20 செப்டம்பர், 2016

டாடா முந்த்ரா அனல் மின் திட்டம் - அமெரிக்காவில் வழக்கு

சுற்றுச்சூழல் சட்டவியலின் அடிப்படையாக இரு கோட்பாடுகள் உள்ளன. 
1. முன்னெச்சரிக்கை கோட்பாடு, 
2. சூழலை சீரழிப்பவரே அதனை சீர் செய்ய வேண்டும். 
ஆனால் இதை செயல்படுத்துவதில் அரசுகளும், பெரும் வணிக நிறுவனங்களும் ஆர்வம் காட்டுவதில்லை. எனவே இந்த சட்டக்கூறுகளை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு நம்மிடம்தான் உள்ளது. 

வளர்ச்சி என்ற பெயரில் சூழல் பாதுகாப்பில் சமரசம் செய்துகொள்வதில் தவறில்லை என்று அரசு அமைப்புகள் கருதுகின்றன. அதேபோல சூழலை சீரழிப்பவருக்கு தண்டனை வழங்காமல் பாதுகாப்பது குறித்தும் அரசு அமைப்புகள் கவனம் செலுத்துகின்றன. உதாரணமாக அணுஉலை விபத்துகளுக்கான இழப்பீட்டை தருவதில் அணுஉலை தயாரிக்கும் நிறுவனங்களுக்கான பொறுப்பில் இருந்து விடுவிப்பதில் இந்திய அரசு அரசு காட்டும் ஆர்வத்தை பார்க்கலாம்.

இந்தியாவில் உள்ள சுற்றுச் சூழலியலாளர்கள் பலருக்கும் நீதிமன்றங்கள் என்றால் ஒரு விதமான ஒவ்வாமை உள்ளது. சூழல் பிரச்சினை குறித்து நீதிமன்றத்துக்கு சென்று, நீதிமன்றம் நாம் விரும்பாத ஒரு தீர்ப்பை வழங்கிவிட்டால் என்ன செய்வது என்ற கேள்வியை ஏறத்தாழ அனைத்து சூழல் ஆர்வலர்களும் எழுப்புவர்.

ஆனால் சுற்றுச்சூழலை பாதிக்கும் திட்டங்களை நிறுவுபவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் சட்டங்கள் நாள்தோறும் வலுவடையும் நேரத்தில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நீதி சார்ந்த சட்டங்களை உருவாக்கி வளர்த்தெடுக்காவிட்டால் அதற்கான இழப்பை நாம்தான் சந்திக்க நேரிடும்.

மனித உரிமை சட்டங்கள் இன்று ஓரளவிற்காவது மக்களுக்கு பயன்படும் அளவில் விரிவடைந்ததற்கு, அத்துறை சார்ந்த ஆர்வலர்களின் தொடர்ந்த சட்ட செயல்பாடுகளே காரணம். மக்களை ஒடுக்கும் சட்டவியலை வளர்த்தெடுப்பதில் அரசும், ஆதிக்க சக்திகளும் தொடர்ந்து செய்து வருகின்றன. அதற்கு போட்டியாகஇந்த தளைகளிலிருந்து மக்களை விடுவிக்கும் சட்டவியலை வளர்த்தெடுப்பதில் மனித உரிமை ஆர்வலர்களும் அயர்வின்றி செயல்பட்டு வருகின்றனர். இதன் விளைவாகவே மனித உரிமை சட்டவியல் தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வருகிறது.

சுற்றுச்சூழல் சட்டவியல் என்பதும் ஒரு வளரும் அறிவியல் துறைதான். சூழல் சட்டவியலும் மக்களுக்கு பயன்படும் அளவில் மாற வேண்டுமானால், சூழல் ஆர்வலர்களும் தொடர்ந்து நீதிமன்றங்களையும் போராட்டக்களமாக கருதி களமாடினால் மட்டுமே சாத்தியமாகும்.

இத்தகைய சம்பவம் ஒன்றை பார்ப்போம்.

இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் இந்தியர்கள் என்பதும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் தேடும் வழக்கு தொடரப்பட்டது அமெரிக்க நீதிமன்றத்தில் என்பதும் முக்கியமான மற்றும் சுவையான அம்சமாகும்.

இந்தியாவிலுள்ள டாடா நிறுவனம் பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் உள்ள கட்ச் மாவட்டம் முந்த்ரா துறைமுகப் பகுதியில் 17,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 4,000 மெகாவாட் மின் உற்பத்தி திறனுள்ள அனல்மின் நிலையம் அமைத்துள்ளது. டாடா முந்த்ரா திட்டம் என்று அழைக்கப்படும் கோஸ்டல் குஜராத் பவர் லிமிடெட் (Coastal Gujarat Power Limited) என்ற இந்த நிறுவனத்திற்கு  உலக வங்கியின் மற்றொரு அமைப்பான இன்டர்நேஷனல் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் (International Finance Corporation) கடந்த 2008ம் ஆண்டில் 450 மில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் 2 ஆயிரத்து 250 கோடி ரூபாய்) கடனாக வழங்கியுள்ளது.

உலக வங்கி பல்வேறு அரசு அமைப்புகளுக்கு கடன் கொடுப்பது அனைவரும் அறிந்ததே. உலக வங்கியின் மற்றொரு முகமான இன்டர்நேஷனல் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் வளரும் நாடுகளில் உள்ள தனியார் பெருந்தொழில் நிறுவனங்களுக்கு கடன் வழங்குகிறது. 

1956ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட இன்டர்நேஷனல் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷனில் தற்போது 184 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. தனியார் பெருந்தொழில் கழகங்களுக்கு கடனுதவி அளிப்பதன்மூலமாக 2030ம் ஆண்டில் உலகில் வறுமையை ஒழிக்க இந்த இன்டர்நேஷனல் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் உறுதி பூண்டுள்ளதாக அந்த அமைப்பின் இணைய தளம் தெரிவிக்கிறது. மேலும் சுற்றுச்சூழலையும், மக்களின் வாழ்வாதாரங்களை பாதிக்கும் திட்டங்களுக்கு நிதி உதவி வழங்குவதில்லை என்பது இந்த நிறுவனத்தின் முக்கிய கொள்கைகளில் ஒன்றாகும்.

இன்டர்நேஷனல் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷனில் கடன் பெற்றுள்ள டாடா முந்த்ரா திட்டம் தொடங்கப்பட்டுள்ள நாவினல் கிராம பஞ்சாயத்தில் சுமார் 800 வீடுகள் உள்ளன. சுமார் 3000 பேர் இந்த கிராமத்தில் வசிக்கின்றனர். விவசாயம், கால்நடை வளர்த்தல், மீன் பிடிப்பு, உப்பு சேகரித்தல் ஆகியவை இப்பகுதி மக்களின் தொழில்களாகும்.

இந்த மின் நிலையம் கடந்த 2012ம் ஆண்டில் உற்பத்தியை துவக்கியபோதே கணிசமானோர் அவர்கள் காலம்காலமாக வசிக்கும் பகுதிகளிலிருந்து இடம் பெயர்க்கப்பட்டனர். தற்போது இந்த நிறுவனத்தின் செயல்பாடுகளால் அப்பகுதியின் சுற்றுச்சூழலும், அப்பகுதியில் வசிக்கும் மக்களின் வாழ்வாதாரமும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதிவாழ் மக்கள் கூறுகின்றனர்.

இந்த மின் உற்பத்தி மையத்தில் ஆண்டொன்றுக்கு சுமார் 12-13 மில்லியன் டன் நிலக்கரி எரிக்கப்படுகிறது. இந்த நிலக்கரி இந்தோனேஷியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு கிட்டங்கிகளில் சேகரிக்கப்பட்டு பின் மின் உற்பத்தி மையத்திற்கு கன்வேயர் பெல்ட்கள் மூலம் எடுத்துச் செல்லப்படுகிறது. இவ்வாறு நிலக்கரியை சுமார் 15 கிலோமீட்டர் தூரத்திற்கு சரியாக மூடப்படாத கன்வேயர் பெல்ட்கள் மூலம் கொண்டுவருவதாலும், மின் உற்பத்திக்காக எரிக்கப்படும் நிலக்கரியின் சாம்பலாலும் காற்று, நிலம், நீர் ஆகிய அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். வீடுகள், விளை நிலங்கள், நீர் நிலைகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் கரித்துகள்களும், சாம்பல் துகள்களும் நிரம்பி இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இதனால் அப்பகுதி வாழ் மக்களின் முக்கிய தொழில்களான விவசாயமும், மீன்பிடிப்பும் முற்றிலும் அழியும் அபாயத்தில் உள்ளதாகவும் அவர்கள் அஞ்சுகின்றனர். மேலும் அப்பகுதி வாழ் மக்கள் ஆஸ்துமா, தோல் நோய்கள் உள்ளிட்ட பல்வேறு விதமான நோய்களால் பாதிக்கப்படுவதாகவும் தெரிகிறது. அண்மைக் காலமாக இறப்பு வீதம் அதிகரித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும் இந்த மின் உற்பத்தி மையத்தில் குளிர்விப்பானாக பயன்படும் கடல்நீரை, அவ்வாறு பயன்படுத்திய பின்னர் ஒரு விநாடிக்கு சுமார் 6175 கன அடி நீரை கொதிநிலையில் கடலில் கலக்கும்போது கடலில் வசிக்கும் மீன்கள் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்கள் அழிக்கப்படுகின்றன. இதனாலும் அப்பகுதி மீனவர்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். மேலும் கடல்நீர் நாவினல் கிராமத்தின் நிலத்தடி நீர்வளத்தை அழித்துவிட்டதாகவும், தற்போது குடிநீருக்கு தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

இவ்வாறான பாதிப்புகள் ஏற்படும் என்பது இந்த மின் திட்டம் அமைவதற்கு முன்பே டாடா நிறுவனத்திற்கும், இந்த திட்டத்திற்கு சுற்றுச்சூழல் உள்ளிட்ட அனுமதிகளை வழங்கிய அனைத்து அரசுத்துறைகளுக்கும் நன்கு தெரியும். அதேபோல இந்த திட்டத்திற்கு நிதி உதவி வழங்கிய இன்டர்நேஷனல் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷனுக்கும் இந்தப் பிரசினைகள் நன்கு தெரியும். கடந்த 2007ம் ஆண்டுமுதலே நிதிநிறுவனத்தின் அதிகாரிகள் இந்தப்பகுதியில் பலமுறை ஆய்வு செய்து சமூகப் பாதிப்புகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து அறிக்கை அளித்துள்ளனர்.

டாடா முந்த்ரா அனல் மின் திட்டத்தால் ஏற்பட வாய்ப்புள்ள சமூக மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகளை உரிய முறையில் கையாண்டு அப்பகுதிவாழ் மக்களின் வாழ்வாதாரங்கள் பாதிக்காமல் பாதுகாப்பு அளிப்பதாக டாடா நிறுவனம் உறுதி அளித்ததன் பேரில்தான் இந்த கடன் வழங்கப்பட்டது. ஆனால் அதற்கான எந்த முயற்சியையும் டாடா நிறுவனம் மேற்கொள்ளவில்லை. கடன் வழங்கிய இன்டர்நேஷனல் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனமும் இதை கண்டுகொள்ளவில்லை.

மேலும் இந்தோனேஷியாவிலிருந்து மிகக்குறைவான சாம்பலை வெளியிடும் உயர்தர நிலக்கரியை இறக்குமதி செய்வதன் மூலம் மலிவான விலையில் மின்சாரத்தை உற்பத்தி செய்யமுடியும் என்று டாடா நிறுவனம் கூறி வந்தது. ஆனால் ஏற்றுமதி செய்யப்படும் நிலக்கரிக்கான விலையை இந்தோனேஷியா அரசு அதிகரித்துள்ளது. எனவே அதிகளவில் சாம்பலை வெளியிடும் தரக்குறைவான நிலக்கரியை டாடா நிறுவனம் பயன்படுத்துகிறது.

இந்நிலையில் அமெரிக்காவிலுள்ள எர்த் ரைட்ஸ் இன்டர்நேஷனல்” (Earth Rights International) என்ற சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு இப்பகுதி மக்களின் பிரச்சினையை தீர்ப்பதற்காக புதுமையான சட்ட முயற்சி ஒன்றை மேற்கொண்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பகுதியின் உள்ளாட்சி நிர்வாகமான நவினல் பஞ்சாயத்து மற்றும் மீனவர்கள் தொழிற்சங்கமான மச்சிமார் அதிகார் சங்கார்ஷ் சங்காதன் ஆகியவற்றின் உதவியுடன் அப்பகுதியில் வசிக்கும் விவசாயிகள் மற்றும் மீனவர்கள் சார்பாக அமெரிக்காவின் கொலம்பியா மாவட்ட நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான இழப்பீடு கேட்டு வழக்கு தொடர்ந்தது. இந்த நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்குள்தான் இன்டர்நேஷனல் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷனின் நிர்வாக அலுவலகம் அமைந்துள்ளது. 

இந்த நிதிநிறுவனம் கடன் வழங்குவதற்கான நெறிமுறைகளை முறையாக பின்பற்றி இருந்தால், முந்த்ரா பகுதி மக்களுக்கு சுற்றுச்சூழல் மற்றும் வாழ்வாதார பிரச்சினைகள் ஏற்பட்டிருக்காது. இந்த திட்டத்திற்கு கடன் அளித்ததன் மூலம் இத்திட்டத்தை மதிப்பீடு செய்வதற்கு, அறிவுரை கூறுவதற்கு, அந்த அறிவுரைகள் பின்பற்றப்படுவதை கண்காணிப்பதற்கு நிதி நிறுவனத்திற்கு முழு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த அதிகாரங்களை நிதிநிறுவனம் உரியமுறையில் பயன்படுத்தி இருந்தால் அப்பகுதி மக்களுக்கு இத்தனை இழப்புகள் ஏற்பட்டிருக்காது. எனவே நெறிமுறைகளை உரியமுறையில் கடைபிடிக்காமல் டாடா நிறுவனத்திற்கு கடனுதவி வழங்கியதன் மூலம் விவசாயிகளுக்கும், மீனவர்களுக்கும் பிரச்சினை ஏற்பட காரணமாக இருந்த இன்டர்நேஷனல் ஃபைனானஸ் கார்ப்பரேஷன், பாதிக்கப்பட்டவர்கள் ஒவ்வொருவருக்கும் 75,000 அமெரிக்க டாலர்கள் இழப்பீட்டை வழங்க வேண்டும் என்று இந்த வழக்கில் கூறப்பட்டுள்ளது. இத்துடன் இப்பகுதியில் வசிக்கும் அனைத்து மக்களுக்கான மருத்துவ உதவிக்கான செலவுத்தொகையை இன்டர்நேஷனல் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் ஏற்க வேண்டும் என்றும் இந்த வழக்கில் கோரப்பட்டுள்ளது. மேலும் டாடா முந்த்ரா மின் உற்பத்தி நிலையம் தொடர்ந்து இயங்குவதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் இந்த வழக்கில் கோரப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் கொலம்பியா மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த 2016 மார்ச் மாதம், இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. வெளிநாட்டு அரசுகளுக்கு எதிராக அமெரிக்காவின் மாவட்ட நீதிமன்றங்களில் வழக்கு தொடுக்க முடியாது. இத்தகைய வழக்கு தொடுப்பதற்கு எதிரான பாதுகாப்பு” (Absolute Immunity), பன்னாட்டு நிதியுதவி அமைப்பான இன்டர்நேஷனல் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷனுக்கும் உள்ளது. எனவே இந்த வழக்கை கொலம்பியா மாவட்ட நீதிமன்றம் விசாரிக்க இயலாது என்ற உலக வங்கியின் வாதத்தை ஏற்று இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

எனினும் இந்த வழக்கை மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்லவிருப்பதாக இந்த வழக்கின் மனுதாரர்களும், எர்த் ரைட்ஸ் இன்டர்நேஷனல் என்ற சுற்றுச்சூழல் அமைப்பும் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கில் முதல் சுற்றிலேயே வெற்றி கிடைக்காது என்று தெரிந்தே இந்த வழக்கு தொடர்ந்ததாகவும் அவர்கள் கூறுகின்றனர். ஏற்கனவே Atkinson Vs. Inter-American Development Bank என்ற வழக்கில் இன்டர்நேஷனல் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் போன்ற நிறுவனங்கள் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முடியாது என்ற வாதம் முறியடிக்கப்பட்டுள்ளது என்று இவர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஒரு வெளிநாட்டு அரசு, அரசியல்ரீதியான நடவடிக்கை எடுக்கும்போது அந்த அரசுக்கு எதிராக வழக்கு தொடுக்க முடியாது என்பதுதான் உண்மை. வணிகச் செயல்பாடுகளில் ஈடுபடும் உலக வங்கியின் துணை அமைப்புகளுக்கு இந்த வழக்கு தொடுப்பதற்கு எதிரான பாதுகாப்புசெயல்படாது என்றும் மனுதாரர்களும், அவர்களது சட்ட நிபுணர்களும் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

தனியார் நிறுவனங்களின் வளர்ச்சிக்காக, சமூக வளர்ச்சியை பலியிட முடியாது. மேலும் இன்டர்நேஷனல் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன், வளரா நாடுகளில் வறுமையை ஒழிப்பதாக கூறிக்கொண்டு இயற்கை வளங்களை சீரழிக்கும் திட்டங்களுக்கு உதவி செய்வதை ஏற்க முடியாது.  எனவே கொலம்பியா மாவட்ட நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு எதிராக மேல் முறையீட்டு  நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் பெற்றுத் தர இறுதிவரை முயற்சி செய்வோம் என்று எர்த் ரைட்ஸ் இன்டர்நேஷனல் அமைப்பின் சட்ட வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

சுற்றுச்சூழல் நீதி தொடர்பான வழக்குகளின் முதற்கட்ட தோல்வியில் துவண்டு, செயலற்று இருந்துவிட்டால் சுற்றுச்சூழல் சட்டவியல் வளர்ச்சி அடையாமல் தேங்கி நின்று விடக்கூடும். சட்டரீதியான போராட்டங்களை தொடர்ந்து நடத்துவதற்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் முன்வந்தால் மட்டுமே சுற்றுச்சூழல் சட்டவியலை வளர்த்தெடுக்க முடியும்.

(பூவுலகு, செப்டம்பர் 2016 இதழில் வெளியிடப்பட்ட கட்டுரை)


09 செப்டம்பர், 2016

இரண்டாவது மனைவியின் மகனுக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை கிடைக்குமா?

ரே மாதிரியான பிரச்சினைகளுக்கு வெவ்வேறு நீதிபதிகள் வெவ்வேறான தீர்ப்புகளை சொல்வதுண்டு. நீதிபதிகளின் தனிப்பட்ட நிலைப்பாடு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இந்த தீர்ப்புகளில் எதிரொலிக்கும். அத்தகைய உதாரணம் ஒன்றை பார்ப்போம்.

தூத்துக்குடியைச் சேர்ந்த மலையப்பன் என்பவர் காவல்துறை துணை ஆய்வாளராக பணியாற்றி வந்தார். இவர் கடந்த 08.04.2008 அன்று ஒரு விபத்தில் மரணம் அடைந்தார். இவருக்கு இரண்டு மனைவிகளும், இரண்டாம் மனைவி மூலம் பிறந்த ஒரு மகனும், இரு மகள்களும் இருந்தனர். முதல் மனைவிக்கு குழந்தை இல்லாததால், அவரது சம்மதத்துடன் அவரது சகோதரியையை திருமணம் செய்திருந்தார்.

தற்போது குடும்பச்சுமையை சுமக்க வேண்டிய நிலையில் இரண்டாவது மனைவி மூலம் பிறந்த மகன் முத்துராஜ், காவல்துறையில் தனக்கு கருணை அடிப்படையில் பணி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். ஆனால் அவரது தந்தை செய்து கொண்ட இரண்டாவது திருமணம் “செல்லாத் திருமணம்” ஆகும் என்பதால் இந்த திருமணம் மூலம் பிறந்த மகனுக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்க முடியாது என்று காவல்துறை தெரிவித்தது.

இதையடுத்து தனக்கு கருணை அடிப்படையில் பணி வழங்குமாறு காவல்துறைக்கு உத்தரவிடக்கோரி முத்துராஜ் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு (W.P. (MD) No.3502/2011) தொடர்ந்தார். இந்த வழக்கில் இந்து திருமணச் சட்டத்தின் படி சட்டமுறையில் நடைபெறாத திருமணம் மூலம் பிறந்த வாரிசுகளுக்கும் தந்தையின் சொத்தில் பங்கு உள்ளது. இதன் அடிப்படையில் தனக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்கப்பட வேண்டும் என்று கோரப்பட்டது.

ஆனால் அரசுத்தரப்பில் இந்த வாதம் மறுக்கப்பட்டது. சில மதங்கள் பல தார திருமணத்தை அனுமதித்தாலும் கூட தமிழ்நாடு அரசு “ஒருவருக்கு ஒரு வாழ்க்கைத்துணை” என்ற கோட்பாட்டை அரசின் கொள்கை முடிவாக அறிவித்துள்ளது. தவிர்க்க இயலாத சூழ்நிலையில் இரண்டாம் திருமணம் செய்யும் நபர்கள் அரசிடம் முன் அனுமதி பெற வேண்டும். மேலும் கருணை அடிப்படையிலான வேலை என்பதை சொத்தாக கருத முடியாது. எனவே இந்த மனுதாரருக்கு கருணை அடிப்படையில் காவல்துறையில் பணி வழங்க முடியாது என்று அரசுத் தரப்பில் எடுத்துரைக்கப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா கடந்த 27.04.2016 அன்று அரசுத் தரப்பு வாதங்களை அங்கீகரித்து வழக்கை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தார்.

***

சென்னையைச் சேர்ந்த சுரேஷ் பாபு என்பவர் அவரது தந்தையாரின் இரண்டாவது மனைவி மூலம் பிறந்த மகனாவார். சென்னை மெட்ரோ வாட்டர் நிறுவனத்தில் பணியாற்றிய அவரது தந்தையார் இறந்துவிடவே தமக்கு கருணை அடிப்படையில் பணி வழங்க வேண்டும் என்று அவர் மெட்ரோ வாட்டர் நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்தார். சுரேஷ் பாபுவிற்கு சென்னை மெட்ரோ வாட்டர் நிர்வாகத்தில் பணி வழங்குவதில் தங்களுக்கு எந்தவிதமான தடையும் இல்லை என்று அவரது தந்தையாரின் முதல் மனைவி மூலம் பிறந்த வாரிசுகளும் ஒப்புதல் கடிதம் அளித்திருந்தனர். ஆனால் இரண்டாம் மனைவி மூலம் பிறந்த வாரிசுக்கு பணி வழங்க முடியாது என்று சென்னை மெட்ரோ வாட்டர் நிர்வாகம் மறுப்பு தெரிவித்தது.

இதையடுத்து சுரேஷ்பாபு சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு (W.P.9010/2013) தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கே. ரவிச்சந்திரபாபு, மனுதாரரின் தந்தை காலமான நிலையில் அவரது முதல் மனைவியோ, அவரது வாரிசுகளோ உரிமை கோராத நிலையில் மனுதாரருக்கு பணி வழங்குவதில் பிரச்சினை இல்லை. எனவே மனுதாரர் சுரேஷ்பாபுவுக்கு சென்னை மெட்ரோ வாட்டர் நிறுவனத்தில் பொருத்தமான வேலை வழங்க வேண்டும் என்று 07.02.2014 அன்று தீர்ப்பளித்தார். ஆனால் சென்னை மெட்ரோ வாட்டர் நிறுவனம் இந்த தீர்ப்பை கண்டுகொள்ளவில்லை. எனவே மனுதாரர் சுரேஷ்பாபு, சென்னை மெட்ரோ வாட்டர் நிறுவனத்திற்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இதைத் தொடர்ந்து நீதிபதி கே. ரவிச்சந்திரபாபு அளித்த தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று சென்னை மெட்ரோ வாட்டர் நிறுவனம் சார்பில் சீராய்வு மனு (Review Application No.105 of 2015) பதிவு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி கே. ரவிச்சந்திரபாபு, தாம் முன்னர் அளித்த தீர்ப்பை உறுதி செய்து சீராய்வு மனுவை தள்ளுபடி செய்தார்.

இதையடுத்து இந்த தீர்ப்பிற்கு எதிராக மேல்முறையீட்டு மனுவை (W.A. No.1764/2015) சென்னை மெட்ரோ வாட்டர் நிறுவனம் பதிவு செய்தது.

இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஹுலுவாடி ஜி. ரமேஷ் மற்றும் எம். வி. முரளிதரன் ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த 18.07.2016 அன்று தீர்ப்பளித்தது.

தந்தையை இழந்த சுரேஷ்பாபு அவரது தாயாரையும் மற்ற குடும்பத்தினரையும் பராமரிக்க வேண்டிய நிலையில் உள்ளார். குடும்பத்தலைவரை இழந்துள்ள குடும்ப உறுப்பினர்களை பராமரிக்கும் நோக்கத்தில்தான் கருணை அடிப்படையில் பணி வழங்கப்படுகிறது. இந்தப் பணி வழங்கப்படும் நபர் இறந்தவரின் சட்டப்பூர்வமான மகன்தானா என்பதைவிட, அவருக்கு பணி வழங்கப்படுவதால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பத்திற்கு மறுவாழ்வு கிடைக்குமா என்பதை பரிசீலிப்பதே முக்கியம்.

இந்த வழக்கில் மனுதாரர் சுரேஷ்பாபுவிற்கு பணி வழங்குவதில் அவரது தந்தையாரின் முதல் மனைவிக்கோ, அவரது வாரிசுகளுக்கோ தடை ஏதும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சுரேஷ்பாபுவுக்கு பணி வழங்குவதில் சிக்கல் ஏதுமில்லை. இந்த முடிவிற்கு ஆதரவாக பல்வேறு முன்மாதிரி தீர்ப்புகள் சென்னை உயர்நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் உள்ளன. எனவே சென்னை மெட்ரோ வாட்டர் நிறுவனம் தொடர்ந்துள்ள மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.


தந்தையை இழந்த சுரேஷ்பாபுவிற்கு சென்னை மெட்ரோ வாட்டர் நிறுவனத்தில் பணி வழங்க வேண்டும் என்று நீதிபதி கே. ரவிச்சந்திரபாபு வழங்கிய தீர்ப்பு உறுதி செய்யப்படுகிறது. 


***

றத்தாழ ஒரே மாதிரியான பிரச்சினையில் ஒரே நீதிமன்றத்தைச் சேர்ந்த இரு நீதிபதிகள் வெவ்வேறான முரண்பட்ட நிலைப்பாட்டை எடுப்பது சட்டத்துறை சாராதவர்களுக்கு வியப்பை ஏற்படுத்தலாம். சட்டக் கோட்பாடுகளுக்கு விளக்கம் அளிக்க வேண்டிய உயர்நீதிமன்ற நீதிபதிகளின் பார்வை அவர்கள் சார்ந்த சமூகம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களிலிருந்தே உருவாகிறது. எனவே இதுபோன்ற முரண்பட்ட பார்வைகள் ஏற்படுவது மிகவும் இயல்பான அம்சமே!

அதேபோல நாட்டில் உள்ள அனைத்துச் சட்டங்களையும், பல்வேறு நீதிமன்றங்கள் வழங்கும் அனைத்து முன்மாதிரி தீர்ப்புகளையும் உடனுக்குடன் படித்து தெரிந்து வைத்துக்கொள்வது நீதிபதிகளுக்கும், வழக்கறிஞர்களுக்கும் சாத்தியமல்ல. வழக்குத் தொடுப்பவரின் வழக்கறிஞர் குறிப்பிட்ட வழக்குப் பிரச்சினை குறித்து செய்யும் ஆய்வுகளும், மேற்கோள் காட்டும் முன்மாதிரி தீர்ப்புகளுமே சரியான தீர்ப்பை வழங்குவதற்கு நீதிபதிக்கு உதவி செய்யும்.


இந்நிலையில் முதலில் பார்த்த வழக்கு, மேல்முறையீடு செய்யப்படும்போது உரியமுறையில் சரியான முன்மாதிரித் தீர்ப்புகளை மேற்கோள் காட்டி வாதிடும்போது நல்ல தீர்ப்பு கிடைக்கும் வாய்ப்பு இருக்கிறது. 

பந்த் நேர பயணத்தில் கண்ணை இழந்தவருக்கு 10 இலட்ச ரூபாய் இழப்பீடு – 15 ஆண்டுகளுக்கு பின்னர்...

கோவையில் வசிக்கும் எஸ். கிருஷ்ணசாமி மதுரையில் உள்ள ஒரு தனியார் வங்கியில் பணியாற்றி வந்தார். வார இறுதியான சனிக்கிழமை இரவு கோவை சென்று குடும்பத்தோடு தங்கிவிட்டு திங்கள்கிழமை அதிகாலை மதுரைக்கு திரும்பிச் செல்வதை வழக்கமாக்கி வைத்திருந்தார்.

கடந்த 30-06-2001 சனிக்கிழமை அன்று இரவு கிருஷ்ணசாமி வழக்கம்போல சொந்த ஊரான கோவைக்கு சென்றுவிட்டார். 2ம் தேதி திங்கட் கிழமை காலையில் அவர் பணியில் இருக்க வேண்டும். எனவே 01-07-2001 அன்று இரவு தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் பேருந்தில் பயணம் மேற்கொண்டார்.இதற்கிடையில் திமுக தலைவர் மு.கருணாநிதி  கைது செய்யப்பட்டிருந்தார். இதையடுத்து 02-07-2001 அன்று முழு அடைப்புப் போராட்டத்திற்கு திமுக அழைப்பு விடுத்திருந்தது. ஆனால் அரசுத் தரப்பிலோ குறிப்பிட்ட நாளில் பேருந்து உள்ளிட்ட அனைத்து அத்தியாவசியத் தேவைகளும் தடையின்றி இயக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டிருந்தது. இது பரவலாக செய்தி ஊடகங்களிலும் வெளியிடப்பட்டது.

கோவை பேருந்து நிலையத்திற்கு 01-07-2001 அன்று மாலை 6 மணியளவில் வந்து சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, திமுக அழைப்பு விடுத்துள்ள போராட்டத்தால் பயணம் பாதிக்கப்படுமா என்று அரசுப் போக்குவரத்துக்கழக அதிகாரிகளிடம் கேட்டதற்கு, “பயப்பட தேவையில்லை” என்ற பதில் கிடைத்துள்ளது. இதையடுத்து பேருந்து ஓட்டுனரின் இருக்கைக்கு பின்புறமுள்ள இருக்கையில் அமர்ந்து பயணத்தை துவக்கினார் கிருஷ்ணசாமி. அவர் திட்டமிட்டபடி பயணம் நிறைவடைந்திருந்தால் நள்ளிரவு 12 மணியளவில் மதுரையில் உள்ள அவரது அறைக்கு சென்றிருப்பார்.

ஆனால் மதுரைக்கு செல்லும் வழியில் உள்ள பரவை என்ற இடத்தை பேருந்து கடந்தபோது ஒரு கல் பறந்து வந்து அவரது முகத்தை கடுமையாக தாக்கியது. இதில் கிருஷ்ணசாமியின் இடது கண் கோளம் முழுமையாக வெளியே வந்து விழுந்தது. மேலும் முகத்தில் சில எலும்புகள் முறிவடைந்தன. உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கிருஷ்ணசாமியின் இடது கண் அடுத்த நாள் அதாவது 02-07-2001 அன்று அகற்றி எடுக்கப்பட்டது. மேலும் முகத்தில் ஏற்பட்ட பல்வேறு எலும்பு முறிவுக் காயங்களுக்கு சிகிச்சை தொடங்கப்பட்டது.

வயதான பாட்டி மற்றும் கணவரை இழந்த தாய், மனைவி,  இரு குழந்தைகள் ஆகியோருக்கான ஒரே ஆதாரமாக விளங்கிய கிருஷ்ணசாமி 44 வயதிலேயே முடங்கிப் போனார். தலையில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக அவரால் தொடர்ந்து வழக்கம் போல பணியாற்ற முடியவில்லை. மருத்துவ செலவுகளும் சமாளிக்க முடியாமல் இருந்தது. இந்நிலையில் தனக்கு ஏற்பட்ட இழப்புகளுக்கு உரிய நிவாரணமாக 25 லட்ச ரூபாயை வழங்க வேண்டும் என்று கிருஷ்ணசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு (W.P. No.40800/2002) தொடர்ந்தார்.

திமுக முழு அடைப்புப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தாலும், மாநிலத்தில் போதிய பாதுகாப்பு அளிக்கப்பட்டு சட்டம்-ஒழுங்கு நிலைநாட்டப்படும் என்று அரசு உறுதி அளித்திருந்தது. மேலும் அரசுப் போக்குவரத்துக்கழக அதிகாரிகளும் பாதுகாப்பான பயணத்திற்கு உறுதி அளித்திருந்தனர். ஆனால் அரசுதனது கடமையை – பொறுப்பை நிறைவேற்றுவதில் தோல்வி அடைந்துவிட்டது. இதன் காரணமாகவே தாம் ஒரு கண்ணை இழந்துவிட்டதாகவும், மருத்துவ செலவுகளுக்காக சுமார் 5 லட்ச ரூபாய் வரை செலவு செய்துள்ளதாகவும், ஆதரவற்ற பாட்டி, தாய் ஆகியோருடன் மனைவி மற்றும் இரு குழந்தைகளை பராமரிக்க வேண்டிய நிலையில் அன்றாட வேலைகளைக்கூட சுயமாக செய்யும் நிலையில் தாம் இல்லை என்பதை சுட்டிக்காட்டிய கிருஷ்ணசாமி தனக்கான இழப்பீடாக 25 லட்ச ரூபாயை  எதிர்மனுதாரர்களான தமிழ்நாடு அரசும், அரசுப் போக்குவரத்துக் கழகமும் இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரியிருந்தார்.

ஆனால் தமிழ்நாடு அரசின் உள்துறை மற்றும் போக்குவரத்துத்துறை சார்பில் வாதிட்ட வழக்கறிஞர் பயணிகளின் சொந்தப் பொறுப்பிலேயே பயணம் மேற்கொள்ளப்பட்டது என்று கூறினார். பயணத்தின் இடையே பிரச்சினைகளோ, விரும்பத்தகாத நிகழ்வுகளோ ஏற்பட்டால் அதன் விளைவுகளை பயணிகளே சந்திக்க வேண்டும் என்று கூறப்பட்டதாகவும், பாதுகாப்பற்ற பயணத்தை பயணிகளே தேர்வு செய்ததாகவும் குறிப்பிட்டார். போக்குவரத்துக் கழகம் சார்பில் வாதிட்ட வழக்குரைஞர், பயணிகளின் வேண்டுகோள் காரணமாகவே பேருந்து இயக்கப்பட்டதாகவும், எதிர்பாராத சம்பவத்திற்கான இழப்பீட்டை போக்குவரத்துக் கழகம் ஏற்க முடியாது என்றும் வாதிட்டார். எனவே இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று எதிர்மனுதாரர்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் (பல்வேறு நீதிபதிகள்) கேட்ட பின்னர் கடந்த 02.08.2016 அன்று நீதிபதி எம். சத்யநாராயணன் தீர்ப்பு வழங்கியுள்ளார்.

இந்த தீர்ப்பில், வழக்கிற்கு மூலகாரணமான கல்லெறிதல் சம்பவத்திற்கு காரணமானவர்கள் என்று கருதப்படும் இருவர் மீது சமயநல்லூர் காவல் நிலையத்தில் குற்ற வழக்கு (எண்:159/2001) தொடரப்பட்டுள்ளது. ஆனால் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஏதோ காரணங்களுக்காக இந்த வழக்கில் மேல்முறையீடு செய்யப்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

பந்த் நாளன்று மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாது என்று அரசுத்தரப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியத் தேவைகள் உரியமுறையில் நிறைவேற்றப்படும் என்றும் அரசுத் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதை நம்பி பேருந்துப் பயணம் மேற்கொண்ட மனுதாரர், கல்லெறிதல் சம்பவத்தில் கொடுங்காயம் அடைந்ததுடன், ஒரு கண்ணையும் இழந்துள்ளார். தாடை எலும்புகள் உடைந்து பல்வறு மருத்துவ சிகிச்சைகளுக்கு ஆட்பட்டுள்ளார். இதன் காரணமாக உடல் ரீதியாகவும், உள்ள ரீதியாகவும் பெரும் இழப்பை சந்தித்துள்ளார். இந்நிலையில் தமக்கும், குடும்பத்தினருக்கும் ஏற்பட்ட இழப்பை ஈடு செய்யும் வகையில் 25 லட்ச ரூபாயை இழப்பீடாக வழங்க வேண்டும் என்று அவர் கோரியுள்ளார். அவரது கோரிக்கையை பரிசீலித்த இந்த நீதிமன்றம் அவருக்கு 10 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்குமாறு தமிழ்நாடு அரசின் உள்துறைக்கு உத்தரவிடுகிறது. இந்த வழக்கு தொடரப்பட்ட நாளிலிருந்து 7.5 சதவீத வட்டியோடு கூடிய இழப்பீட்டுத் தொகையை இரண்டு மாதங்களுக்குள் வழங்க வேண்டும். மேலும் இழப்பீடு தேவைப்பட்டால் உரிய உரிமையியல் நீதிமன்றத்தை அணுகுவதற்கு மனுதாரருக்கு உள்ள உரிமை இந்த தீர்ப்பால் பாதிக்கப்படாது.

இந்த வரவேற்கத் தக்க தீர்ப்பின் வரவேற்க இயலாத ஒரு அம்சம், இந்த வழக்கு நிறைவடைய எடுத்துக்கொண்ட கால அவகாசம்! வழக்கு தொடர்ந்து சுமார் 15 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில்தான் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த 15 ஆண்டுகளை திரு. கிருஷ்ணசாமியின் குடும்பத்தினர் எவ்வாறு கடந்தனர் என்பது அவர்களுக்கு மட்டுமே தெரிந்த துயர அனுபவங்களாக இருக்கலாம்.08 செப்டம்பர், 2016

பழனி மலை கிரிவலப்பாதையில் புலால் உணவு உண்ண தடை விதிக்க முடியாது! - சென்னை உயர்நீதிமன்றம்

மத நம்பிக்கைகளை கேள்விக்கு உட்படுத்துவதில் நாத்திகர்களைவிட ஆத்திகர்களே எப்போதும் முன்னிலை வகிப்பார்கள். அதிலும் மத்திய ஆட்சியில் பாரதிய ஜனதா அமர்ந்தவுடன் இது மேலும் தீவிரமாகி உள்ளது. இந்து மதம் என்பதை தற்போதைய பார்ப்பனீய பண்பாட்டு மதமாக கட்டமைப்பதில் பல்வேறு முயற்சிகள் நடந்து வருகின்றன. குறிப்பாக புலால் உணவு உண்பவர்களை இழிவுபடுத்தி, மரக்கறி உணவு மட்டுமே உயர்வாக கட்டமைக்கும் முயற்சி தொடர்ந்து நடைபெறுகிறது.

இதில் இந்துக் கடவுளர்களும் தப்புவதில்லை. சிற்பங்களிலும், ஓவியங்களிலும் வேட்டைக்கு உதவும் வேல் ஆயுதத்தோடு எப்போதும் காட்சி அளிக்கும் முருகக் கடவுளை புலால் மறுப்பாளராக உருவாக்கி விடுவார்கள் போலிருக்கிறது. வேட்டையை தொழிலாகக் கொண்ட வேடர் குலப்பெண்ணை மணம் புரிந்துள்ளதாக பக்தர்களால் நம்பப்படும் பழனி முருகன் கோவில் அருகே புலால் உண்பதால் இந்துகளின் மத நம்பிக்கை இழிவுப்படுத்தப்படுவதாக ஒரு (பொதுநல) வழக்கு.


தம்மை வழக்கறிஞர் என்று கூறிக்கொள்ளும் கோபிநாத் என்பவர் ஹிந்து முன்னேற்ற கழகம் என்ற அமைப்பின் தலைவர் என்ற பெயரில் இந்த வழக்கை பொதுநல வழக்காக சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பதிவு செய்துள்ளார்.

பழனி முருகன் கோவில் மிகவும் புனிதத்தன்மை கொண்டதாகவும், இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த கோவிலுக்கு வந்து செல்கின்றனர் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.  

இந்த முருகன் கோவில் அமைந்துள்ள பழனி மலைப்பகுதி முழுவதுமே புனிதமானதாகும். இங்கு வரும் பக்தர்கள் பல நாட்கள் உண்ணாவிரம் மேற்கொண்டு கிரிவலம் சென்று வருகின்றனர். அப்போது கிரிவலப்பாதையில் சிலர் மாட்டிறைச்சி உள்ளிட்ட பல்வகை புலால் உணவு வகைகளை உட்கொண்டு வருகின்றனர். இதனால் ஹிந்துக்களின் மத உணர்வுகள் இழிவுபடுத்தப்படுகிறது.

பழனி கோவிலின் கிரிவலப் பாதையை ஆக்கிரமித்து இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவரும், பிற மதத்தினரும் உணவகங்களை நடத்தி வருகின்றனர். இவர்கள் நடத்தும் உணவகங்களில்தான் மாட்டிறைச்சி உள்ளிட்ட பல்வகை புலால் உணவு வகைகள் விற்பனை செய்யப்படுகின்றன. இதைக் கட்டுப்படுத்தாவிட்டால் மதக்கலவரம் உருவாகும் வாய்ப்புள்ளது. எனவே இந்து அறநிலையத்துறையும், பழனி நகராட்சியும் பழனி கிரிவலப்பாதையில் புலால் உண்பதை தடை செய்ய வேண்டும் என்று இந்த வழக்கில் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கு (W.P.(MD) No.5371/2016) சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் நீதிபதிகள் எஸ். மணிக்குமார் மற்றும் சி.டி. செல்வம் ஆகியோர் கொண்ட அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள்,”மனுதாரர் கூறும் எந்த குற்றச்சாட்டுக்கும் ஆதாரங்களை சமர்ப்பிக்கவில்லை. கிரிவலப்பாதையை இஸ்லாமியர்களும், மற்ற மதத்தினரும ஆக்கிரமித்துள்ளார்கள் என்பதற்கோ, இதனால் மதங்களுக்கு இடையே மோதல் உருவாகும் சூழ்நிலை உள்ளது என்பதற்கோ எந்த ஆதாரமும் சமர்ப்பிக்கவில்லை.”

“மேலும் எந்த மதத்தினரின் உணவுப் பழக்கம் குறித்தும் சட்டரீதியான கட்டுப்பாடுகள் ஏதும் இல்லை. குறிப்பாக இந்திய தண்டனைச் சட்டத்தில் மாட்டிறைச்சி உள்ளிட்ட எந்த புலால் உணவும் உட்கொள்வது குற்றம் என்று வரையறை செய்யப்படவில்லை. எனவே மனுதாரரின் வாதங்களை ஏற்க இயலாது. வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது” என்று கடந்த 18.03.2016 அன்று தீர்ப்பளித்தனர்.

கந்தனுக்கு அரோகரா! வேலனுக்கு அரோகரா!!09 ஆகஸ்ட், 2016

எல்லை தாண்டுவது யார்? யானையா, மனிதனா?

வேழம், களிறு, களபம், மாதங்கம், இருள், எறும்பி, பெருமா, வாரணம், பிடி, கயந்தலை, போதகம், பிடியடி ஆகிய இச்சொற்கள் அனைத்தும் யானையை குறிக்கும் சொற்கள். தமிழ் இலக்கியத்தில் யானையை குறிப்பிடாத படைப்புகள் மிகவும் குறைவே. யானையை குறிக்கும் சொற்கள் சுமார் ஐம்பதுக்கும் மேலானவை பட்டியலிடப்பட்டுள்ளதாக தமிழ் அறிஞர்கள் கூறுகின்றனர்.


இன்றைய தமிழ்நாட்டில் யானைகள் பல்வேறு காரணங்களால் உயிரிழப்பதை செய்தியில் காண முடிகிறது. யானைகள் உயிரிழப்பது கவலைக்குரிய அம்சம்தானா? பல்லுயிர்ச்சூழலில் யானையின் பங்களிப்பு என்ன? என்பது போன்ற கேள்விகளை யானைகள் குறித்த ஆய்வில் டாக்டர் பட்டம் பெற்ற பேராசிரியர் ராமகிருஷ்ணனிடம் கேட்டோம்.
பேரா. ராமகிருஷ்ணன்
யானை என்பது நமது பல்லுயிர்ச்சூழலின் மூலக்கல் (Keystone Species) என்கிறார் யானை ஆய்வாளர் ராமகிருஷ்ணன். யானையின் நடை, உணவு உட்கொள்ளுதல், கழிவு வெளியற்றல், தண்ணீர் அருந்துதல் ஆகிய அனைத்து நடவடிக்கைகளிலும் பல்வேறு உயிரினங்கள் பயன் பெறுகின்றன. இன்னும் சொல்லப்போனால் வறட்சி காலத்தில் நிலத்தடி நீரை கண்டுபிடிக்கவும், வனப்பகுதிகளில் இருக்கும் தாது உப்புகளை அடையாளம் காணவும் யானைகளுக்கு திறன் உண்டு என்கிறார் இவர்.

இந்தியா, ஆப்பிரிக்கா போன்ற வெப்ப மண்டலப் பகுதிகளில் இருக்கும் காடுகளில் புதர்ச்செடிகளே மிகுந்திருக்கும். இந்த புதர்ச் செடிகளின் ஊடே யானைகள் உணவு, தண்ணீர் தேடி குழுவாக திரியும்போது, அவை நடக்கும் பகுதிகளில் பாதைகள் அமையும். புதர்ச் செடிகளுக்கு இடையே யானை அமைக்கும் பாதைகள் மற்ற விலங்குகளுக்கும், சில நேரங்களில் மனிதர்களுக்கும் பயன்படுகிறது. சில இடங்களில் யானைகளும், புலிகளும் ஒரே காட்டுப்பகுதியில் வாழும் நிலையும் உள்ளது. புலிகளுக்கு உணவாகும் சிறு விலங்குகள் இந்த புதர்ச் செடிகளுக்கு இடையே மறைந்து வாழும் இயல்பு கொண்டவை. வேட்டையாடும் புலிகளிடமிருந்து தப்பியோடுவதற்கு யானை அமைக்கும் பாதைகள் சிறு விலங்குகளுக்கு பயன்படுகிறது. அதேபோல முழுவதுமாக புதர்களில் மறைந்து சிறு விலங்குகள் வாழ்ந்தால் புலிகளுக்கு உணவு கிடைக்காமல் போய்விடக்கூடும். எனவே யானைப்பாதைகளில் சிறுவிலங்குகள் செல்லும்போது பதுங்கி பாய்ந்து புலி அவற்றை வேட்டையாடுவதும் உண்டு. இவ்வாறு காடுகளில் பல்லுயிர் சமநிலையை பேணுவதில் யானைகளின் நடைப்பழக்கம் பயன் படுகிறது.

யானையின் உணவுத் தேவையும் மேலும் சில விலங்குகளுக்கு உணவளிக்க பயன்படுகிறது. யானைகள் உயரமான மரக்கிளைகளை உடைத்து அவற்றில் உள்ள இலைகளையும், காய்-கனிகளையும் உட்கொள்ளும் திறன் வாய்ந்தவை. இத்திறன் இல்லாத அளவில் சிறிய மான் போன்ற விலங்குகளுக்கு யானையின் இந்த செயல்பாடுதான் உணவளிக்கிறது. இவ்வாறு உயரமான மரக்கிளைகள் உடைக்கப்படுவதால் அந்த மரத்திலேயே புதிய இளம் கிளைகள் உருவாவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றன. மேலும் பெரிய மரக்கிளைகள் உடைக்கப்படுவதால் சூரிய ஒளி தரையில் பட ஏதுவாகிறது. இதன் மூலம் குறுகிய உயரத்திற்கு வளரக்கூடிய புல் இனங்கள் வளர்வதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றன. இதன் மூலம் முயல் போன்ற உயிரினங்களும், புழு-பூச்சிகளும் நீடித்திருக்க முடிகிறது.

யானையின் மலக்கழிவுகூட பல உயிரினங்களை வாழவைக்கிறது. ஒரு யானை நாள் ஒன்றுக்கு சுமாராக 16 முறை மலம் கழிப்பதாக தெரிகிறது. யானையின் இந்த மலம் வண்ணத்துப் பூச்சிகளை ஈர்க்கிறது என்பது சுவாரசியமான தகவலாகும். குளிர் நிறைந்த பிரதேசங்களில் அதிகாலே நேரங்களில் யானைகள் வெளியிடும் மலத்தில் இருக்கும் மிதமான வெப்பத்தை அனுபவிக்க வண்ணத்துப்பூச்சிகள் விரும்புவதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். மேலும் யானையின் மலத்தில் இருக்கும் சில தாதுப்பொருட்கள் வண்ணத்துப்பூச்சியின் இனப்பெருக்கத்திற்கு பயன்படுவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.யானையின் மலம் ஈரப்பதத்தில் இருக்கும் போது அவற்றில் இருக்கும் சிறு புழுக்களை உணவாக கொள்வதற்காக மைனா உள்ளிட்ட பறவைகளும், ஊர்வன வகையைச் சேர்ந்த உயிரினங்களும், புழுக்களும் யானை மலத்தை வட்டமிடுகின்றன. யானை மலத்தில் உணவு தேடும் இத்தகைய உயிரினங்களை வேட்டையாட வரும் சற்றே பெரிய உயிரினங்களும் யானை மலத்தை எதிர் நோக்கி இருக்கின்றன.

யானை மலத்தில் முளைக்கும் காளான் சில வன உயிரினங்களுக்கும், மனிதர்களுக்கும் சுவையான – மருத்துவ குணம் கொண்ட உணவுப் பொருளாக விளங்குகிறது.

இவை அனைத்தையும் விட யானை உட்கொள்ளும் காய்-கனிகளில் இருக்கும் விதைகள் இயற்கையாகவே செறிவூட்டப்பட்டு யானை மலத்தோடு கலந்து கானகமெங்கும் தெளிக்கப்படுகிறது. இந்த பலவகை தாவரங்களின் விதைகள் காடெங்கும் முளைத்து காட்டின் தாவரச்சூழலும் பாதுகாக்கப்படுகிறது.

காடெங்கும் சுற்றித்திரியும் யானைகள் குளிப்பதற்காகவும், தண்ணீர் குடிப்பதற்காகவும் நீர்நிலைகளுக்கு செல்கின்றன. அப்போது தும்பிக்கையில் தண்ணீரை உறிஞ்சி தன் மேலும், பிற யானைகள் மேலும் தெளிப்பது வாடிக்கையான ஒன்று. அப்போது யானையின் சுவாச மண்டலத்திலும் மற்ற பகுதிகளிலும் இருக்கும் பல்வேறு சின்னஞ்சிறிய தாவர வகைகளும், புழுக்களும் நீர்நிலையில் இருக்கும் நீரோடு கலக்கின்றன. இந்த சின்னஞ்சிறிய உயிரினங்கள் அந்த நீர்நிலையில் இருக்கும் மீன்களுக்கும் மற்ற நீர் வாழ் உயிரினங்களுக்கும் உணவாக பயன்படுகின்றன.

வறட்சிக் காலங்களில் நிலத்தடி நீர் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்கும் ஆற்றல் யானைகளுக்கு இயல்பாகவே இருக்கிறது. எட்டக்கூடிய தூரத்தில் இருக்கும் நீர்வளத்தை கண்டுபிடிக்கும் யானைகள் அந்தப்பகுதியில் குட்டை போன்ற அமைப்பை ஏற்படுத்தி குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்து கொள்கின்றன. இத்திறன் பெறாத மற்ற காட்டு விலங்குகளுக்கும் இதுவே குடிநீர் ஆதாரமாகி விடுகிறது.

தாவர உணவை மட்டுமே உண்ணும் யானையின் நல்வாழ்வுக்கு மேலும் சில தாதுப் பொருட்களும் தேவைப்படுகின்றன. இவற்றை கண்டறியும் திறனும் யானைக்கு இயல்பாகவே அமைந்துள்ளது. இந்த தாது உப்புக்கள் இருக்கும் பகுதியை கண்டறியும் யானைகள் அந்த தாது உப்புகளை நக்கி தமக்கு தேவையான அளவில் உட்கொள்கின்றன. இந்த தாது உப்புக்களை மற்ற காட்டு உயிரினங்களும் தத்தம் தேவைக்கேற்ப பயன்படுத்திக் கொள்கின்றன.
இவ்வாறாக காட்டிற்குள் பல்லுயிர்ச்சூழலை பாதுகாப்பதில் யானை மிகவும் முக்கியமான இடத்தை வகிக்கிறது.

தனிப்பட்ட முறையிலும் யானை ஒரு சுவாரசியமான விலங்காக இருக்கிறது.

ஒரு யானை சராசரியாக 80 ஆண்டு காலம் வாழக்கூடியது. ஆண் யானை சுமார் 10.5 அடி உயரமும், பெண் யானை சுமார் 8.5 அடி உயரமும் இருக்கும். இந்திய யானைகளில் ஆண் யானைகள் சுமார் 4,500 கிலோ முதல் 5750 கிலோ எடைவரை இருக்கும். பெண் யானைகள் சுமார் 3,000 கிலோ முதல் 3,500 கிலோ எடை வரை இருக்கும்.

இந்த யானைகளுக்கான உணவுத் தேவை மிகவும் அதிகம். அதிகம் பசி கொண்ட மனிதர்களை யானைப் பசி கொண்டவன் என்று அழைப்பது வழக்கம் அல்லவா ?அது உண்மைதான் போலிருக்கிறது! யானையின் எடையில் சுமார் 5% எடை கொண்ட உணவு யானைகளுக்கு அன்றாடத் தேவையாகும். அதாவது ஆண் யானைக்கு நாள் ஒன்றுக்கு சுமார் 250 கிலோவும், பெண் யானைகளுக்கு சுமார் 175 கிலோ உணவும் தேவை. அதேபோல நாள் ஒன்றுக்கு ஒவ்வொரு யானைக்கும் சுமார் 150 – 200 லிட்டர் தண்ணீர் தேவை.

இந்த உணவையும், தண்ணீரையும் தேடி யானைகள் அலைந்து திரியும் தன்மை கொண்டவை. ஒரு யானை ஆண்டு ஒன்றுக்கு சுமார் 500 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்வதாக கணக்கிடப்பட்டுள்ளது.

அதேபோல யானையின் நுண்ணறிவுத் திறனும் வியப்புக்குரியது. மனிதனுக்கும், குரங்குக்கும் உள்ள மேம்பட்ட நுண்ணறிவுத்திறன் யானைக்கும் உள்ளது. இதன் காரணமாக யானைக்கான உணவும், தண்ணீரும் கிடைக்கும் இடங்கள் பெரிய யானைகளிடமிருந்து, குட்டி யானைகளுக்கு மரபணு ரீதியாகவே கடத்தப்படுகிறது. மேலும் செரிமானத்திற்கு எளிதான இளகிய தன்மை கொண்ட தாவர உணவுகளை தேர்ந்தெடுத்து உட்கொள்ளும் திறனும் குட்டி யானைகளுக்கு பயிற்றுவிக்கப்படுகிறது. மேலும் யானையின் கற்றல் திறனும் அபாரமானவை.

யானையின் மேற்கண்ட இயல்புகளை ஆய்வாளர் ராமகிருஷ்ணன் மிகவும் ஆர்வத்துடனும், அக்கறையுடனும் விவரிக்கும்போது நமக்கு பிரமிப்பு ஏற்படுகிறது.

இத்தகைய யானைகள் இன்று சந்திக்கும் பல பிரச்சினைகளுக்கு காரணமாக இருப்பது மனிதன்தான் என்பதுதான் வருந்தத்தக்க அம்சமாகும்.


மா. யோகநாதன்

யானைகளை பாதுகாப்பதில் வனத்துறையினர் மேலும் கவனம் செலுத்த வேண்டும் என்று சூழல் ஆர்வலரான மா. யோகநாதன் வலியுறுத்துகிறார். யானையின் வாழ்க்கைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்கான வாழிடம் (Habitat), வலசை செல்லும் பகுதிகள் (Traditional Migrative Path), அவற்றை இணைக்கும் இணைக்கும் இணைப்புப் பாதைகள் (Corridor) ஆகியவை மிகவும் முக்கியமானவை என்கிறார் யோகநாதன். இந்த அனைத்துப் பகுதிகளையும் மனிதன் ஆக்கிரமித்துவிட்டதாகவும் அவர் குற்றம் சாட்டுகிறார். குறிப்பாக யானையின் வலசைப் பகுதிகளை இணைக்கும் காரிடார்கள் முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டுளதாகவும், இதுவே பிரச்சினைகளுக்கு வித்திடுவதாகவும் அவர் குறிப்பிடுகிறார். மேலும் யானைகளை கையாள்வதில் வனத்துறைக்கு மேலும் பயிற்சியும், பக்குவமும் தேவை என்றும் அவர் வலியுறுத்துகிறார்.


காட்டிற்கு உள்ளும், புறமுமாக மேற்கொள்ளப்படும் “வளர்ச்சித் திட்டங்களே” யானைகளுக்கு பிரச்சினைகளை உருவாக்குவதாக கோவையின் சுற்றுச்சூழல் ஆர்வலர் மோகன்ராஜ் கூறுகிறார்.
“மாவுத்தம்பட்டியில் இருக்கும் இம்பீரியல் மதுபான தொழிற்சாலையிலிருந்து, பல கல்வி நிலையங்கள், நகரியங்கள், யோகா மையங்கள், பல்கலைக்கழகங்கள், கேளிக்கை விடுதிகள் ஆகியவை காட்டுப்பகுதியின் மிக அருகிலேயே அமைந்திருப்பதாக அவர் குறிப்பிடுகிறார். காட்டுப்பகுதியில் ஏசிசி சிமென்ட் தொழிற்சாலைக்கான சுண்ணாம்புக்கல் சுரங்கம், ரயில் பாதைகள், தேசிய நெடுஞ்சாலை, ஆயுதப்படை முகாம், சூழல் சுற்றுலாத் தளங்கள், மின்சக்தி திட்டங்கள் ஆகியவற்றுடன் பழங்குடி மக்களின் குடியிருப்புகள் அமைந்துள்ளதாகவும் இவை அனைத்தும் சேர்ந்தே யானை வழித்தடங்களை இடையூறு செய்வதாகவும் கூறுகிறார்.

மோகன்ராஜ்
மேலும் யானைகளை கையாள்வதில் வனத்துறையினரிடம் அறிவியல்ரீதியான அணுகுமுறை இருக்கிறதா என்பதே ஐயம் என்கிறார் திரு. மோகன்ராஜ். யானைகளை பிடிக்கும்போது கையாளப்படும் நடைமுறைகள் குறித்து அறிந்துகொள்ள சூழல் ஆர்வலர்களுக்கு தொடக்கம் முதலே அனுமதி மறுக்கப்படுகிறது. மதுக்கரையில் மகாராஜா என்ற யானை இறப்பில் பல்வேறு சந்தேகங்கள் உள்ளன. மனிதர்களுக்கு ஆபத்தாக கருதப்படும் வனவிலங்குகளை அகற்றுவதற்காக மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் கடந்த 2003ம் ஆண்டில் ஒரு வழிகாட்டும் நெறிமுறையை வெளியிட்டுள்ளது. அதன்படி பிடிக்கப்படும் விலங்களுக்கு, குறிப்பாக யானைகளுக்கு மனிதர்களைப்போலவே ரத்த அழுத்தம், இதய செயலிழப்பு ஏற்படும் வாய்ப்பு இருப்பதால் யானைகளின் உடல் வெப்பத்தை குறைக்கும் வகையில் அவற்றின்மீது தண்ணீர் அடித்து, ஆசுவாசம் செய்வதற்கான வாய்ப்பு வழங்கி இருக்க வேண்டும். மேலும் பிடிக்கப்பட்ட அன்றை அந்த யானையை இடப்பெயர்ச்சி செய்ய முயற்சித்தது தவறான நடவடிக்கையாகும் என்கிறார் இவர்.

யானையை பிடிப்பதற்கான ஆணையை பிறப்பிக்கும் முன்பு சுற்றுச்சூழல் ஆர்வலர்களை கலந்தாலோசிக்காமல், ஆணை பிறப்பித்த பின்னரே சுற்றுச்சூழல் ஆர்வலர்களுடன் சடங்கிற்காக ஒரு ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படுகிறது.

மகாராஜா யானை இறந்தபின் சடலக்கூறாய்வு நடைபெறும் முன்பே, யானையின் தலையில் அடிபட்டதால் யானை இறந்துவிட்டதாக வனத்துறையினரே செய்தியை பரப்பினர் என்று கூறும் திரு. மோகன்ராஜ், யானைகளை பாதுகாக்க பரந்துபட்ட முயற்சிகள் தேவை என்கிறார்.

யானைகளை பாதுகாப்பதில் முன் எச்சரிக்கை தேவை என்று கூறும் இவர், காட்டுப்பகுதிகளுக்குள் நடைபெறும் அனைத்து “வளர்ச்சி”த் திட்டங்களுக்கும் வனத்துறையே அனுமதி வழங்குகிறது என்பதை நினைவு படுத்துகிறார். உதாரணமாக, ஏசிசி சிமெண்ட் ஆலையின் சுண்ணாம்புக்கல் சுரங்கத்திற்கோ, ஆயுதப்படையினரின் முகாம் அமைப்பதற்கோ, கோவை குற்றாலம் உல்லாச விடுதி அமைப்பதற்கோ வனத்துறை அனுமதி அளிக்கும் முன்னர் இது யானைகளின் வலசைப்பகுதி என்பது வனத்துறையினருக்கு தெரியாதா? என்று கேள்வி எழுப்புகிறார்.

