள். செயற்கையான ரசாயன உரங்களையோ,
பூச்சி மருந்துகளையோ பயன்படுத்தாமல் இயற்கையில் உருவான உரங்களையும், பூச்சிக்கட்டுப்படுத்திகளையும்
பயன்படுத்தி நஞ்சற்ற விவசாயம் செய்வதுதான் இயற்கை விவசாயம்...
-விவசாயம் என்பதை இயற்கைக்கு எதிரானது என்று இப்போதுதான்
ஒப்புக் கொண்டீர்கள்... அதற்குள் பேச்சை மாற்றுகிறீர்கள்... இதை ஏற்கமுடியாது...!
-உண்மைதான் ஐயா... இயற்கையில் மரங்களில் விளையும்
பழங்களையும், நிலத்தின் அடியில் இருக்கும் கிழங்குகளையும்தான் முதலில் மனிதன்
சாப்பிட்டான். காலப்போக்கில் தானியங்களை உட்கொள்ள ஆரம்பித்தான். தேவை பெருகியபோது
நிலத்தை சமன்படுத்தி விவசாயம் செய்ய ஆரம்பித்தான். அதில் வணிகம் நுழைந்தபோது
நச்சுத்தன்மை வாய்ந்த ரசாயன உரங்களும், பூச்சிக்கொல்லிகளும் பயன்படுத்தப்பட்டன.
அதை மாற்றுவதற்காக இயற்கையில் உருவான உரங்களையும், பூச்சிக்கட்டுப்படுத்திகளையும்
பயன்படுத்தும் முறை அறிமுகம் செய்யப்பட்டது. இயற்கையான பொருட்களைக் கொண்டு
செய்யப்படும் விவசாயம் என்ற பொருளில்தான் இயற்கை வேளாண்மை என்று கூறப்படுகிறது.
இது உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும் சொல்தான்....
-ஆனால் விவசாயம் என்பதை செயற்கையானதுதான்... இதில் இயற்கை
விவசாயம் என்பது மோசடியானது....
-ஐயா, தேவையான நேரங்களில் இயற்கையை பாதிக்காமல் சில
செயல்களை செய்வதில் தப்பில்லை. பறவைகள் முட்டையிட்டு குஞ்சு பொரிக்க இயற்கையில் இல்லாத கூடுகளை செயற்கையாக கட்டுவதில்லையா... அது மாதிரி இயற்கையை ரொம்பவும் பாதிக்காமல் சில விஷயங்களை
செய்யலாம்.... இயற்கையை நிரந்தரமாக அழிக்கும்படியான வேலைகளை செய்யக்கூடாது. ரசாயன உரங்களும்,
பூச்சி மருந்துகளும் அதோட நச்சுத்தன்மையால் இயற்கையை பாதிக்கிறது. அதை
தடுக்கத்தான் இயற்கை விவசாயம் தேவை என்று கூறுகிறோம்....
-ஆனாலும் விவசாயமே இயற்கை இல்லை என்னும்போது... இயற்கை
விவசாயம் என்பது ஏமாற்று வேலைதானே...
-உண்மைதான் ஐயா.... ஆனாலும் நீங்களும், நானும் உயிர்வாழ
எதையாவது சாப்பிட்டாக வேண்டுமே... நீங்கள் அணிந்திருக்கிற உடையும், கையில் வைத்திருக்கிற
செல்போனும்கூட இயற்கை பொருட்கள் இல்லை ஐயா... நீங்கள் இயற்கையில் விளைகிற
பொருட்களை இயற்கையாகவேதான் சாப்பிடறீங்களா... சமைத்து சாப்பிடுவீங்களா... அப்படியே சமைக்காமல் சாப்பிடுவீங்களா.... முழுவதும் இயற்கையாகவே வாழ வழி கண்டுபிடிச்சிட்டீங்கன்னா
எனக்கு சொல்லிக் கொடுங்க... நானும் முயற்சி செய்கிறேன்...
-நீங்கதானே இயற்கை வாழ்வியல், இயற்கை விவசாயம் அப்படின்னு
பேசிட்டு இருக்கீங்க...
....என்றவாறே அங்கிருந்து அகல ஆரம்பித்தார் அந்த ஜீன்ஸ்
இளைஞர்.
