இந்தியாவின் தேசிய மனித
உரிமை ஆணையத்தின் அங்கீகாரத்தை ஐ.நா. அவை தற்காலிகமாக ரத்து செய்துள்ளது. தேசிய
மனித உரிமை ஆணையத்தின் கட்டமைப்பில், செயல்பாடுகளில் காணப்படும் குறைகள் காரணமாக
இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் தேசிய மனித
உரிமை ஆணையம்,
மனித உரிமைப் பாதுகாப்புச் சட்டத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டு
1993-ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது.
இதே 1993ம் ஆண்டில் ஐக்கிய
நாடுகள் அவை சார்பில் தேசிய மனித உரிமை ஆணையங்களின் உலகளாவிய கூட்டமைப்பு, தேசிய
மனித உரிமை ஆணையங்களை அமைப்பதற்கான பரிந்துரையை அளித்தது. “பாரிஸ் பிரின்சிபிள்ஸ்”
என்று அழைக்கப்படும் இந்த பரிந்துரைகளை ஐ.நா.சபையின் பொதுக்குழு அங்கீகரித்துள்ளது.
இந்தப் பரிந்துரைகளின்படி அமைக்கப்பட்டுள்ள தேசிய மனித உரிமை ஆணையங்களை மட்டுமே
ஐ.நா. அவை அங்கீகரிக்கிறது. இவ்வாறு அங்கீகரிக்கப்படும் தேசிய மனித உரிமை
ஆணையங்கள் மட்டுமே ஐ.நா. அவையின் மனித உரிமை கவுன்சிலிலும், ஐ.நா. அவையின் பொதுச்சபையிலும்
பங்கேற்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது
பாரிஸ் பிரின்சிபிள்ஸ்படி
தேசிய மனித உரிமை ஆணையத்தின் உறுப்பினர்களாக அரசு சாரா அமைப்புகள், இனரீதியான
ஒடுக்குமுறைக்கு எதிராக போராடும் அமைப்புகள், தொழிற்சங்கங்கள், வழக்கறிஞர்
அமைப்புகள், மருத்துவர் சங்கங்கள், பத்திரிகையாளர்கள், கல்வியாளர்கள், தத்துவ
நிபுணர்கள் உள்ளிட்ட பலதரப்பினரையும் நியமிக்க வேண்டும் என்று
பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மனித உரிமைத்
தளத்தில் பணியாற்றும் பல தரப்பினரும் இணைந்தால்தான் பல்வேறு தரப்பினரின் மனித
உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பாக தேசிய மனித உரிமை ஆணையம் செயல்படமுடியும் என்ற
கருத்தின் அடிப்படையில் இந்த பரிந்துரை செய்யப்பட்டது. ஆனால் இந்தியாவின் தேசிய
மனித உரிமை ஆணையமோ, அரசின் மற்றொரு அங்கமாக மட்டுமே செயல்பட்டு வருகிறது.
இதை ஐ.நா. அவை சார்பில்
வெளியிடப்பட்டுள்ள அறிக்கை வெளிப்படுத்துகிறது. இந்த அறிக்கையின்படி இந்தியாவின்
மனித உரிமை பாதுகாப்புச் சட்டமே குறையுடையதாக சுட்டிக்காட்டப்படுகிறது.
இந்தியாவின் தேசிய மனித
உரிமை ஆணையத்தின் தலைவராக ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, உறுப்பினராக
ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ஒருவர், ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி
ஒருவர் மற்றும் மனித உரிமைத்துறையில் அறிவும், அனுபவமும் பெற்ற இருவர் ஆகியோரை
நியமிக்க வகைசெய்யும் தேசிய மனித உரிமை ஆணையச் சட்டமே இதன் செயல்பாட்டுக்கு தடையாக
இருக்கிறது. நீதித்துறையில் உயர்பதவி வகித்து ஓய்வு பெற்றவர்களை மட்டுமே தேசிய
மனித உரிமை ஆணையத்தில் உறுப்பினராக வழிவகுக்கும் இந்த சட்டத்தால் தேவையான அளவில்
உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதில் சிக்கல் இருக்கிறது. இதன் காரணமாக கடந்த 2004ம்
ஆண்டுக்கு பிறகு இந்தப் பதவியில் பெண்கள் நியமனம் செய்யப்படவில்லை.
தேசிய பெண்கள் ஆணையம், தேசிய
சிறுபான்மையர் ஆணையம், தேசிய பட்டியல் இனத்தவர் ஆணையம், தேசிய குழந்தைகள் ஆணையம்
ஆகிய அமைப்புகளின் தலைவர்கள் தேசிய மனித உரிமை ஆணையத்தின் நிர்வாகத்தில் இடம்
பெறுவதாக கூறப்பட்டாலும், முக்கியமான ஆலோசனைக்கூட்டங்களில் இவர்கள் இடம்
பெறுவதில்லை. எனவே தேசிய மனித உரிமை ஆணையத்தில பல தரப்பினரும் இடம் பெற வேண்டும்
என்ற கொள்கை முறியடிக்கப்படுகிறது. ஆணையத்தில் 468 பணியாளர்கள் பணியாற்றும்
நிலையில் அவர்களில் 92 பேர் (20%) மட்டுமே பெண்கள்.
தேசிய மனித உரிமை ஆணையத்தின்
உறுப்பினர்கள் அனைவரும் பிரதமர், மக்களவை சபாநாயகர், மனிதவளத்துறை அமைச்சர்,
எதிர்கட்சித் தலைவர் உள்ளிட்ட அரசியல்ரீதியான தலைவர்களின் விருப்பப்படியே
நியமிக்கப்படுகின்றனர். இந்த நியமனங்களில் எந்த வெளிப்படைத்தன்மையும் இல்லை.
உறுப்பினர் பதவிக்கு தகுதியான நபர்களை வரவேற்கும் விளம்பரங்கள்
வெளியிடப்படுவதில்லை. உறுப்பினர்களாக நியமிக்கப்படுவர்களின் தகுதி குறித்து
வெளிப்படையாக தகவல்கள் வழங்கப்படுவதில்லை.
இந்தியாவின் தேசிய மனித
உரிமை ஆணையத்தில் சரத் சந்திர சின்ஹா என்ற ஐபிஎஸ் அதிகாரி உறுப்பினராக பணியாற்றி
வருகிறார். தேசிய மனித உரிமை ஆணையத்தின் உறுப்பினர்களாக அரசு சாரா அமைப்புகள், இனரீதியான
ஒடுக்குமுறைக்கு எதிராக போராடும் அமைப்புகள், தொழிற்சங்கங்கள், வழக்கறிஞர்
அமைப்புகள், மருத்துவர் சங்கங்கள், பத்திரிகையாளர்கள், கல்வியாளர்கள், தத்துவ
நிபுணர்கள் உள்ளிட்ட பலதரப்பினரையும் நியமிக்க வேண்டும் என்பது ஐ.நா. அவையின்
பரிந்துரை. ஆனால் இந்தியாவில் மிக அதிக அளவில் மனித உரிமை மீறல் புகார்களை அதிகம்
சந்திக்கும் காவல்துறையைச் சார்ந்த ஒருவரை மனித உரிமை ஆணையத்தின் உறுப்பினராக
நியமனம் செய்துள்ளது இந்திய அரசு. மனித உரிமைகளை பாதுகாப்பதில் இந்திய அரசுக்கு
இருக்கும் அக்கறையை விளக்கும் ஒரு உதாரண நடவடிக்கையாக இந்த நியமனத்தை பார்க்கலாம்.
தேசிய மனித உரிமை ஆணையத்தின்
செயல்பாடுகள் அரசு அமைப்புகளால் இடையூறு செய்யப்படாமல் தன்னிச்சையாகவும்,
சுதந்திரமாகவும் செயல்படுமாறு இருக்க வேண்டும் என்று பாரிஸ் பிரின்சிபிள்ஸ்
கூறுகிறது.
ஆனால், இந்தியாவின் தேசிய
மனித உரிமை ஆணையத்தின் பொதுச் செயலாளராக மூத்த ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் நியமிக்கப்படுகிறார்.
அதேபோல புகார்களை விசாரிக்கும் பிரிவின் இயக்குனராக டைரக்டர் ஜெனரல் ஆஃப் போலிஸ்
அந்தஸ்தில் உள்ள காவல்துறை அதிகாரி
நியமிக்கப்படுகிறார். இந்த இரண்டு பதவிகளுமே ஐ.நா. அவை பரிந்துரைக்கும்
கோட்பாடுகளுக்கு எதிரானவை.
மூத்த ஐஏஎஸ் அதிகாரியின்
தலைமையில் இயங்கும் மனித உரிமை ஆணையம் மற்றொரு வழக்கமான அரசு அலுவலகமாகவே
இயங்குகிறது. பெரும்பாலான மனித உரிமைமீறல் புகார்கள் காவல்துறைக்கு எதிராக வரும்
நிலையில், புகார்களை விசாரிக்கும் பிரிவின் இயக்குநராகவும், மற்ற பணிகளிலும்
காவல்துறை அதிகாரிகளே இருக்கும் நிலையில் தேசிய மனித உரிமை ஆணையத்தின்
செயல்பாடுகள் அனைத்தும் கேள்விக்குரியதாகின்றன. இது குறித்து தமது கவலையை பலமுறை
பதிவு செய்துள்ள ஐ.நா. அவை, மாற்று ஏற்பாடுகளை செய்யுமாறு பலமுறை இந்திய அரசை
வலியுறுத்தியுள்ளது. ஆனால் இந்தியா தரப்பில் எந்த முன்னேற்றமும் இதுவரை இல்லை.
மேலும் சுமார் 40 ஆயிரம்
புகார்கள் வழக்கு விசாரணையில் நிலுவையில் இருப்பதாக இந்தியாவின் தேசிய மனித உரிமை
ஆணையம் கூறுகிறது. மிக அதிக அளவிலான புகார்களை விசாரணை நிலையிலேயே வைத்திருப்பது
மிகவும் கவலைக்குரியது.
மேலும் தேசிய மனித உரிமை
ஆணையங்கள் ஆண்டறிக்கைகளை வெளியிடுவது அவற்றின் வெளிப்படையான செயல்பாட்டை
குறிக்கும் முக்கியமான அம்சமாகும். ஆனால் இந்தியாவின் தேசிய மனித உரிமை ஆணையமோ,
கடந்த 2011-2012 ஆண்டுக்கு பிறகு ஆண்டறிக்கைகளை வெளியிடவில்லை. கடந்த சுமார் 5
ஆண்டுகளாக ஆண்டு அறிக்கைகளைக்கூட வெளியிட முடியாத அளவில்தான் தேசிய மனித உரிமை
ஆணையத்தின் செயல்பாடுகள் அமைந்துள்ளன. எனவே இந்தியாவின் தேசிய மனித உரிமை ஆணையம்
என்பது ஒரு கண்துடைப்பு அமைப்பாக இருப்பதாக ஐ.நா. அவை சுட்டிக்காட்டியுள்ளது.
இத்தகைய குறைபாடுகளை
சுட்டிக்காட்டி இந்தியாவின் தேசிய மனித உரிமை ஆணையத்தின் அங்கீகாரத்தை வரும் 2017
நவம்பர்வரை புதுப்பிக்க முடியாது என்று ஐ.நா. அவையின் சார்பில் தேசிய மனித உரிமை
ஆணையங்களின் உலகளாவிய கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
1 கருத்து:
விரிவான தகவல்கள்
அருமை அய்யா
கருத்துரையிடுக