காடுகளை ஒட்டிய பகுதிகளில் அமையும் “வளர்ச்சி”த் திட்டங்களுக்கு ஹாகா அமைப்பு அனுமதி வழங்கும்போதும் பொதுப்பணித்துறை, தீயணைப்புத்துறை, சுரங்கத்துறை ஆகியவற்றுடன் வனத்துறையும் தடையில்லா சான்றிதழ் வழங்க வேண்டும். யானைகளின் வசிப்பிடத்திலோ, யானைகள் காரிடார் என்று சொல்லப்படும் பகுதியிலோ இத்தகைய திட்டங்களுக்கு தடையில்லா சான்றிதழ் வழங்க முடியாது என்று வனத்துறை மறுத்திருக்கலாமே?” என்றும் கேள்வி எழுப்புகிறார், திரு மோகன்ராஜ்.

மலைப்பகுதி பாதுகாப்பு அமைப்பின் அதிகாரத்தை முறையாக பயன்படுத்தி இதுவரை நடந்த தவறுகளை திருத்த வேண்டும் என்றும், இனி தவறு நடக்காமல் கவனமாக காட்டுப்பகுதிகளை பாதுகாக்க வேண்டும் என்றும் மோகன்ராஜ் வலியுறுத்துகிறார். காடுகள் மற்றும் வன உயிரினங்கள் பாதுகாப்பில் அரசின் திட்டமிடுதலும், அதை நடைமுறைப்படுத்துவதிலும் உள்ள சிக்கல்களை களைய தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுதல் வேண்டும் என்றும் இவர் குறிப்பிடுகிறார்.

யானைகளின் வாழ்வாதாரத்தை சிதைப்பதே யானை-மனித மோதல்களுக்கு காரணமாக இருப்பதை உறுதி செய்கிறார் ஓசை சுற்றுச்சூழல் அமைப்பைச் சேர்ந்த காளிதாஸ். எனினும் இதில் வனத்துறையை மட்டும் குற்றம் சொல்வதற்கில்லை என்றும் அவர் கூறுகிறார்.

"ஓசை" காளிதாஸ்

பொதுவாக காட்டு யானைகள் விளைநிலங்களுக்குள்ளும், மனித குடியிருப்புக்குள்ளும் நுழைந்ததாக தகவல் கிடைத்தவுடன் அங்கே வனத்துறையினர் வந்து விடுவதாக அவர் கூறுகிறார். யானைகளை காட்டுக்குள் செலுத்தும் பணி மிகவும் கடினமானது: ஏனெனில் மக்கள் அனைத்துப் பகுதிகளிலும் கூடி விடுகின்றனர். கூடியுள்ள மக்களுக்கும், யானைகளுக்கும் பாதிப்பு இல்லாமல் யானைகளை வனப்பகுதிகளுக்குள் செலுத்துவதே சவாலான பணி. இரவு, பகலாக இந்தப் பணிகள் நடக்கும். தற்போதைய நிலையில் இது அன்றாட பணியாகிவிட்டது.

யானைகள் வனப்பகுதியை தாண்டாமலிப்பதற்காக அகழிகள் வெட்டப்பட்டன. சூரிய மின்வேலிகள் அமைக்கப்பட்டன. யானையின் குடிநீர்த்தேவையை பூர்த்தி செய்ய தேவையான ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. யானைகளுக்கு தேவையான புல் வளர ஏதுவாக களைச்செடிகள் நீக்கப்படுகின்றன.

இவ்வாறு அனைத்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் யானைகள், மனிதர்கள் வசிக்கும் பகுதிகளுக்கு வருவது குறைவதாக இல்லை. மனிதர்கள் விவசாயம் செய்யும் நெல்லும், கரும்பும், தென்னையும் பிற பயிர்களும் தங்களுக்கானதாக நினைக்கும் யானைகள் மனிதர்களுக்கு இழப்புகளை ஏற்படுத்துகின்றன. இதனால் யானைகளை இப்பகுதியில் வசிக்கும் மனிதர்கள் வெறுக்கும் நிலை ஏற்படுகிறது.


யானைகளை பிடிப்பதில் வனத்துறையினர் சாதாரணமாக ஆர்வம் காட்டுவதில்லை. பாதிக்கப்படும் மக்களின் தொடர்ந்த வற்புறுத்தல் காரணமாகவே யானைகளை பிடிக்க வனத்துறையினர் முடிவு செய்கின்றனர். பலமுனை ஆலோசனைகளுக்கு பிறகே இந்த முடிவு மேற்கொள்ளப்படுகிறது. யானைகளை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்காக மயக்க மருந்துகள் செலுத்தும் முடிவு உடனடியாக எடுக்கப்படுவதில்லை. பலமுறை யோசித்த பிறகே இந்த முடிவு மக்களின் நலன்களை முன்னிறுத்தி எடுக்கப்படுகிறது. மயக்க மருந்து செலுத்தப்படும் அத்தனை நிகழ்வுகளும் மிகவும் கவனமாக கையாள வேண்டிய ஆபத்தான நிகழ்வுகளே! பெரும்பாலான நிகழ்வுகளில் யானைகள் காப்பாற்றப்படுகின்றன. அரிதான நிகழ்வுகளில் மட்டுமே யானைகள் உயிரிழக்கின்றன.

வனத்துறையிலும் அரசின் மற்றத்துறைகளைப் போலவே சுமார் 40% பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. இதுவும்கூட பல்வேறு பிரச்சினைகளுக்கு காரணமாக உள்ளது.

காட்டுப்பகுதிகளின் வெளியே உள்ள யானை காரிடார் பகுதிகளில் ஏற்படும் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு வனத்துறைக்கு அதிகாரம் இல்லை. அது மலைப்பகுதி பாதுகாப்பு ஆணையத்தின் அதிகார வரம்புக்கு உட்பட்டது. ஆனால் இந்த மலைப்பகுதி பாதுகாப்பு ஆணையத்திற்கும் தேவையான அதிகாரங்கள் வழங்கப்படவில்லை.

காட்டுப்பகுதியின் வெளிப்புறமாக பல நீர்நிலைகள் உள்ளன. இந்த நீர்நிலைகளும் யானைகளின் வாழ்க்கைத் தேவையை பூர்த்தி செய்கின்றன. ஆனால் காட்டுப்பகுதிக்கும், அருகே உள்ள நீர்நிலைக்கும் இடைப்பட்ட பகுதியில் ஆக்கிரமிப்பாளர்கள் விவசாயம் செய்ய ஆரம்பித்துவிடுகின்றனர். இதை அரசின் எந்தத்துறையும் கட்டுப்படுவத்துவதில்லை. இவ்வாறு ஆக்கிரமிப்பவர்கள், அந்த நீர்நிலைகளை யானைகள் பயன்படுத்த முடியாதவாறு தவிர்த்துவிடுகின்றனர். இதனால் யானைகள் நீர்தேடி வேறு இடங்களுக்கு செல்ல வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.

எனவே யானைகளின் பாதுகாப்பு என்பது வனத்துறையை மட்டுமே சார்ந்த எளிமையான அம்சம் அல்ல. அது பல்வேறு அரசுத்துறைகள் இணைந்து மேற்கொள்ள வேண்டிய தலையாய பிரசினை என்கிறார், ஓசை சுற்றுச்சூழல் அமைப்பின் காளிதாஸ்.

யானைகளை பாதுகாக்க வேண்டும் என்பதையே அனைத்து தரப்பினரும் வலியுறுத்துகின்றனர். அதற்கான தொலைநோக்குப் பார்வை கொண்ட கொள்கைத் திட்டங்களை நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர். அதற்காக நிபுணர்கள் வலியுறுத்தும் திட்டங்களை பட்டியலிடலாம்.

1...  மேற்குத் தொடர்ச்சி மலையை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்து அப்பகுதியில் அனைத்துவிதமான காடழிப்பு வேலைகளையும் தடுக்க வேண்டும். 

2...       கடற்கரை ஒழுங்காற்று மண்டலம் போல, காடுகளுக்கு அருகாமை நிலங்களையும் பாதுகாக்கப்பட்ட மண்டலமாக (Buffer Zone) அறிவித்து அங்கு காட்டுயிர்களுக்கு ஆபத்து ஏற்படுத்தாத நடவடிக்கைகளை மட்டுமே அனுமதிக்க வேண்டும்.

3..     யானைகள் பாதுகாப்பு குறித்து நாடு முழுவதுமான ஒருங்கிணைந்த ஆய்வுகள் மேற்கொள்ளாமல், பகுதி-பகுதியாக பிரித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான் குறிப்பிட்ட பகுதியில் யானைகளுக்கான பிரச்சினைகளை கண்டறிந்து தீர்வு காண முடியும்.

4.. யானைகளை பாதுகாக்கும் கொள்கை வடிப்பதிலும், திட்டம் தீட்டுவதிலும் குடிமைச் சமூகத்திற்கு, குறிப்பாக சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்கு உரிய இடம் அளிக்க வேண்டும்.

5..     யானைகள் பாதுகாப்பு குறித்த விரிவான விவாதத்தை முன்னெடுத்து, யானைகளின் அவசியம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

இந்த கோரிக்கைகள் நிறைவேறும்போதுதான் யானைகள் பாதுகாக்கப்படும். யானைகள் பாதுகாக்கப்பட்டால்தான் யானைகள் வாழும் காடுகள் உயிர்ப்புடன் இருப்பதாக பொருள் கொள்ள முடியும். காடுகள் உயிர்ப்புடன் இருந்தால்தான் காட்டை பலவிதங்களிலும் நம்பி இருக்கும் நகரவாசிகளும் நிறைவான வாழ்வை வாழமுடியும்.("பூவுலகு" ஜூலை 2016 இதழில் வெளியிடப்பட்ட  கட்டுரை)

31 ஜூலை, 2016

பிளாச்சிமடா கோக் ஆலை – ஒரு சட்ட சரித்திரம்

கேரள மாநில அரசின் அழைப்பின்பேரில்தான் ஹிந்துஸ்தான் கோககோலா மென்பான நிறுவனம் கடந்த 2000-ம் ஆண்டில் தனது உற்பத்தியை துவக்கியது. தமிழ்நாட்டின் எல்லைப்பகுதியான பாலக்காடு மாவட்டம், சித்தூர் தாலுகா, பெருமாட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட பிளாச்சிமடா உள்ளிட்ட கிராமங்கள் கேரளாவின் நெற்களஞ்சியம் என்று புகழ்பெற்றது. இந்த பிளாச்சிமடா கிராமத்தின் வளமிக்க பகுதியில் 42 ஏக்கர் பரப்பளவில் உற்பத்தியை துவக்க எண்ணியபோது, உலகத்தில் எங்குமே பெறாத ஒரு புதிய அனுபவத்தை அடையப்போவதை கோக் நிறுவனம் கற்பனைகூட செய்திருக்காது.


