09 செப்டம்பர், 2016

இரண்டாவது மனைவியின் மகனுக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை கிடைக்குமா?

ரே மாதிரியான பிரச்சினைகளுக்கு வெவ்வேறு நீதிபதிகள் வெவ்வேறான தீர்ப்புகளை சொல்வதுண்டு. நீதிபதிகளின் தனிப்பட்ட நிலைப்பாடு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இந்த தீர்ப்புகளில் எதிரொலிக்கும். அத்தகைய உதாரணம் ஒன்றை பார்ப்போம்.

தூத்துக்குடியைச் சேர்ந்த மலையப்பன் என்பவர் காவல்துறை துணை ஆய்வாளராக பணியாற்றி வந்தார். இவர் கடந்த 08.04.2008 அன்று ஒரு விபத்தில் மரணம் அடைந்தார். இவருக்கு இரண்டு மனைவிகளும், இரண்டாம் மனைவி மூலம் பிறந்த ஒரு மகனும், இரு மகள்களும் இருந்தனர். முதல் மனைவிக்கு குழந்தை இல்லாததால், அவரது சம்மதத்துடன் அவரது சகோதரியையை திருமணம் செய்திருந்தார்.

தற்போது குடும்பச்சுமையை சுமக்க வேண்டிய நிலையில் இரண்டாவது மனைவி மூலம் பிறந்த மகன் முத்துராஜ், காவல்துறையில் தனக்கு கருணை அடிப்படையில் பணி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். ஆனால் அவரது தந்தை செய்து கொண்ட இரண்டாவது திருமணம் “செல்லாத் திருமணம்” ஆகும் என்பதால் இந்த திருமணம் மூலம் பிறந்த மகனுக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்க முடியாது என்று காவல்துறை தெரிவித்தது.

இதையடுத்து தனக்கு கருணை அடிப்படையில் பணி வழங்குமாறு காவல்துறைக்கு உத்தரவிடக்கோரி முத்துராஜ் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு (W.P. (MD) No.3502/2011) தொடர்ந்தார். இந்த வழக்கில் இந்து திருமணச் சட்டத்தின் படி சட்டமுறையில் நடைபெறாத திருமணம் மூலம் பிறந்த வாரிசுகளுக்கும் தந்தையின் சொத்தில் பங்கு உள்ளது. இதன் அடிப்படையில் தனக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்கப்பட வேண்டும் என்று கோரப்பட்டது.

ஆனால் அரசுத்தரப்பில் இந்த வாதம் மறுக்கப்பட்டது. சில மதங்கள் பல தார திருமணத்தை அனுமதித்தாலும் கூட தமிழ்நாடு அரசு “ஒருவருக்கு ஒரு வாழ்க்கைத்துணை” என்ற கோட்பாட்டை அரசின் கொள்கை முடிவாக அறிவித்துள்ளது. தவிர்க்க இயலாத சூழ்நிலையில் இரண்டாம் திருமணம் செய்யும் நபர்கள் அரசிடம் முன் அனுமதி பெற வேண்டும். மேலும் கருணை அடிப்படையிலான வேலை என்பதை சொத்தாக கருத முடியாது. எனவே இந்த மனுதாரருக்கு கருணை அடிப்படையில் காவல்துறையில் பணி வழங்க முடியாது என்று அரசுத் தரப்பில் எடுத்துரைக்கப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா கடந்த 27.04.2016 அன்று அரசுத் தரப்பு வாதங்களை அங்கீகரித்து வழக்கை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தார்.

***

சென்னையைச் சேர்ந்த சுரேஷ் பாபு என்பவர் அவரது தந்தையாரின் இரண்டாவது மனைவி மூலம் பிறந்த மகனாவார். சென்னை மெட்ரோ வாட்டர் நிறுவனத்தில் பணியாற்றிய அவரது தந்தையார் இறந்துவிடவே தமக்கு கருணை அடிப்படையில் பணி வழங்க வேண்டும் என்று அவர் மெட்ரோ வாட்டர் நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்தார். சுரேஷ் பாபுவிற்கு சென்னை மெட்ரோ வாட்டர் நிர்வாகத்தில் பணி வழங்குவதில் தங்களுக்கு எந்தவிதமான தடையும் இல்லை என்று அவரது தந்தையாரின் முதல் மனைவி மூலம் பிறந்த வாரிசுகளும் ஒப்புதல் கடிதம் அளித்திருந்தனர். ஆனால் இரண்டாம் மனைவி மூலம் பிறந்த வாரிசுக்கு பணி வழங்க முடியாது என்று சென்னை மெட்ரோ வாட்டர் நிர்வாகம் மறுப்பு தெரிவித்தது.