இதை
அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த நான், நம்மாழ்வாரிடம் “இதை எல்லாம்
எப்படி இவ்வளவு அமைதியாக கையாள்கிறீர்கள்” என்று கேட்டேன். சிரித்தார். “இந்த
தம்பிக்கு யார் மீதோ கோபம் இருக்கிறது. அதை அந்த இடத்தில் காட்ட முடியாது.
அதனால்தான் அவருக்கு பதில் தெரிந்த கேள்விகளை மீண்டும், மீண்டும் என்னிடத்தில்
கேட்டுக் கொண்டிருக்கிறார். நானும் பொறுமையாக மீண்டும், மீண்டும் சொல்லிக்
கொண்டிருக்கிறேன்” என்றார்.
அப்பொழுதுதான்
புரிந்தது, அந்த இளைஞர் நம்மாழ்வாரிடம் இந்த கேள்விகளை எழுப்புவது இது முதல்முறை
அல்ல என்பது!
இதைத்
தொடர்ந்து பூவுலகின் நண்பர்கள் நடத்திய முந்நீர் விழவு, ஐந்திணை விழா போன்ற
நிகழ்ச்சிகளிலும் நம்மாழ்வாரிடம் ஏறக்குறைய இதுபோன்ற கேள்விக்கணைகள்
தொடுக்கப்பட்டுள்ளன. அவரும் பல நேரங்களில் இதுபோன்ற கேள்விகளை மிகவும் பொறுமையாக
எதிர்கொண்டுள்ளார். ஆனால் நம்மாழ்வாரின்
எந்த பதிலும் அந்த கேள்வியின் நாயகனை திருப்தி அடைய செய்யாது. அப்படியானால்
அவர்கள் அடைய விரும்பும் பதில்தான் என்ன என்பதும் எனக்கு புரிந்ததில்லை. அதையும்
நம்மாழ்வாரிடம் கேட்டிருக்கிறேன். வழக்கம்போல் ஒரு அடர் சிரிப்புடன், “வக்கீல்
அய்யா... நீங்கள்தான் சட்டத்தோட உளவியலும் படிக்கிறதா சொல்லி இருக்கீங்களே...!
நீங்கள்தான் கண்டுபிடிச்சு எனக்கு சொல்ல வேண்டும்!” என்றார். நான் படித்த உளவியல்
பாடத்திட்டத்தில் மேற்கண்ட கேள்விக்கான பதிலை கண்டறியும் திறன் எனக்கு இல்லை. இடையில்
நம்மாழ்வாரும் மறைந்து விட்டார். ஆனால் கேள்வியின் நாயகர்கள் மட்டும் தொடர்ந்து
தங்கள் கேள்விக்கணைகளை வீசிக் கொண்டே இருக்கிறார்கள்.
அண்மையில்
இயற்கை விவசாயம் குறித்து நம்மாழ்வாரின் ஆலோசகர் பெர்னார்ட் டி கிளார்க், கோவாவைச்
சேர்ந்த சூழலியல் அறிஞர் கிளாட் ஆல்வாரிஸ், பேராசிரியர் சுல்தான் அகமது இஸ்மாயில்
ஆகியோர் சென்னையில் நடத்திய கலந்துரையாடலிலும் ஒரு கேள்வியின் நாயகன் கலந்து
கொண்டு தனது கணைகளை தொடுத்தார்.
![]() |
பேரா. சுல்தான் இஸ்மாயில், கிளாட் ஆல்வாரிஸ், பெர்னார்ட் டி கிளார்க் |
"கேள்வி கேள்!" என்றுதான் உலகத்தின் தலைசிறந்த சிந்தனையாளர்கள் அனைவரும் வலியுறுத்துகின்றனர். அதிகாரத்தை நோக்கி, ஆதிக்க சக்திகளை நோக்கி கேள்வி கேட்பது அடிப்படையான மனிதக் கடமையாகும். ஆனால் மக்களுக்காக உழைப்பவர்களிடம், பதில் தெரிந்த கேள்விகளை மீண்டும் மீண்டும் கேட்கும்போது ஒருவித அயர்ச்சி ஏற்படுகிறது.
இதே போல
செல்லுமிடமெல்லாம் கேள்விக்கணைகளை சந்திக்கும் மற்றொரு ந(ண்)பர் அணுஉலைக்கு எதிரான
மக்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சுப. உதயகுமார். அது குறித்து மற்றொரு
தருணத்தில்....
1 கருத்து:
மனிதரின் மனதையும் அறிந்து வைத்திருப்பது தான் ஐயாவின் சிறப்பு...
கருத்துரையிடுக