பழங்குடி மக்களும், பட்டியல் இன மக்களும் அதிகம் வசிக்கும் பகுதிகள் சூழ்ந்திருந்த கோக் நிறுவன வளாகத்தில் 65க்கும் அதிகமான ராட்சத ஆழ்துளைக்கிணறுகள் அமைக்கப்பட்டு இரவும், பகலுமாக நீரை சுமார் 5 இலட்சம் முதல் 15 இலட்சம் லிட்டர் நீரை இறைக்கத் துவங்கின. நாள் ஒன்றுக்கு 5,61,000 லிட்டர் மென்பானங்களை கோக் நிறுவனம் தயாரிக்கலாம் என்று கேரள மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி அளித்திருந்தது.

இதன் காரணமாக வளமான வேளாண் பகுதியான பிளாச்சிமடாவும், சுற்றுப்புற கிராமங்களும் நீர்ப்பற்றாக்குறையை அனுபவிக்கத் தொடங்கின. மேலும் குளிர்பான தயாரிப்பின்போதும், பாட்டில்களை கழுவி சுத்தம் செய்யும்போதும் வெளியிடப்படும் கழிவுப்பொருட்கள் சுத்திகரிக்கப்படாமல் நிலத்தில் விடப்பட்டது. இதன் காரணமாக கோக் வளாகத்திற்கு அருகிலிருந்த நிலமும், நிலத்தடி நீரும் பெருமளவில் பாதிக்கப்பட்டதாக புகார்கள் எழுந்தன. விளைச்சல் குறைந்ததோடு, விளைபொருட்களின் தரமும் குறைந்தது. அப்பகுதியில் வசிக்கும் மக்களின் உடல்நலமும் பாதிக்கப்பட்டு, பல்வேறு நோய்கள் பரவியதாகவும் கூறப்பட்டது.

மக்கள் கோக் நிறுவனத்திற்கு எதிராக போராடத் தொடங்கினர். அரசு வழக்கம்போல போராடும் மக்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க முனைந்தது. ஆனால் ஆதிவாசி மக்களும், தலித் மக்களும் அரசின் இரும்புக்கரத்தை கொண்டு அஞ்சாமல் போராட்டத்தை தொடர்ந்தனர்.

இந்நிலையில் கடந்த 2003 ஆண்டில் பெருமாட்டி கிராம பஞ்சாயத்து நீர்வளம் தொடர்பான சர்வதேச கருத்தரங்கு ஒன்றை நடத்தியது.

இதற்கிடையில கோக் நிறுவனத்திற்கு அளித்த அனுமதியை பெருமாட்டி கிராமப் பஞ்சாயத்து புதுபிக்க மறுத்ததோடு, உற்பத்தியை உடனடியாக நிறுத்துமாறு கடந்த 2003ம் ஆண்டில் உத்தரவிட்டது. கிராமப் பஞ்சாயத்து பிறப்பித்த உத்தரவை எதிர்த்து கோக் நிர்வாகம், கேரள மாநில அரசிடம் மேல் முறையீடு செய்தது. இதையடுத்து நீர் தொடர்பான நிபுணர் குழு ஒன்றை அமைக்குமாறும், அந்தக்குழு பரிந்துரையின் பேரில் இந்தப் பிரச்சினையில் முடிவு மேற்கொள்ளுமாறும் கேரள மாநில அரசு, கிராம பஞ்சாயத்திற்கு உத்தரவிட்டது. இதை எதிர்த்து பெருமாட்டி கிராமப் பஞ்சாயத்து தொடுத்த வழக்கை விசாரித்த கேரள உயர்நீதிமன்ற நீதிபதி பாலகிருஷ்ண நாயர், கோக் மென்பான ஆலையை மூடுமாறு  பெருமாட்டி கிராமப் பஞ்சாயத்து பிறப்பித்த உத்தரவு செல்லும் என்று தீர்ப்பளித்தார்.

2004ம் ஆண்டில் கேரள அரசின் உத்தரவுப்படி கோக் ஆலை மூடப்பட்டது.

2005ம் ஆண்டு ஏப்ரலில் கோக் ஆலை தொடர்ந்த வழக்கில் தினமும் 5 இலட்சம் லிட்டர் தண்ணீரை எடுக்க அனுமதி அளித்ததோடு, கோக் ஆலைக்கு அனுமதியை புதுப்பிக்குமாறு பெருமாட்டி கிராம பஞ்சாயத்துக்கு உத்தரவிட்டு நீதிபதிகள் எம். ராமச்சந்திரன் மற்றும் கே. பாலச்சந்திரன் ஆகியோர் கொண்ட கேரள உயர்நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் தீர்ப்பளித்தது. இந்த உத்தரவில், நிலத்தின் உரிமையாளர் நிலத்தடி நீரை எடுப்பதற்கு தடை செய்யும் சட்டம் எதுவும் நடைமுறையில் இல்லாத நிலையில், கோக் நிறுவனம் நிலத்தடி நீரை எடுப்பதற்கு பெருமாட்டி கிராம பஞ்சாயத்து அனுமதி மறுக்க முடியாது என்று கூறப்பட்டது.

ஆனால் கோக் ஆலைக்கு அனுமதியை புதுப்பிக்க பெருமாட்டி கிராமப் பஞ்சாயத்து மறுப்பு தெரிவிக்கவே, கோக் ஆலை கேரள உயர்நீதிமன்றத்தை மீண்டும அணுகியது. வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், கோக் ஆலைக்கு இரண்டு வாரங்களில் அனுமதியை புதுப்பிக்க வேண்டும், தவறினால் அனுமதி பிறப்பிக்கப்பட்டதாக கருதி கோக் உற்பத்தியை துவக்கலாம் என்று தீர்ப்பளித்தது. இதையடுத்து கோக் ஆலை மூன்று மாதங்களுக்கு அனுமதி அளித்து பெருமாட்டி கிராம பஞ்சாயத்து உத்தரவிட்டது.

2006ம் ஆண்டில் கோக் ஆலை இயங்கும் அனுமதியை புதுப்பித்த பெருமாட்டி கிராம பஞ்சாயத்து 13 நிபந்தனைகளை விதித்தது. அவற்றில் உள்ளூர் பகுதியில் நிலத்தடி நீரை கோக் பயன்படுத்த விதிக்கப்பட்ட தடை மிகவும் முக்கியமானது.

கோக் நிறுவனத்துக்கு ஆதரவாக கேரள உயர்நீதிமன்ற பெஞ்ச் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து கேரள மாநில அரசு ஒரு வழக்கையும், கேரள மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஒரு வழக்கையும், பெருமாட்டி கிராமப் பஞ்சாயத்து மூன்று வழக்குகளையும் தொடர்ந்துள்ளன. இந்த அனைத்து வழக்கு விசாரணைகளும் சுமார் 10 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளன.

இவற்றுக்கிடையே அப்பகுதியில் கோக் மென்பான தயாரிப்பு ஆலை அமைக்கப்பட்டதால் அப்பகுதி மக்களுக்கு ஏற்பட்ட அனைத்து வகையான இழப்புகளும் மதிப்பிடப்பட்டன. கோககோலா ஆலையால் பிளாச்சிமடா பகுதி மக்களுக்கு சுமார் 216 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இந்த இழப்பை கோககோலா நிர்வாகம் ஈடு செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்த இழப்பு குறித்த வழக்குகளை விசாரிப்பதற்கென சிறப்பான தீர்ப்பாயம் ஒன்றை அமைக்க கேரள மாநில அரசு முன்வந்தது. “பிளாச்சிமடா கோக்கோலா பாதிக்கப்பட்டோர் நிவாரணம் மற்றும் இழப்பீடு சிறப்பு தீர்ப்பாயம்” அமைப்பதற்கான சட்ட முன்வடிவு கடந்த 2011ஆம் ஆண்டில் கேரள மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது.

ஆனால் இதுபோன்ற வழக்குகளை விசாரிப்பதற்காக தேசிய பசுமை தீர்ப்பாயம் அமைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த “பிளாச்சிமடா கோக்கோலா பாதிக்கப்பட்டோர் நிவாரணம் மற்றும் இழப்பீடு சிறப்பு தீர்ப்பாயம்” அமைப்பதற்கான சட்ட முன்வடிவை ஏற்கமுடியாது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. தேசிய பசுமைத்தீர்ப்பாயத்தில் இழப்பீடு கோரி வழக்கு தொடுப்பதற்கு விதிக்கப்பட்டுள்ள காலக்கெடுவான ஐந்து ஆண்டுகள் காலாவதியாகி விட்டதாலும், கேரளாவில் உள்ள ஏழை விவசாயிகள் சென்னையிலுள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்திற்கு வருவது சிரமம் என்ற கருத்துகளை மத்திய அரசு ஏற்க மறுத்து வருகிறது.

இந்நிலையில் கோககோலா மீதான அதிரடி தாக்குதலை கேரள மாநில அரசு தொடுத்துள்ளது. பிளாச்சிமடா பகுதியில் உள்ள நிலத்தடி நீரை அளவுக்கதிகமாக எடுத்ததன் மூலமாகவும், நிலத்தடி நீரை நச்சுப்படுத்தியதன் மூலமாகவும் அப்பகுதியில் வசிக்கும் பட்டியல் இன மக்கள் மற்றும் பட்டியல் இன பழங்குடியினரின் வாழ்வாதாரங்களை அழித்ததாக கோககோலா நிர்வாகம் மீது, பட்டியல் இன மக்கள் மற்றும் பட்டியல் இன பழங்குடிகள் (வன்கொடுமை தடுப்புச்) சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு செல்லும் பாதையை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

கேரள மாநிலத்திற்குள் கோக்கோலா ஆலை நிர்வாகம் இழைத்த சூழல் அநீதிகளுக்கு நிவாரணம் தேட கேரள மக்கள் தொடர்ந்து முயற்சித்து கொண்டிருக்கும் நிலையில், தமிழகத்தில் இதுபோன்ற குளிர்பான ஆலைகள் எந்த எதிர்ப்பும், விமரிசனமும் இல்லாமல் இயங்குவது வியப்பிற்குரிய அம்சமே!

 (பூவுலகு ஜூலை 2016 இதழில் வெளிவந்த கட்டுரை)