இதையடுத்து சுரேஷ்பாபு சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு (W.P.9010/2013) தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கே. ரவிச்சந்திரபாபு, மனுதாரரின் தந்தை காலமான நிலையில் அவரது முதல் மனைவியோ, அவரது வாரிசுகளோ உரிமை கோராத நிலையில் மனுதாரருக்கு பணி வழங்குவதில் பிரச்சினை இல்லை. எனவே மனுதாரர் சுரேஷ்பாபுவுக்கு சென்னை மெட்ரோ வாட்டர் நிறுவனத்தில் பொருத்தமான வேலை வழங்க வேண்டும் என்று 07.02.2014 அன்று தீர்ப்பளித்தார். ஆனால் சென்னை மெட்ரோ வாட்டர் நிறுவனம் இந்த தீர்ப்பை கண்டுகொள்ளவில்லை. எனவே மனுதாரர் சுரேஷ்பாபு, சென்னை மெட்ரோ வாட்டர் நிறுவனத்திற்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இதைத் தொடர்ந்து நீதிபதி கே. ரவிச்சந்திரபாபு அளித்த தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று சென்னை மெட்ரோ வாட்டர் நிறுவனம் சார்பில் சீராய்வு மனு (Review Application No.105 of 2015) பதிவு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி கே. ரவிச்சந்திரபாபு, தாம் முன்னர் அளித்த தீர்ப்பை உறுதி செய்து சீராய்வு மனுவை தள்ளுபடி செய்தார்.

இதையடுத்து இந்த தீர்ப்பிற்கு எதிராக மேல்முறையீட்டு மனுவை (W.A. No.1764/2015) சென்னை மெட்ரோ வாட்டர் நிறுவனம் பதிவு செய்தது.

இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஹுலுவாடி ஜி. ரமேஷ் மற்றும் எம். வி. முரளிதரன் ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த 18.07.2016 அன்று தீர்ப்பளித்தது.

தந்தையை இழந்த சுரேஷ்பாபு அவரது தாயாரையும் மற்ற குடும்பத்தினரையும் பராமரிக்க வேண்டிய நிலையில் உள்ளார். குடும்பத்தலைவரை இழந்துள்ள குடும்ப உறுப்பினர்களை பராமரிக்கும் நோக்கத்தில்தான் கருணை அடிப்படையில் பணி வழங்கப்படுகிறது. இந்தப் பணி வழங்கப்படும் நபர் இறந்தவரின் சட்டப்பூர்வமான மகன்தானா என்பதைவிட, அவருக்கு பணி வழங்கப்படுவதால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பத்திற்கு மறுவாழ்வு கிடைக்குமா என்பதை பரிசீலிப்பதே முக்கியம்.

இந்த வழக்கில் மனுதாரர் சுரேஷ்பாபுவிற்கு பணி வழங்குவதில் அவரது தந்தையாரின் முதல் மனைவிக்கோ, அவரது வாரிசுகளுக்கோ தடை ஏதும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சுரேஷ்பாபுவுக்கு பணி வழங்குவதில் சிக்கல் ஏதுமில்லை. இந்த முடிவிற்கு ஆதரவாக பல்வேறு முன்மாதிரி தீர்ப்புகள் சென்னை உயர்நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் உள்ளன. எனவே சென்னை மெட்ரோ வாட்டர் நிறுவனம் தொடர்ந்துள்ள மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.


தந்தையை இழந்த சுரேஷ்பாபுவிற்கு சென்னை மெட்ரோ வாட்டர் நிறுவனத்தில் பணி வழங்க வேண்டும் என்று நீதிபதி கே. ரவிச்சந்திரபாபு வழங்கிய தீர்ப்பு உறுதி செய்யப்படுகிறது. 


***

றத்தாழ ஒரே மாதிரியான பிரச்சினையில் ஒரே நீதிமன்றத்தைச் சேர்ந்த இரு நீதிபதிகள் வெவ்வேறான முரண்பட்ட நிலைப்பாட்டை எடுப்பது சட்டத்துறை சாராதவர்களுக்கு வியப்பை ஏற்படுத்தலாம். சட்டக் கோட்பாடுகளுக்கு விளக்கம் அளிக்க வேண்டிய உயர்நீதிமன்ற நீதிபதிகளின் பார்வை அவர்கள் சார்ந்த சமூகம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களிலிருந்தே உருவாகிறது. எனவே இதுபோன்ற முரண்பட்ட பார்வைகள் ஏற்படுவது மிகவும் இயல்பான அம்சமே!

அதேபோல நாட்டில் உள்ள அனைத்துச் சட்டங்களையும், பல்வேறு நீதிமன்றங்கள் வழங்கும் அனைத்து முன்மாதிரி தீர்ப்புகளையும் உடனுக்குடன் படித்து தெரிந்து வைத்துக்கொள்வது நீதிபதிகளுக்கும், வழக்கறிஞர்களுக்கும் சாத்தியமல்ல. வழக்குத் தொடுப்பவரின் வழக்கறிஞர் குறிப்பிட்ட வழக்குப் பிரச்சினை குறித்து செய்யும் ஆய்வுகளும், மேற்கோள் காட்டும் முன்மாதிரி தீர்ப்புகளுமே சரியான தீர்ப்பை வழங்குவதற்கு நீதிபதிக்கு உதவி செய்யும்.


இந்நிலையில் முதலில் பார்த்த வழக்கு, மேல்முறையீடு செய்யப்படும்போது உரியமுறையில் சரியான முன்மாதிரித் தீர்ப்புகளை மேற்கோள் காட்டி வாதிடும்போது நல்ல தீர்ப்பு கிடைக்கும் வாய்ப்பு இருக்கிறது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக